யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடன்படவில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைத் தேசிய நெறிமுறைகளினூடாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றது… வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும், அந்த செயன்முறையானது, உள்ளக செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும். இந்த விடயங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விசாரணைகளை அரசாங்கம் எதிர்க்கின்றது….. அந்தவகையில் நம்பகமான உள்நாட்டு பொறிமுறையினூடாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது..”
இவ்வாறு தெரிவித்திருப்பவர் பிரதமர் ஹரிணி அமரசூரிய. கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது, ஹரிணி மேற்கண்டவாறு பதில் கூறியுள்ளார்.
ஹரிணி. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஒப்பீட்டளவில் ஜேவிபி பாரம்பரியத்தில் வராத, லிபரல் என்று கருதப்படும் ஒரு புத்திஜீவி. அவருடைய கருத்தே இதுதான் என்றால் ஜேபிபியின் கருத்து எப்படியிருக்கும்?
உள்நாட்டு நீதியைப் பற்றிய உரையாடல் எங்கிருந்து தொடங்குகிறது? தமிழ் மக்கள் பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்று கேட்பதினால்தான் அரசாங்கம் அவ்வாறு கூறுகிறது. தமிழ் மக்கள் ஏன் பான்னாட்டு நீதிப் பொறிமுறையைக் கேட்கின்றார்கள்? ஏனென்றால் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் மீது அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டதனால்தான் அவ்வாறு கேட்கிறார்கள்.
தமிழ் மக்கள் மட்டும் உள்நாட்டு விசாரணை பொறிமுறை மீது நம்பிக்கை இழக்கவில்லை. முழு நாடுமே இலங்கைத் தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் மீதும் பொலிஸின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டது என்பதைத்தான் அண்மையில் நிகழ்த்தப்பட்ட கள ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியிருப்பதாக லஞ்சம் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஆணைக் குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக் குழுவின் தலைவர் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவிக்கும் போது,நாட்டில் உள்ள 10 அரச நிறுவனங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார். அந்த பத்து நிறுவனங்களில் முதலாவதாக போலீஸ் காணப்படுகிறது. அந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக நீதிபரிபாலான கட்டமைப்பும் காணப்படுகின்றது. இவ்வாறு நாட்டில், மக்கள் மத்தியில் லஞ்சம், ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக மதிப்பிழந்துபோன அரசுத் திணைக்களங்களை வைத்துக்கொண்டு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமூலம் பொறுப்புக் கூறலை முன்னெடுக்கப் போவதாக அரசாங்கம் கூறி வருகின்றது.
இத்தனைக்கும் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான ஐநா தீர்மானமானது உள்நாட்டு விசாரணை பொறிமுறையின் போதாமையை ஏற்றுக்கொண்டதன் விளைவுதான். உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை போதுமாக இருந்தால் ஏன் நிலை மாறு கால நீதி என்ற ஐநாவின் ஏற்பாட்டைக் குறித்து சிந்திக்க வேண்டி வந்தது ? நிலை மாறுகால நீதி என்பது தமிழ் நோக்கு நிலையில் பலவீனமானது. அது வென்றவர்களால் தோற்றவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நீதியாகத்தான் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னரான நுரம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி கம்பூச்சியாவின் விசேஷ தீர்ப்பாயங்கள் வரையிலும் எல்லாவற்றிலும் நிலைமாறு கால நீதி என்பது நடைமுறையில், வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் நீதியாகவே காணப்படுகிறது.
எனினும் இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறக்கான அதாவது நிலை மாறுகால நீதிக்கான தீர்மானம் எனப்படுவது ஒரு வகையில் இலங்கைத் தீவின் உள்நாட்டு விசாரணை பொறிமுறையின் போதாமையின் விளைவுதான். ஏனென்றால் உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறை பொருத்தமானதாக இருந்திருந்தால் ஏன் ஐநாவின் ஏற்பாடாகிய நிலை மாறு கால நீதியைக் குறித்துச் சிந்திக்க வேண்டி வந்தது? உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் இயலாமை அல்லது போதாமையின் விளைவுதான் நிலை மாறு கால நீதி என்ற ஐநா ஏற்பாடு ஆகும்.
அப்பொழுது இருந்து ரணில் மைத்திரி அரசாங்கம் நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்கியது. அப்பொழுது அவர்கள் ஹைபிரிட் விசாரணைக் கட்டமைப்புக்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால் இப்பொழுது முழுக்க முழுக்க உள்நாட்டு விசாரணை பொறிமுறைதான் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுகிறது.
அனுர அரசங்கமானது கடந்த ஓராண்டு காலத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்திருக்கின்றது .இந்தக் கைது நடவடிக்கைகளுக்குள் முன்னாள் ஜனாதிபதியும் உட்பட முக்கிய அரசியல்வாதிகள், படைத்தரப்பு பிரதானிகள், காவல்துறை பிரதானிகள், பாதாள உலகத்தவர்கள், போதைப்பொருள் குற்றவாளிகள் போன்ற பல வகையினரும் அடங்குவர். அண்மை மாதங்களாக அரசாங்கம் போதைப் பொருள் குற்றங்களுக்கு எதிராகவும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.பாதாள உலகக் குற்றக் கும்பல்களோடு தொடர்புடைய இஷாரி செவந்தி என்ற பெண் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.இவரோடு தமிழர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அரியாலை,கிளிநொச்சி ஆகிய இடங்களில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செவ்வந்தியின் கைது நடவடிக்கையின் பின்னரான செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. சிங்களப் பாதாள உலகக் கும்பல்கள் வடக்குக் கிழக்குக்கும் விரிவடைந்துவிட்டன. இதில் தமிழர்களும் சம்பந்தப்படுகிறார்கள்.
செவ்வந்தியோடு கைது செய்யப்பட்ட ஒரு பெண் தென்மராட்சியைச் சேர்ந்தவர். அவர் போரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. அவருடைய பெற்றோர் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டவர்கள். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள். இந்த பின்னணிக்குள்தான் அந்தப் பெண் வளர்ந்திருக்கிறார். அதாவது பாதிக்கப்பட்ட குடும்பம்.தன் சொந்த திருமண வாழ்விலும் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் வெளிநாடு போவதற்கு முயற்சித்து இருக்கிறார்.
தமிழ் மக்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்வதற்கு உதவும் ஏஜென்ட்கள் பெருமளவுக்கு பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள்தான். போர்க்காலத்திலும் அதுதான் நிலைமை. 2009 க்குப்பின்னரும் அதுதான் நிலைமை. தென்மாராட்சியைச் சேர்ந்த பெண்ணும் அந்த அடிப்படையில்தான் பாதாள உலகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்குள் இருந்து வந்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
செவ்வந்தி கைது செய்யப்பட்ட பின் கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் சிங்களப் பாதாள உலகக் கட்டமைப்பு தமிழ்ப் பகுதிகளுக்கும் விரிவடைந்து விட்டது.இது தற்செயலானதா அல்லது திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதா?
பாதாள உலகக் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளின் கட்டமைப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.அதுமட்டுமல்ல இவற்றுக்குள் முன்னாள் படைவீரர்கள் இப்பொழுதும் சேவையில் இருக்கும் படையாட்கள், அரச உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்ற பலரும் அடங்குவர் என்று தெரிகிறது.உதாரணமாக அண்மையில் வெளிவந்த ஒரு செய்தியின்படி, மல்லாவியில் உள்ள படை முகாம் ஒன்றைச் சேர்ந்த ஒரு படை அதிகாரி படையினருக்கு கொடுக்கப்பட்ட ரவைகளை குற்றக் கும்பல்களுக்கு விற்றிருக்கிறார் என்று கூறப்பட்டது. செவ்வந்தி கைது செய்யப்பட்ட பின் நடந்த விசாரணைகளின்போது முன்னாள் படை வீரர்கள் பாதாள உலகங்களோடு சம்பந்தப்படுவது தொடர்பான தகவல்கள் வெளிவந்தன.
மேலும், கைது செய்யப்பட்ட ஒரு பாதாள உலகத் தலைவருக்கு சொந்தமான சொகுசுப் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதியை ஓர் உயர் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியிருந்தமையும் தெரியவந்தது.கைது நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும் அவருக்கு அதற்குரிய மாதாந்த லஞ்சம் வழங்கப்பட்டு வந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது குற்றக் கும்பல்கள் பல்வேறு மட்டங்களிலும் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் தமிழ் நோக்கு நிலையில் அதைவிட ஆழமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்,இந்தக் குற்றக் கும்பல்கள் தமிழ்ப் பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளன என்பதுதான். இது இயல்பான ஒரு வளர்ச்சி அல்ல. திட்டமிட்டு அரசியல் உள்நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட ஒன்று என்று கஜேந்திரகுமார் போன்ற அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழர்களை அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தோற்கடிப்பதற்கு போதை ஒரு உபகரணமாக பயன்படுத்தப்படுகிறது என்பது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் பொதுவாக முன்வைக்கும் ஒரு குற்றச்சாட்டு ஆகும். கடந்த 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கஜேந்திரக்குமார் அதுதொடர்பாக விரிவாகப் பேசியிருக்கிறார்.
தமிழ் இளையோரை இலட்சிய வாதத்தின் பக்கம் போகவிடாமல் தடுப்பதற்கு போதை ஓர் உபகரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. சாகசப் பண்புமிக்க குற்றக் கும்பல்களும் அந்த நோக்கத்தோடு தமிழ் இளையோரை நெருங்கி வருகின்றன.இதன்மூலம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இளைய தலைமுறையானது திட்டமிட்டுப் போதையில் மூழ்கடிக்கப்படுகிறது.இது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு நடவடிக்கை என்று தமிழ் அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,பாதாள உலக கும்பல்களுக்கும் போதை பொருள் குற்றவாளிகளுக்கும் எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விறுவிறுப்பான காட்சிகளாக மக்கள் முன்வைக்கப்படுகின்றன.குற்றக் கும்பல்களுக்கு எதிரான மேற்படி நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை தமிழ் மக்களிலும் ஒரு பகுதியினர் ஆர்வத்தோடு ரசித்து வருகிறார்கள்.
சிங்களப் பகுதிகளில் பாதாள உலக கும்பல்களையும் போதைப்பொருள் கட்டமைப்பையும் அரசாங்கம் முடக்கி வருவது வரவேற்கத்தக்கது. அதை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும். ஆனால் இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் உள்நாட்டு நீதி விசாரணைக் கட்டமைப்பும் போலீஸ் கட்டமைப்பும் நம்பகத்தன்மை உள்ளவை என்று நிரூபிக்கப் போகின்றது. அதாவது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கு மேற்படி கைது நடவடிக்கைகள் உதவும் என்பதுதான்.
ஏற்கனவே செம்மணிப் புதை குழியுமுட்பட மனிதப் புதை குழிகளை அகழும் விடயத்தில் அரசாங்கம் தடைகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்ற ஒரு அபிப்பிராயம் அனைத்துலக அளவில் உண்டு.இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் செம்மணி அகழ்வின் அடுத்த கட்டத்திற்கு உரிய நிதி வழங்கப்படவில்லை. மழைக்காலம் என்பதனால் அப்பகுதியில் நீர் நிறையும் ஆபத்தும் உண்டு. ஆனாலும்,அரசாங்கம் மனிதப் புதை குழிகளின் விடயத்தில் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் விதத்தில்தான் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
அவ்வாறு உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து முன்னேறுமாக இருந்தால் தமிழ் மக்கள் கேட்பதுபோல பன்னாட்டு விசாரணைப் பொறிமுறை தேவையில்லை உள்நாட்டு விசாரணை பொறிமுறையே போதும் என்று அவர்கள் கூறத் தொடங்குவார்கள்.
ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அரசாங்கம் கூறிவருகின்றது.இப்பொழுது போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றக் கும்பல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் விட்டுக் கொடுக்கப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை மேலும் பலப்படுத்தி வருகின்றது.குற்றக் கும்பல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கைது நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் விறுவிறுப்பான மர்மப் படங்களைப் பார்ப்பதுபோல தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லை, இந்தக் கைது நடவடிக்கைகள் எல்லாவற்றின் மூலமும் அரசாங்கம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை படிப்படியாகக் கட்டியெழுப்பி வருகிறது என்பதுதான்.
ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசாங்கம் கைது செய்திருப்பவர்களில் யார் மீதும் போர்க் குற்றம் தொடர்பாகவோ அல்லது இனமுரண்பாடு தொடர்பாகவோ குற்றச்சாட்டுக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டமும் வாக்குறுதி அளித்தபடி நீக்கப்படவில்லை. அதாவது எந்தக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற விடயத்தில் அரசாங்கத்திடம் தெளிவான ஒரு தெரிவு உண்டு. எந்தக் குற்றங்களை விசாரிக்கக் கூடாது என்ற தெரிவு இருக்கின்றதே அதுதான் தமிழ்மக்கள் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் மீது நம்பிக்கை வைக்காததற்கு காரணம்.
























