”இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்து இனப்படுகொலைகளையும் மத வன்முறைகளையும் செய்த பெருந்தேசியக் கட்சிகள் எவையும் தமது கட்சிப் பெயரில் இனத்தையோ, மதத்தையோ கொண்டிருந்ததில்லை. இன ,மத அடையாளங்களுடன் இருக்கும் கட்சிகளையும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் இன ,மத அடையாளங்கள் இல்லாத இந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியாளர்கள் இன .மத ரீதியாக அடக்கி,ஒடுக்கி, அழித்து வருவதே இலங்கையின் வரலாறு”
–கே.பாலா
இலங்கையில் இன,மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை உருவாக்குவதை,இயங்குவதனை தடை செய்ய வேண்டுமென்பதில் பேரினவாதிகள் விடாப்பிடியாகவுள்ளனர்.2009 இல் மஹிந்த ராஜபக்ச அரசு கொண்டு வரவிருந்த சட்டமூலம்,2015 ஆம் ஆண்டு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் முன் மொழிவு, அதே ஆண்டு வழக்கறிஞர் பிரசன்னா லால் டி அல்விஸ் தாக்கல் செய்த வழக்கு, 2020 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழுவின் கோரிக்கை என்ற வரிசையில் கடந்த 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் புதிய ஜனநாயக முன்னணியின் தற்போதைய தேசியப் பட்டியல் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்க கொண்டுவந்த தனிநபர் பிரேரணை வரை இலங்கையில் இன,மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தடை செய்யும் சூழ்ச்சி தொடர்கின்றது.
இலங்கையில் இன , மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை உருவாக்குவதை, இயங்குவதனை தடை செய்யும் வகையில் ஏற்கனவே பேரினவாத அரசுகளும் அமைப்புகளும் தனிநபர்களும் கொண்டுவந்த சட்டமூலங்கள், பிரேரணைகள். முன்மொழிவுகள், வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரித்து தள்ளுபடி செய்த நிலையில் தற்போது ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் புதிய ஜனநாயக முன்னணியின் தற்போதைய தேசியப் பட்டியல் எம்.பி.யும் கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடும்போது தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுபவருமான ரவி கருணாநாயக்க முன்வைத்த தனிநபர் பிரேரணை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அப் பிரேரணையை ஒழுங்குப்பத்திரத்தில் இருந்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நீக்க வைத்துள்ளன.
இலங்கையில் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள், அமைச்சுக்கள்,பாடசாலைகள், அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற இனவாதக் குரல்கள் சிங்கள கடும்போக்குவாத அரசியல்வாதிகளிடமிருந்து ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற கோஷத்துடன் மஹிந்த ராஜபக்ச ,கோத்தபாய ராஜபக்ச அரசுகளில் தான் பலமாக ஒலித்திருந்தன. இலங்கையில் இன ,மத ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுவதனாலும் இலங்கையர்கள் இனம்,மதம் ,மொழி எனப் பிரிந்து கிடப்பதனாலும் இவை தடை செய்யப்பட வேண்டுமென்ற வாதம் இவர்களினால் முன் வைக்கப்பட்டது.
இலங்கையில் இன .மத பெயர்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும். பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு அமைச்சு தேவையில்லை. எல்லா மதங்களுக்கும் ஒரு அமைச்சர் இருந்தால் போதும் . சிங்களப் பாடசாலை, தமிழ் பாடசாலை, இந்துப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலை, கிறிஸ்தவப் பாடசாலை என ஒவ்வொரு இனத்துக்கும் மதத்திற்கும் பாடசாலைகள் தனித்தனியே தேவையில்லை. அனைத்தையும் ஒன்றாக்க வேண்டுமென்பதே ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற போர்வையில் சிங்கள கடும்போக்குவாதிகளினால் மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய அரசுகளில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அவர்களின் முயற்சிகள், சூழ்ச்சிகளுக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்க மறுத்ததினால் அதன்பின்னர் அந்த விடயம் அடங்கியிருந்த நிலையில்தான் தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் புதிய ஜனநாயக முன்னணியின் தற்போதைய தேசியப் பட்டியல் எம்.பி.யு மான ரவி கருணாநாயக்க இலங்கையில் இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை உருவாக்குவதை தடைசெய்ய வேண்டும். தற்போது மதம் , இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற தனி நபர் பிரேரணையை கொண்டுவந்து சிறுபான்மையினக் கட்சிகளான தமிழ் , முஸ்லிம் கட்சிகளுக்கு ஒரு அச்சுறுத்தல் நிலையை மீண்டும் ஏற்படுத்த முயன்றுள்ளார் .எனினும் இந்த முயற்சிக்கு உடனடியாகவே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை உதாரணமாக வைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தற்காலிகத் தடைபோட்டுள்ளனர்.
இன,மத,மொழி, சமூகஅடையாளங்களோடு அரசியல் கட்சிகள்இயங்குவதைத் தடை செய்ய மஜிந்த ராஜபக்ச அரசில் சட்டம் மூலம் ஒன்று 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டு வரப்பட்ட போது எதிர்கட்சியிலிருந்த மங்கள சமரவீர ஒரு வழக்கையும் தமிழரசுக்கட்சியின் செயலாளராக விருந்த மாவை சேனாதிராஜாவும் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து ஒரு வழக்கையும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் அப்போதைய சட்டமா அதிபர் தேர்தல் திருத்தச் சட்டத்தில் மேற்படி மத, மொழி, சமூக பெயர் அடையாளங்களோடு அரசியல் கட்சிகள் இயங்கக் கூடாது என்ற விடயம் சட்ட மூலத்திலிருந்து விலக்கப்படும்என உயர் நீதிமன்றுக்கு வாக்குறுதி வழங்கினார்.
இவ்வாறு மஹிந்த ராஜபக்ச அரசு விலக்கிக்கொண்ட விவகாரத்தை மீண்டும் சட்டமாக்கவே ரவி கருணாநாயக்க முயற்சித்த நிலையில் அந்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்தே தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அதனை தாற்காலிகமாகத் தடுத்துள்ளனர்.
பிரித்தானிய ஆட்சியுடன் ஆரம்பிக்கும் இலங்கையின் அரசியற் கட்சிச் செயற்பாடுகள் சுதந்திரத்தின் பின்னர் இன, மத ரீதியான காரணங்களுடன் முனைப்புப் பெற்றன.இலங்கையின் பிரதான கட்சிகளும் சிங்கள தேசியவாத கட்சிகளும் பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்படுகின்றன. தேரவாத பௌத்த தலைமைகள் மதத்தலைவர்களாக மட்டுமல்லாது பெரும்பான்மை இன அரசியற் கட்சிகளை வழிநடத்தும் சக்தியாகவும் இயங்கி வருகின்றனர். அதேபோல் சிறுபான்மையினக் கட்சிகள் தமது இன,மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இன,மதத்தினை தமது கட்சியின் கொள்கைகளில் உள்வாங்குகின்றனர்.
இலங்கையின் தேர்தல் செயலகத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கடசிகளில் 15 க்கு மேற்பட்ட கட்சிகள் தமிழ், முஸ்லிம்,மலையக இன ,மத அடையாளங்களுடனும் மூன்று வரையான கட்சிகள் சிங்கள இன அடையாளங்களுடனும் உள்ளன. குறிப்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் தமிழின அடையாளத்துடனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் முஸ்லிம் இன அடையாளத்துடனும் உள்ளன. இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி ,மலையக மக்கள் முன்னணி என்பவை பங்காளிக் கட்சிகளாகவும் உள்ளன. சிங்களக்கட்சிகளிலும் இன,மத அடையாளங்கள் கொண்ட கட்சிகள் உள்ளன.
இவ்வாறு இலங்கையின் அரசியற் கட்சிகளின் தோற்றதிலும் வளர்ச்சியிலும் இனம். மதம் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது . இது இலங்கையில் இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் காரணியாகவும் மாறியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் ஆட்சி அதிகாரத்தினைத் பெற்றுக் கொள்வதோடு அதனை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டான அரசியல் ஆதாயத்திற்கு இன,மத அடையாளங்கள் அரசியற் கட்சிகளின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
இவ்வாறான நிலையில் இலங்கையில் இன .மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டால் தமிழ், முஸ்லிம், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மையினக் கட்சிகள்தான் பாதிக்கப்படும் . அதேவேளை இன,மத அடையாளங்களுடன் இயங்கும் இந்த சிறுபான்மையினக் கட்சிகள் இந்த இன,மத அடையாளங்களுடன் இல்லாத அரசியல் கட்சிகள் செய்யாத எதனை செய்து விட்டன என்பதற்காக தடை செய்யப்பட வேண்டும் என்ற கேள்வியும் பலமாக எழுகின்றது.
இன அடையாளம் இருந்தால் இனவாதம் பேசுவார்கள், மத அடையாளம் இருந்தால் மதவாதம் பேசுவார்கள் என்றால் இவ்வாறு இன அடையாளம் இல்லாத கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 1983 ஜூலை 23 ஆம் திகதி தமிழ் மக்களுக்கு எதிராக இனக்கலவரம் செய்யவில்லையா?
அதனைத்தொடர்ந்து பல வருடங்களாக இனப்படுகொலைகள் செய்யவில்லையா? ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு என்ற பெயரைக்கொண்ட கட்சிகள் நடத்திய யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லையா?
ஏன் தற்போது ஆட்சிபீடத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரைக்கொண்ட கட்சி (ஜே .வி.பி.) அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லையா? தம்மினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்யவில்லையா? அல்லது இந்தக்கட்சிகள் இனவாதம், மதவாதம்தான் பேசவில்லையா? தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியின் கொள்கையே இனவாதம்தானே? எனவே இலங்கையில் இன. மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்படவேண்டுமென்பதும் ஒரு இன, மதவாதம்தான் என்பதே தமிழ்,முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் கருத்து.
எனவே இலங்கையில் அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள இன, மத அடையாளங்களுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இன, மத அடையாளங்களுடன் இருக்கும் கட்சிகளையும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் இன , மத அடையாளங்கள் இல்லாத அரசியல் கட்சிகளின் ஆட்சியாளர்கள் இன .மத ரீதியாக அடக்கி, ஒடுக்கி, அழித்து வருவதே இலங்கையின் வரலாறாக உள்ளதால் இலங்கையில் இன ,மத ரீதியிலான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்களும் இன, மத ரீதியிலானவையே.
இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்த பெருந்தேசியக் கட்சிகள் எவையும் தமது கட்சிப் பெயரில் இனத்தையோ, மதத்தையோ கொண்டிருந்ததில்லை. பெருந்தேசியவாதத்துக்கும் பேரினவாதத்துக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்த சிறுபான்மையினக் கட்சிகளும், சில உதிரி பெருந்தேசியவாத, பேரினவாதக் கட்சிகளும்தான், தமது கட்சிப் பெயரில் இனம் அல்லது மதம் தொடர்பான பெயர்களைக் கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்தத் தடைமுயற்சி , சிறுபான்மையினக் கட்சிகளைக் குறிவைத்ததாகவே இருக்கிறது .
மனித வாழ்வின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக, எண் கணித சாஸ்த்திரத்தின்படி பெயரை மாற்றி அமைத்துவிட்டால், பிரச்சினை களுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை போன்றதே இந்த இனம், மதம் தொடர்பான பெயர்களைக் கட்சிப் பெயர்களில் கொண்ட கட்சிகளைப் பதிவு செய்யாமல் விடுவதன் மூலம், இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும். இந்தப் பெயர்த்தடை முயற்சி என்பது, எப்படி இருக்கிறதென்றால், உள்ளே எத்தகைய கொடும் தேசியவாத, இனவாதச் சிந்தனைகளும் இருக்கலாம். ஆனால், பெயர் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘றோமியோ அன்ட் ஜூலியட் ’இல் ஓர் வரி வருகிறது. ‘What’s in a name? that which we call a rose by any other name would smell as sweet’ – ‘பெயரில் என்ன இருக்கிறது? நாம் ரோஜா என்று அழைப்பதை வேறு எந்தப் பெயர்கொண்டு அழைப்பினும் அது இனிய மணத்தையே கொண்டிருக்கும்’ என்பதே அந்த வரி . எனவே, ஒரு பொருளின் பெயரை மாற்றுவது, அதன் தன்மைகளை மாற்றாது. இதனை நன்கு தெரிந்தும் சிங்கள பேரினவாதிகள் இலங்கையில் இன,மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை உருவாக்குவதை,இயங்குவதனை தடை செய்ய வேண்டுமென்பதில் விடாப்பிடியாக நிற்பதுதான் அப்பட்டமான இன ,மதவாதம்
























