குஜராத்தில் புதிய அமைச்சரவை காலையில் பதவியேற்றது. ஹர்ஷ் சங்வி துணை முதல்-அமைச்சராக பதவியேற்றார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் பூபேந்திர படேல் 2-வது முறையாக முதல்-அமைச்சர் பதவியை தக்க வைத்தார். அவரது அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 8 பேர் கேபினட் அந்தஸ்துடனும், மீதமுள்ளவர்கள் இணை அமைச்சர்களாகவும் இருந்தனர். பூபேந்திர படேல் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்த ஜகதீஷ் விஸ்வகர்மா இந்த மாத தொடக்கத்தில் மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார். மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் வசம் இருந்த பா.ஜ.க. தலைவர் பதவி, மாநில அமைச்சரிடம் வழங்கப்பட்டது. குஜராத் சட்டசபை 182 உறுப்பினர்களை கொண்ட நிலையில், மாநில அரசில் 27 பேர் அல்லது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக நேற்று காலையில் மாநில அரசு தகவல் வெளியிட்டது. அதற்கு வசதியாக முதல்-அமைச்சர் பூபேந்திர படேலை தவிர அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 16 அமைச்சர்களும் மாலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவை காலையில் பதவியேற்றது. ரிவாபா ஜடேஜா, ஸ்வரூப் தாக்கூர், பிரவின்பாய் மாலி, தர்ஷ்னா வகேலா, அர்ஜுன் மோத்வாடியா, ஜிதேந்திர வகானி உள்ளிட்ட 21 பேர் புதிய அமைச்சராக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் படேல், குன்வர்ஜி பவாலியா மற்றும் பர்ஷோத்தம் சோலங்கி ஆகிய நான்கு அமைச்சர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் முதல்-அமைச்சர் பூபேந்திர படேலை சேர்ந்து அமைச்சரவையின் அளவு 26 ஆக அதிகரித்துள்ளது.
சூரத்தைச் சேர்ந்த முக்கிய இளம் தலைவரும், குஜராத்தின் முன்னாள் உள்துறை இணை அமைச்சருமான ஹர்ஷ் சங்வி துணை முதல்-அமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் குஜராத் மாநில வரலாற்றில் குறைந்த வயதில் துணை முதல்-அமைச்சர் பதவியை வகிக்கும் நபர் என்ற அவர் பெருமையைப் பெற்றார். அவருக்கு வயது 40. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் அமைச்சராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
























