அரசாங்கம் தென்னிலங்கையில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் வேலைகளைக் கச்சிதமாகச் செய்து வருகிறது. போதைப் பொருளுக்கு எதிரான யுத்தமும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு எதிரான யுத்தமும் வெகுஜனக் கவர்ச்சிமிக்க விறுவிறுப்பான சாகசப் படங்கள்போல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஒருபுறம் போதைப்பொருள் கிடங்குகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. போதைப்பொருள் வலைப்பின்னலோடு தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதைத்தான் முன்பு இருந்த அரசாங்கம் “ஒபரேஷன் யுக்திய” என்று பெயரிட்டு போதைப் பொருள் குற்றவாளிகளை வேட்டையாடியது. பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அங்கு போதைப்பொருள் வலைப்பின்னலை முடக்குவதற்கு எடுத்த நடவடிக்கைகளைப் போல யுக்தியை நடவடிக்கையிலும் என்கவுண்டர்கள் இடம்பெற்றதாக மனித உரிமை அமைப்புக்கள் விமர்சித்தன.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகம் உயிர்ச்சேதம் இன்றி போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. ஒருவிதத்தில் இது யுக்திய நடவடிக்கையின் கனிகளைத் தனதாக்கும் தந்திரந்தான். கடந்த பல வாரங்களாக அடிக்கடி போதைப் பொருள் கிடங்குகள் முற்றுகையிடப்படும் காட்சிகளும் பெருந்தொகையான போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் காட்சிகளும் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அப்படித்தான் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையும் நாடகத் தனமாக, சாகசங்கள் நிறைந்த வீரச் செயலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தப்பிச்சென்ற பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ஒளிந்திருக்கும் நாடுகளில் கைது செய்யப்படுகிறார்கள். அவ்வாறு நாடு கடந்து பாதாள உலகக் கும்பல்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரும் காட்சிகள் சினிமாப் படம்போல ஊடகங்களில் காட்டப்படுகின்றன. அரசாங்கம் தொடர்ச்சியாகப் பாதாள உலகக் கும்பல்களின் கழுத்தை இறுக்கிப் பிடித்து வருகிறது.
இந்த நடவடிக்கைகள் யாவும் டிஜிட்டல் புரோமோஷன் ஊடாக அவை மக்களை வந்தடைகின்றன. அதன் மூலம் போதைப் பொருட்களைக் கைப்பற்றுவதும் பாதாள உலகக் கோஷ்டிகளைக் கைது செய்வதும் வெளிநாடுகளில் அவர்களைக் கைது செய்வதும் அவர்களை நாட்டுக்குள் அழைத்து வரும் காட்சிகளும் கவர்ச்சி மிக்க காணொளிகளாக தொடர்ச்சியாகக் காட்டப்படுகின்றன.இந்த விடயத்தில் அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியானது இலத்திரனியல் பிரச்சாரத்தை பலமாக முன்னெடுத்து வருகிறது.
மேற்படி டிஜிட்டல் புரோமோஷனில் மற்றொரு நுட்பமான பகுதியும் உண்டு. அது என்னவென்றால் குற்றவாளிகளுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற, குறிப்பாக குற்றக் குழுக்களால் விலைக்கு வாங்கப்பட முடியாதவர்கள் என்று கருதப்படுகின்ற காவல்துறை அதிகாரிகள் இந்த டிஜிட்டல் பிரச்சாரக் களத்தில் கதாநாயகர்களாகக் கட்டி எழுப்பப்படுகின்றார்கள். இது நேர்மையான,துணிச்சலான போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு ஒரு புறம் பிரபல்யத்தைக் கொடுக்கின்றது. இன்னொருபுறம் அவர்களை முன்னுதாரணங்களாக மாற்றும் பொழுது அவர்களைப்போல தாங்களும் தொழிலில் சுத்தமாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்று கருதும் போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு அது உற்சாகத்தைக் கொடுக்கின்றது.
இந்த நடவடிக்கைகளில் தேசிய மக்கள் சக்தியின் செயல் திறன் என்பது வழமையான பாரம்பரியமான கட்சிகள் நடந்து கொள்வதைப் போன்றது அல்ல. மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபி முதலாவதாகவும் முக்கியமாகவும் ஒரு கட்சி அல்ல. ஒரு அரசியல் இயக்கம். எனவே அதற்கு ஓர் அரசியல் இயக்கத்தைப் போன்று அடிமட்ட மக்கள் மத்தியில் பலமான வலைக் கட்டமைப்பு உண்டு. அதுபோலவே அதன் செயற்பாடுகளிலும் ஒரு அரசியல் இயக்கத்துக்குரிய விரைவும் தேர்ச்சியும் இருக்கும்.எனவே பாதாள உலக வலைப் பின்னாலையும் போதைப் பொருள் வலைப் பின்னலையும் மணந்து பிடிக்க உதவும் அடிமட்டக் கட்டமைப்பு ஜேவியிடம் உண்டு. இதனால்,போதைப் பொருள் வலைப் பின்னல், பாதாள உலக வலைப் பின்னல் என்பவற்றை முடக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் சாகசத் தனமாக முன்னேறி வருகிறது. இது எதிர்க்கட்சிகளை மறைமுகமாக முடக்கக் கூடியது.
எவ்வாறெனில், இலங்கைத் தீவின் கடந்த சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலான அரசியல் என்பது அதாவது இனப்பிரச்சினையின் அரசியல் என்பது தீவின் ஒட்டுமொத்த அரசியலையும் குற்றப் பண்புடையதாக மாற்றியிருக்கிறது. விளைவாக தென்னிலங்கையில் உள்ள ஒருபகுதி அரசியல் பிரமுகர்களுக்கு பாதாள உலகத்தில் நிழல் உண்டு.அதாவது பாதாளக் குழுக்களோடு அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் உறவுகளைப் பேணி வந்திருக்கின்றார்கள். இதனால் தென்னிலங்கையில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் நிழலாக பாதாள உலகத் தலைவர்கள் காணப்படுகிறார்கள்.அரசாங்கம் இப்பொழுது அந்த நிழல்களைக் கண்டுபிடித்து நசுக்கத் தொடங்கிவிட்டது. நிழலை நசுக்கும் பொழுது நிஜத்துக்கு அச்சம் ஏற்படும். அரசாங்கம் தன்னை நெருங்கிவிடும் என்று குற்றப்பின்னணி கொண்ட எல்லா அரசியல்வாதிகளும் பயப்படும் ஒரு நிலைமை தோன்றும்.
அண்மையில் நாமல் ராஜபக்ச “எந்தவித குற்றங்களோடும் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே எமது பொதுஜன பெரமுனவில் எதிர் வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படும்”என்று தெரிவித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.அதாவது குற்றப் பின்னணியை உடையவர்களை நாங்கள் கட்சிக்குள் வைத்திருக்க மாட்டோம் என்று ராஜபக்சக்கள் வெளிப்படையாகக் கூறவேண்டிய ஒரு நிர்பந்தத்தை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.இது அவர்களுடைய ஊழலுக்கு எதிரான அரசியலில் குற்றப் பின்னணி கொண்ட அரசியலுக்கு எதிரான அரசியலில் கிடைத்த ஒரு வெற்றிதான். இதுபோன்ற நடவடிக்கைகளின்மூலம் அவர்கள் நாடாளுமன்றத்தில் தங்களுக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தொடர்ந்தும் தக்கவைக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால் மேற்கண்ட கைது நடவடிக்கைகள் எவையும் போர்க் குற்றம் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதை தமிழ் மக்கள் உற்றுக் கவனித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு ஆதரவு வளர்ந்திருக்கிறதா இல்லையா என்பதை மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தினால் கண்டுபிடித்து விடலாம்.ஆனால் மாகாண சபைத் தேர்தல் இப்போதைக்கு நடக்குமா?
கடந்த சில மாதங்களாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் ஈபிஆர்எல்எப் கட்சியானது 13ஆவது திருத்தத்தைக் குறித்தும் மாகாண சபைகளை ஆதரித்தும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இக்கருத்தரங்குகளின் பின்னணியில் வரதராஜப்பெருமாள் இருக்கிறார் என்ற ஊகம் இருந்தது. ஏனென்றால் வரதராஜப்பெருமாள் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் காணப்படும் கட்சித் தலைவர்களை ஏற்கனவே சந்தித்திருக்கிறார். ஆனால் கடந்த வாரம் அவர் வெளிப்படையாக பகிரங்கமாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களோடு காணப்பட்டார். மாகாண சபைத் தேர்தல்களைக் கூடிய அளவு விரைவில் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது அவர்களுடைய நோக்கமாகத் தெரிகிறது.
இது அவர்களுடைய நோக்கமா? அல்லது இந்தியாவின் நோக்கமா? என்ற சந்தேகம் உண்டு. ஏனென்றால் இந்தியா மாகாண சபைகளை தன்னுடைய அடைவாகப் பார்க்கின்றது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் விளைவு தான் மாகாண சபைகள்.எனவே இனப்பெருச்சினைக்கு தான் தீர்வாக முன்வைத்த மாகாண சபைகளை தொடர்ந்து இயங்கு நிலையில் வைத்திருக்க இந்தியா விரும்பும்.அண்மையில் ஐநா கூட்டத்தொடரில் மாகாண சபை தேர்தல்களை வலியுறுத்தியும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரியும் இந்தியப் பிரதிநிதி பேசியிருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். ஐநாவின் அண்மைய தீர்மானத்திலும் அது இணைக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியா மாகாண சபைத் தேர்தல்களை வேகமாக நடத்த வேண்டும் என்று கருதுவதாக எடுத்துக் கொள்ளலாமா?
ஏனென்றால் அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமாக இருந்தால் அந்த யாப்புக்குள் மாகாண சபைகள் இருக்காது என்பது மட்டும் தெரிகிறது.அண்மையில் சுவிற்சலாந்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது அரச பிரதிநிதி இனப்பிரச்சினைக்குத் தீர்வாக “எக்கிய ராஜ்ஜிய” இடைக்கால வரபைப்பற்றி பேசியிருக்கிறார். இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் அரச பிரதிநிதியும் துறைசார் நிபுணர்களும் சுவிற்சலாந்தில் நடந்த ஒரு சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அது இனப்பிரச்சினைக்கான தீர்வு, சமஸ்டி முதலான விடையங்களைக் குறித்து ஆராய்வதற்கான ஒரு சந்திப்பாகும். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளும் அங்கே இருந்தார்கள். இந்தச் சந்திப்பில் அரச பிரதிநிதி மேற்கண்டவாறு பேசியுள்ளார்.
ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ஜிய” இடைக்கால வரைபு ஆனது அப்பொழுது தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்த கூட்டமைப்பின் பங்களிப்போடுதான் உருவாக்கப்பட்டது. அதாவது அந்த இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணையும் உண்டு என்று அரசாங்கம் கூறுகின்றது.அப்பொழுது கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தரின் வழிநடத்தலின் கீழ் சுமந்திரன் முன்னணியில் நின்று அப்புதிய யாப்பை உருவாக்கும் பணிகளில் பங்களிப்பைச் செய்தார். அதனால் அந்த இடைக்கால வரைபு தன்னுடைய குழந்தை என்றும் சுமந்திரன் கருதக்கூடும். அதுமட்டுமல்ல அந்த இடைக்கால வரைபுக்குப் பங்களிப்புச் செய்த கட்சிகளில் ஜேவிபியும் அடங்கும்.எனவே அது ஜேவிபியின் குழந்தையும்தான். இப்படிப் பார்த்தால் தானும் சேர்ந்து உருவாக்கிய ஒர் இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டத்திற்குக் கொண்டு போக தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என்று கஜேந்திரகுமார் சந்தேகிக்கின்றார்.
இதில் தேசிய மக்கள் சக்தி மேலும் ஒரு விடயத்தை கூறுகிறது. என்னவென்றால் அந்தப் புதிய யாப்புக்கான இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணை இருப்பதைப் போலவே இப்பொழுது தனக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று. அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தனக்கும் ஆணை வழங்கி இருப்பதினால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் தனக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் செயற்பட முடியும் என்று தேசிய மக்கள் சக்தி கூறிவருகிறது.
அது ஓர் இடைக்கால வரைபுதான்.அதனை ஒரு புதிய யாப்பாக வரைந்து அதன் பின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். தேசிய மக்கள் சக்திக்கு அந்த பெரும்பான்மை உண்டு. எனவே அது நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால், அடுத்த கட்டம் பொதுஜன வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த அடிப்படையில் சிந்தித்தால், அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஈடுபடப் போகிறது என்று கஜேந்திரகுமார் எச்சரிக்கிறார்.
ஆனால் கடந்த வாரம் வரையிலும் அவரோடு கூட்டில் இருந்த சுரேஸ் பிரேமசந்திரனைப் போன்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அவ்வாறு கருதவில்லை என்று தெரிகிறது. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நடத்துவதில்தான் நாட்டமாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விடவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினால் இந்தியாவையும் சமாளிக்கலாம் தமிழ்க் கட்சிகளையும் சமாளிக்கலாம். அதில் கஜேந்திரக்குமார் மட்டும்தான் பிரச்சினையாக இருப்பார். ஆனால் அவருடைய கட்சியும் மாகாண சபைத் தேர்தலில் ஈடுபடும் என்று தெரிகிறது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று புறப்பட்டால் அது இலங்கைத் தீவின் இன முரண்பாட்டு அரசியலில் அதிகம் ரிஸ்க்கானது. அப்படி ஒரு ரிஸ்கை எடுப்பதற்கு அனுர அரசாங்கம் தயாரா?
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை முதலில் வைக்குமா? அல்லது இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கி ஒரு புதிய யாப்பை வரையும் வேலையை முதலில் செய்யுமா? என்பது இப்பொழுது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் தங்களுக்கு இடையே வேறுபட்ட பார்வைகளைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பின் ஏற்பட்ட புதிய கூட்டுக்குள் சைக்கிள் முன்னணியோடு சங்கு இணைந்திருந்தது. ஆனால் கடந்த வாரம் சங்குக்கும் சைக்கிளுக்கும் இடையிலான உறவு இக்கட்டுரைகளில் ஏற்கனவே கூறப்பட்டது போல பெருமளவுக்கு ஈடாடத் தொடங்கிவிட்டது. கஜன்– சுரேஷ் ஆகியோரின் ஊடக வெளிப்பாடுகள் அதைத்தான் காட்டுகின்றன.
மாகாண சபைத் தேர்தல் நடக்குமாக இருந்தால் அதில் சைக்கிளைத் தனிமைப்படுத்தும் விதத்தில் ஒரு கூட்டை உருவாக்க சுமந்திரன் முயற்சிக்கலாம். சங்கு,மணிவண்ணன் ஆகியோரை அவர் அதற்குள் இணைக்க முயற்சிக்கலாம். அதாவது மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று நடக்குமாக இருந்தால் அது தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மையை பிரதிபலிக்கும் ஒரு தேர்தலாகவே அமையக்கூடும்.அது இக்கட்டுரைகளில் திரும்பத் திரும்ப கூறப்படுவது போல வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்குள் தனது கால்களைப் பலமாக ஊன்றலாம் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை ஊக்குவிக்கக் கூடியது.
























