லஞ்ச, ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக தமிழருக்கு சார்பானவரை நியமிக்க எதிர்த்து விட்டார் ,இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு தமிழருக்கு எதிரான இராணுவ அதிகாரிகளை நியமிக்க ஆதரவளித்து விட்டார் என்பதற்காக அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக ஒரு இனவாத சிங்களக்கட்சி சிறப்புரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வருமா? எனவே இதன் பின்னணியிலுள்ள கறுப்பு ஆடுகள் யார்?
கே.பாலா
அரச உயர்பதவிகளில் ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் முடிவுகள் எடுப்பதை தடுக்கக் கூடிய அதிகாரமுள்ள அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகள் -சிறுபான்மையினக் கட்சிகள் சார்பில் பிரதிநிதியாகவிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரனை அதிலிருந்து நீக்க புதிய ஜனநாயக முன்னணி என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கட்சியின் பதுளை மாவட்ட சிங்கள எம்.பி.யான சாமர சம்பத் தசநாயக்க என்பவர் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் ஒன்றை முன்வைத்துள்ள நிலையில் அதன் பின்னணியில் சிறீதரனின் சொந்தக் கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் சில கறுப்பு ஆடுகள் இருப்பது அம்பலமாகியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட சிங்கள எம்.பி.யான சாமர சம்பத் தசநாயக்க சிறீதரனுக்கு எதிரான இந்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையை கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்த போது ”இது சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்லை. அதற்கான போதிய விபரங்கள் இதில் இல்லை ”எனக்கூறி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நிராகரித்த போது வரிந்து கட்டிக்கொண்டு எழுந்த தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான. இரா.சாணக்கியன்,நீங்கள் (சபாநாயகரை நோக்கி) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு இடமளிப்பதில்லை. சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்தால் அது பற்றி ஆராய்வதற்கு சிறப்புரிமை மீறல் தொடர்பான குழு உள்ளது. நீங்கள் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் நிலையியல் கட்டளையில் இருந்து சிறப்புரிமை மீறல் தொடர்பான குழுவை நீக்குங்கள். உங்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு காணப்படுவதாலா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்க இடமளிக்க மறுக்கின்றீர்கள்.என்று கேள்வியெழுப்பி சிறீதரனுக்கு எதிரான அந்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையின் பின்னால் உள்ளவர்கள் நாமே என்பதை ” எங்கப்பன் குதிருக்குள் இல்லை”என்ற கதையாக காட்டிக் கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் இரா.சாணக்கியனதும் சாமர சம்பத் தசநாயக்கவினதும் குற்றச் சாட்டுகளுக்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன,இதில் எவ்வித ஒழுங்குப்பிரச்சினையும் இல்லை. சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், அவரது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை முறையாக குறிப்பிடப்படவில்லை. அவற்றை தெளிவாக குறிப்பிட்டு சிறப்புரிமை மீறல் பிரச்சினையை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்ததையடுத்து . மறுநாள் ”சட்ட நுணுக்கம்”நன்கு தெரிந்த ஒருவரினால் தயாரிக்கப்பட்ட சிறீதரனுக்கு எதிரான சிறப்புரிமை மீறல் பிரச்சினையை சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்தார். புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட சிங்கள எம்.பி.யான சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையின் சாராம்சம் இதுதான்
”அரசியலமைப்பு பேரவைக்கு சிறுபான்மை எதிர்க்கட்சிகளால் அவர் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அரசாங்க தரப்புகளுடன் அவர் இணைந்து செயல்படுவது அவர் மீது வைக்கப்பட்டுள்ளகூட்டு நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் அவர் பிரதிநிதித் துவப்படுத்த நியமிக்கப்பட்டவர்களின்விருப்பத்தை காட்டிக் கொடுக்கிறது சிறீதரனின் நடத்தை,எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தை புறக்கணிப்பதன் மூலம் அரசமைப்பின் பிரிவு 41 க்கு முரணாகச் செயல்பட்டுள்ளார்.தமக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டுகளை மறைத்து,விசாரணையின் கீழ் இருக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து வாக்க ளிப்பதன் மூலம் சிறீதரன் தனதுஅரசமைப்புப் பொறுப்பை தனிப்பட்டபாதுகாப்பாக மாற்றியுள்ளார்,பொறுப்புக்கூறல் நிறுவனத்தை தனது சொந்ததவறான நடத்தைக்கான கேடயமாகமாற்றியுள்ளார் .
தன்னை பரிந்துரைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துக்கு மாறாக வாக்களித்த சிறீதரன் அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறியுள்ளார் ,சிறுபான்மை எதிர்க்கட்சிபிரதி நிதித்துவத்தை காட்டிக் கொடுத்துள்ளார் அரசியலமைப்பு பேரவையின் நெறிமுறை அடித்தளத்தை நாசமாக்கியுள்ளார் இந்த நடத்தை முறை வெறும்அரசியல் தவறான நடத்தை மட்டுமல்ல இது தார்மீக ஊழல். இது பொதுமக்களின்நம்பிக்கையை சிதைக்கிறது, பாராளுமன்றத்தின் கண்ணியத்தை மீறுகிறதுமேலும் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள்மீதான மக்களின் நம்பிக்கையை காட்டிக்கொடுக்கிறது .எனவே அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் நீக்கப்பட வேண்டும்”
சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அதனை பாராளுமன்ற சிறப்புரிமைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தியுள்ளார். இனி அவர்கள் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி சாமர சம்பத் தசநாயக்க கூறியுள்ளதுபோல் அவரின் சிறப்புரிமை எங்காவது சிறீதரனால் மேற்பட்டுள்ளதா என்பதனை ஆராய்ந்து முடிவுகளை சபாநாயகருக்கு அறிவிப்பார்கள். அதனை சபாநாயகர் சபைக்கு அறிவிப்பார். அந்த அறிவிப்பு ஒரு சில வாரங்களில் வரலாம் .ஒரு சில மாதங்களிலும் வரலாம். சில வேளைகளில் பலமாதங்களும் எடுக்கலாம் அது எப்போது அறிவிக்கப்படும் என்பது சபாநாயகரின் கைகளில்தான் உள்ளது.
கடந்த ரணில் விக்கிரமசிங்கவின் ”அதிர்ஷ்ட ஆட்சி ”யில் அரசியலமைப்பு பேரவைக்கு சிறிய கட்சிகள் சார்பில் தமிழ் பிரதிநிதியாக ஒருவரை நியமிக்க பேரினவாதக் கட்சிகள் காட்டிய எதிர்ப்பும் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவரும் அப்போது யாழ் மாவட்ட எம்.பி.யாக இருந்தவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை பிரேரித்து விட்டுஅவரை நியமிக்குமாறு தமிழ் தேசியக்கட்சிகள் நடத்திய போராட்டமும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி கலையும் வரை சித்தார்த்தன் நியமிக்கப்படாமையும் வரலாறு.
பாராளுமன்றத்தில் சிறிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல சிங்களக்கட்சிகளும் இருப்பதால் தமது தரப்பிலிருந்தே ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அப்போதைய எம்.பி. யுமான விமல் வீரவன்ச ,பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் அப்போதைய எம்.பி.யுமான உதய கம்பன்பில ஆகிய இரு இனவாதிகள் போர்கொடிதூக்கியதை காரணமாக வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ”இராஜதந்திரக் காய்” நகர்த்தி சித்தார்த்தனை நியமிக்காது இறுதிவரை இழுத்தடித்து இறுதியில் ஆட்சியிலிருந்தே காணாமல் போனார் . அவருடன் சேர்த்து விமல் வீரவன்சவும் உதயகம்பன் பிலவும் அரசியலிலிருந்து காணாமல் போயினர் .
இவ்வாறான நிலையில்தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் அரசியலமைப்பு பேரவைக்கு சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் நியமிக்கப்பட்டார் . அநுரகுமார திஸாநாயக்க அரசில் இது ஒரு சிறந்த ”மாற்றம் ”ஆக இருந்தாலும் அரசியலமைப்பு பேரவைக்கு சிறீதரன் எம்.பி. தெரிவாகிவிடக்கூடாது என்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவும் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு ”கறுப்பு ஆடு”களும் சதி செய்த போதும் அது அப்போது வெற்றியளிக்கவில்லை.
அரசியலமைப்பு பேரவைக்குசிறிய கட்சிகளின் பிரதிநிதியாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கைத்தமிழரசுக்கட்சியை சேர்ந்த யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறிதரனின் பெயரை அதேகட்சியை சேர்ந்த அம்பாறை மாவட்ட எம்.பி.யான கவீந்திரன் கோடீஸ்வரன் முன்மொழிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்தார்.இதனையடுத்து சிறீதரன் நியமிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக செயற்பட்ட மஹிந்த ராஜபக்சவின் வாரிசான பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பி. நாமல் ராஜபக்ச சிறீதரனை தோற்கடிக்க வேண்டும் ,அதேவேளை மலையகத்தமிழர்களுடன் தமிழர்களை மோதவிட வேண்டும் என்ற ஒரு கல்லில் இரு மாங்காய்கள் அடிக்கும் இனவாத சிந்தனையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் ஐக்கியதேசியக்கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஜீவன் தொண்டமானின் பெயரை முன்மொழிய ரணில் விக்கிரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி. யான சாமர சம்பத் வழிமொழிந்தார்.
இவ்வாறான நிலையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.பி.யான சிறீதரனை தெரிவு செய்வதா அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமானை தெரிவு செய்வதா என்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த இரகசிய வாக்கெடுப்பில் 25 எம்.பிக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது சிறீதரன் எம்.பி.11 வாக்குகளையும் ஜீவன் தொண்டமான் எம்.பி. 10 வாக்குகளையும் பெற்ற நிலையில் சிறீதரன் எம்.பி.அரசியலமைப்பு பேரவையின் சிறியகட்சிகளின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ரோஹித அபேகுணவர்தன், அனுராத ஜயரத்ன மற்றும் இரு எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.அதேவேளை இந்த வாக்களிப்பில் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரு”கறுப்பு ஆடுகள்” ஜீவன் தொண்டமானுக்கு வாக்களித்துள்ள தகவல் பின்னர் வெளியே கசிந்தது. அதாவது சிறீதரன் எம்.பி. தெரிவாகிவிடக்கூடாது என்பதில் இந்த இரு தமிழ் தேசிய கறுப்பு ஆடுகளும் உறுதியாகவிருந்த நிலையில் இரு முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவுடனேயே சிறீதரன் எம்.பி வெற்றி பெற்றார் என உள் ”வீட்டு ”தகவல்களும் அப்போது தெரிவித்தன.
இந்த அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன, அப்பேரவை ஊடாக முன்னெடுக்கப்படும் பணிகள் எவை என்பதை அறிய பலரும் ஆர்வமாக இருப்பர் என்பதனால் அதுதொடர்பிலும் ஒரு சிறு விளக்கம் .
அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்.இதன் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். பிரதமர் ஹரிணி அமரசூரிய , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர். ஜனாதிபதியின் பிரதிநிதியாக தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பி. யான ஆதம்பாவா நியமிக்கப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பி.யான அஜித் பி. பெரேரா நியமிக்கப்பட்டார்.. பிரதமரும் தனது பிரதிநிதியாக ஒருவர் நியமிக்க முடியும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடமளிக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக கட்சி சாராத மூன்று சிவில் பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவார்கள்.
தேசிய தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, ஆகியவற்றுக்கான உறுப்பினர்களின் பெயர்களை, அரசியலமைப்பு பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் .அதேபோன்று பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், ஒம்புட்ஸ்மன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய நியமனங்கள், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும். ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் முடிவெடுப்பதை, அரசியலமைப்பு பேரவை என்ற இந்த ஏற்பாடு தடுத்துள்ளது.அதனாலேயே அரசியலமைப்பு பேரவையும் அதில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக தமிழ் பிரதிநிதித்துவமும் முக்கியம் பெறுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கு ஆளும் தரப்பு மற்றும் பிரதானஎதிர்க்கட்சி ஆகியவற்றைச் சாராத 24 எம்.பிக்களின் சார்பாகவே சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் “இந்த 24 எம்.பிக்களில் தமிழரசுக்கட்சியின் 8 எம்.பிக்கள் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய 2 எம்.பிக்கள் உட்பட 10 தமிழ் எம்.பிக்களைத் தவிர்ந்த மற்றைய 14 பேரும் தங்கள் சார்பில்அரசமைப்பு பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிதரன், அங்கு பெரும்பாலும் ஆளும் தரப்பின் நிலைப்பாட்டையே ஆதரித்துச் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வப்பதாக சிலர் கூறுகின்றனர்.
அரசியலமைப்பு பேரவையை பொறுத்தவரை 2 முக்கிய முடிவுகளில் சிறீதரனின் பங்களிப்பு- அரசுத் தரப்புக்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற ரீதியில் – சர்ச்சைக்குரியதாகி யுள்ளது. ஒன்று – லஞ்ச, ஊழல் முறைகேடுகள்குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டவிடயம். அரசுத் தரப்புடன் சேர்ந்து சிறிதரன் அளித்த ஒரு மேலதிக வாக்கின் மூலம் அவரது பெயர் அரசியலமைப்பு பேரவையால் பிரேரிக்கப்பட்டுள்ளமை .இந்தப் பதவிக்கு பிரதி சொலிஸிட்டர்ஜெனரல் மாதவ தென்னக்கோன் போட்டியிட்டிருந்தார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஓரளவு நேர்மையோடுசெயல்பட்டவர் மாதவ தென்னக்கோன். பிள்ளையானை பிணையில் விடும் நடவடிக்கையை முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திலேயே சட்டமா அதிபரையும் மீறி கடுமையாகஎதிர்த்தவர் அவர் . அத்தகைய மாதவ தென்னக்கோனைஇப்பதவிக்கு பரிந்துரைக்க முடியாமல்போனமைக்கு சிறிதரன் மீது எதிர்க்கட்சியினர் கடும் விசனம் கொண்டுள்ளதாக சிலர் கதை விடுகின்றனர்.
அடுத்தது இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு உறுப்பினர்களாக படைத்தரப்பு பின்னணி கொண்டவர்கள் நியமிக்கப்பட்டமைக்கு சிறீதரன் ஆதரவு வழங்கியுள்ளார். .படைத்தரப்பு நடவடிக்கைகளால்பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு – இழப்பீடு வழங்குவதுதொடர்பில் பிரேரிக்கும் ஐவர் குழுவில் மூவர் படைத் தரப்பினராக அமைவதற்கு அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக இருந்து கொண்டு சிறீதரனும் ஒத்துழைத்து வழி செய்தார் என்பது எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்தக்கதை விடும் நபர்கள் கூறுகின்றனர்.
இந்த இரு விடயங்களிலும் சிறீதரன் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அது தவறு. அதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இந்த இரு விடயங்களிலும் சிறீதரன் மீது தமிழ் கட்சிகள் ,தமிழ் மக்கள், சிறுபான்மையினக் கட்சிகள் விசனமடைய நியாயம் உண்டு .ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் நேர்மையோடு செயல்பட்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோனை லஞ்ச, ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக நியமிக்க சிறீதரன் ஆதரிக்கவில்லை என்பதற்காகவும் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு உறுப்பினர்களாக படைத்தரப்பு பின்னணி கொண்டவர்கள் நியமிக்கப்பட்டமைக்கு சிறீதரன் ஆதரவு வழங்கியுள்ளார் என்பதற்காகவும் அரசியலமைப்பு பேரவையை சிறீதரன் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் கடும்போக்கு இனவாத சிந்தனைகொண்ட சிங்களக் கட்சிகளை சேர்ந்தவர்கள் சிறீதரன் மீது விசனமடைந்துள்ளதாகவும் அதனாலேயே சிங்கள எம்.பி.யான சாமர சம்பத் தசநாயக்க சிறப்புரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்து அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரனை நீக்க வேண்டுமென வலியுறுத்துவதாகவும் கூறுவதுதான் ”பெப்ரவரி மாதத்தில் 31 நாட்கள்”என்ற கதையாகவுள்ளது
ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக தமிழருக்கு சார்பான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோனை நியமிக்காமைக்காகவும் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு உறுப்பினர்களாக படைத்தரப்பு பின்னணி கொண்டவர்களை நியமித்தமைக்காவையும் சிங்கள கடும்போக்கு வாதிகள் சிறீதரனுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்துள்ளார்கள் என்று கூறுபவர்களின் மூளையை பரிசோதிக்க வேண்டும்.
தமிழருக்கு சார்பானவரை நியமிக்கவில்லை என்பதற்காகவும் தமிழருக்கு எதிரான இராணுவ அதிகாரிகளை நியமித்து விட்டார்கள் என்பதற்காகவும் இனவாத சிந்தனை கொண்டோரின் தலைமையிலான ஒரு சிங்களக்கட்சி தமிழருக்கு சார்பான சிறப்புரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டுவருமா?அதனால்தான் சிறீதரனுக்கு எதிரான இந்த சிறப்புரிமை மீறல் பிரச் சினையில் தமிழரசுக்கட்சியின் ஒரு சில ”கறுப்பு ஆடுகள்” பின்னணியில் உள்ளதாக கூறவேண்டியுள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர்தெரிவில் சிறீதரனுக்கு எதிராக உருவான ”உள் வீட்டுப் பகை” பல்வேறு வடிவங்களில் இன்றுவரை சிறீதரனை விடாது விரட்டுகின்றது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை இலங்கை தமிழரசுக்கட்சியை அழிக்க,அதிலுள்ள தமிழ் தேசியப்பற்றாளர்களை வெளியேற்ற. முடக்க, தமிழரசுக்கட்சியிலுள்ள ”கறுப்பு ஆடு”களை சிங்கள பேரினவாத தலைவர்கள்,கட்சிகள் பயன்படுத்தி தமிழ்த்தேசிய இனத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தி வந்ததே வரலாறு. ஆனால் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சியை அழிக்க,அதிலுள்ள தமிழ் தேசியப்பற்றாளர்களை வெளியேற்ற. முடக்க, தமிழரசுக்கட்சியிலுள்ள சில”கறுப்பு ஆடுகள் ”சிங்கள அரசியல்வாதிகளை பயன்படுத்தத் தொடங்கி தமிழரசுக்கட்சியில் புதிய துரோக வரலாற்றினை எழுதத் தொடங்கியுள்ளனர்
























