இந்தியாவை பகிரங்கமாக எதிர்த்ததுடன் வடக்கிற்கான துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அபிவிருத்தியில் இந்திய பங்களிப்பை, உதவிகளை நிராகரித்ததால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து இந்த இரு அமைச்சுக்களை பறிக்க அநுர அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததா?
கே.பாலா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிபீடமேறி ஓராண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த அரசின் அமைச்சரவை முதல் தடவையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன் புதிய அமைச்சர் ஒருவரும், புதிதாக 5 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பிமல் நிரோசன் ரத்நாயக்க வீரக்கோன் எனப்படும் ஜே .வி.பி.யின் தேசிய அமைப்பாளரும் சபை முதல்வரும் அமைச்சருமனான பிமல் ரத்னாயக்கவின் 4 அமைச்சுக்களில் முக்கிய இரு அமைச்சுக்கள் பறிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் பதவியை பெறுவதற்காக உள் வீட்டு கலகம் செய்து வருபவர், பாராளுமன்றத்தில் சர்வாதிகாரியாக செயற்படுபவர், சட்டவிரோதமாக 323 கொள்கலன்கள் விடுவிப்பு சர்ச்சையில் சிக்கியவர், குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்த ஜே .வி.பி.யில் தனது மனைவியையும் எம்.பி.யாக்கி அழகு பார்த்தவர், இந்தியாவுடன் பகையுடனும் வடக்கு அபிவிருத்தியில் இனவாத சிந்தனையுடனும் செயற்படுபவர் என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரரான பாராளுமன்ற சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவிடமிருந்து சர்ச்சைக்குரிய துறைமுகங்கள்,சிவில் விமான சேவைகள் ஆகிய இரு அமைச்சுக்கள் பறிக்கப்பட்டுள்ளமையே இன்றைய அரசியலில் பேசுபொருளாகியுள்ளது .
பிமல் ரத்நாயக்க ஜே .வி.பி.யின் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர். 2014 ஆம் ஆண்டில் ஜே .வி.பி.யின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் முதன் முதலாக ஜே .வி.பி.யின் வேட்பாளராக 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 4,240 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றம் சென்றார். பின்னர் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஜே .வி.பி.யின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு 116,736 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றம் சென்றார்.
2010, 2015 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் ஜே .வி.பி.யின் வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்ன தனது பதவியைத் துறந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக 2015 ஆம் ஆண்டு பிமல் ரத்நாயக்க தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 2024 ஆம் ஆண்டு பாராளுமன் றத் தேர்தலில் தேசியப்பட்டியல் எம்.பி.யாக கட்சியினால் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற சபை முதல்வராகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவரின் மனைவியான சமன்மாலி குணசிங்கவும் தற்போது அரசின் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ளார்.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலைத் தொடர்ந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிமல் ரத்நாயக்கவுக்கு பிரதமர் பதவியே இலக்காக இருந்தபோதும் ஜே .வி.பி.யின் பிரதியான தேசிய மக்கள் சக்தி மற்றும் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான ஹரிணி அமரசூரியவையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் பிரதமராக நியமித்துள்ள நிலையில் பாராளுமன்ற சபை முதல்வராகவும் அமைச்சராகவும் முக்கிய பதவிகள் பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டன.
எனினும் பிமல் ரத்நாயக்க பிரதமர் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டுமென ஜே .வி.பி.யின் சில முக்கியமானவர்களுடன் இணைந்து உள் வீட்டுக்கலகத்தில் ஈடுபட்டதுடன் தான் பிரதமராவேன் என்ற நம்பிக்கையில் சில கருத்துக்களையும் பாராளுமன்றத்திலும் பொது வெளிகளிலும் வெளியிட்டிருந்தார் .இது தொடர்பாக ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி மட்டத்தில் நடந்த சந்திப்பொன்றில் ” பாராளுமன்றத் தேர்தலில் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளில் பெரும்பான்மையானவை தேசிய மக்கள் சக்திக்குரிய வாக்குகள் என்பதினால் அக்கட்சி சார்பில் பிரதமராக ஹரிணி அமரசூரியவே தொடர்வார்”எனக்கூறி பிமல் ரத்நாயக்கவின் பிரதமர் பதவி ஆசைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முற்றுப்புள்ளி வைத்தார்.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறையிடும் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் உரிமைகளை பாராளுமன்றத்தில் சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க. முடக்கினார். அதுமட்டுமன்றி அமைச்சராகவும் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே நடந்து கொண்டார். இதனால் அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் கீழ் பணியாற்ற வந்த பல அதிகாரிகள் தமது பதவிகளை இராஜிநாமாச் செய்யும் நிலையும் தற்போது வரை தொடர்கின்றது. இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்,இலங்கைபோக்குவரத்துச் சபையின் தலைவர்,தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், இலங்கை ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் என்ற வரிசையில் இறுதியாக பிமல் ரத்நாயக்கவின் அமைச்சில் ஊடகச் செயலாளராக இருந்த சுரங்க லக்மல் செனிவிரத்ன இராஜிநாமா என இராஜிநாமாக்கள் தொடர்கின்றன.
இவ்வாறாக அவர் ஒரு சர்வாதிகாரியாக மட்டுமன்றி சர்ச்சைக்குரியவராகவும் உள்ளார். துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 323 கொள்கலன்களை எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவித்த சர்ச்சையில் துறைமுகங்கள் அமைச்சராகவுமிருந்த பிமல் ரத்நாயக்கவே பிரதான நபராக உள்ளார். நீண்ட காலமாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பினால் அநுரகுமார அரசு பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதுடன் எதிர்கட்சிகளினால் கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டும் வருகின்றது. அக்கொள்கலன்கள் சிலவற்றில் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதனுடன் மட்டும் அவர் நின்று விடவில்லை. சீன சார்புக் கொள்கையுடைய அவர் இந்தியாவை பகிரங்கமாகவே எதிர்த்தார். இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் முரண்பட்டிருந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்வு ,இராப்போசன விருந்துபசாரம் போன்றவற்றை ஜே .வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முக்கிய அமைச்சர்கள் புறக்கணித்தனர். அதில் இவரும் ஒருவர் .அதுமட்டுமன்றி கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி , அதானியின் கொழும்புமேற்கு துறைமுக அபிவிருத்தி ,திருகோணமலை துறைமுக மேம்பாடு குறித்தும் அதன் அறிவிப்பை இந்திய பிரதமர் வரும்போது வெளியிடலாமென்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டபோது அவற்றையெல்லாம் நிராகரித்து ,அப்படிச் செய்யமுடியாதென கூறி அந்த கூட்டத்தில் இருந்து ஜே .வி.பி.அமைச்சர் ஒருவர் வெளியிறியிருந்தார். தற்போது அந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க என்றே கூறப்படுகின்றது.
பலாலி விமான நிலையம்,காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி ஆகிய இரண்டையும்- நான்கு மாதத்திற்குள் நிறைவு செய்துகாட்டுவோம் என்று முன்னர் அறிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று இவை இரண்டையும் அபிவிருத்தி செய்ய மாட்டோம் என அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்தே பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் பாராளுமன்றத்திலும் இதனை உறுதிப்படுத்தினார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்திய உதவியாக வழங்க முன்வந்த 63 மில்லியன் டொலர்களையும் அவர் நிராகரித்தார். இதனால் சீனா கடன் வழங்கும் போது அதனை பெற்றுக்கொள்ளும் அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 63 மில்லியன் டொலரை வழங்க முன்வந்த போது அதனை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இந்திய விரோத செயற்பாடுகள் தொடர்பில் இந்திய தூதுவர் மட்டத்தில் ஜனாதிபதியிடம் முறைப்பாடுகள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னர் தற்போது துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவியேற்றுள்ள அனுர கருணாதிலகவுடன் இந்திய தூதுவர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அதனால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அமைச்சு பதவி பறிப்பில் இந்தியா பின்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் உள்ளன.
இந்தியாவுடன் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முரண்படும் நிலையை ஏற்படுத்தும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் ஆகிய இரு அமைச்சுக்களை அவரிடமிருந்து ஒருபக்கத்தால் பறித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மறுபக்கத்தால் அவரை அமைதிப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அமைச்சை வழங்கியுள்ளார்.எனவே 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்குமே அமைச்சரவையில் மாற்றம் மேற்கொண்டதாக அரசாங்கம் அறிவித்தாலும் இது அநுரகுமார அரசும் இந்திய அரசும் இணைந்து மேற்கொண்ட ”கிளீன் இந்திய எதிர்ப்பாளர்” நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது
























