”வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகள் தனித்தனியாக முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட்டால் வடக்கு மாகாணசபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது. ஓரணியாக பொது வேட்பாளரை அறிவித்து போட்டியிட்டால் மட்டுமே வடக்கு மாகாணத்தை தமிழ் தேசியக்கட்சிகள் தக்க வைக்க முடியும்.இல்லையேல் ”பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டிய கோவணத்தையும் பறி கொடுத்த கதை”யாகவே முடியும்”
–கே.பாலா

இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறையிலா அல்லது புதிய முறையிலான நடத்தப்படும் ? எப்போது தேர்தல்கள் நடத்தப்படும்? 9 மாகாணசபைகளுக்கும் ஒன்றாக நடத்தப்படுமா அல்லது பிரித்து, பிரித்து நடத்தப்படுமா ? என்ற எந்தவொரு கேள்விகளுக்கும் விடையில்லாத நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்ற தகவல் மட்டும் திரும்பத் திரும்பக்கூறப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இத்தேர்தல் தொடர்பில் சிங்கள அரசியல் கட்சிகள் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் ,முஸ்லிம் கட்சிகளிடையிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டு மாகாணசபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளதுடன் மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களும் வியூகங்களும் தீவிரமடைந்துள்ளன .
ஆனால் பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, ”மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கி உள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உள்ளது. எனவே கட்சித் தலைவர்கள் இணைந்து சரியான தேர்தல் முறையை உருவாக்கித் தந்தால் நாம் தேர்தல் நடத்தத் தயார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டம் ஒன்று உள்ளது. எனினும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடையவில்லை. உங்களது அரசாங்கத்தில் எல்லை நிர்ணைய சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். எனினும் நீங்கள் அதை செய்யவில்லை.
எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்த போது இந்த நாட்டில் முதலாவது தடவையாக அதனை சமர்ப்பித்த பைசர் முஸ்தபா அமைச்சரே அதற்கு எதிராக கையுயர்த்தினார். அமைச்சரே கொண்டு வந்த அறிக்கையை அவரே தோற்கடித்தார் என்பதே விந்தை. இப்போது எம்மிடம் மாகாண சபைத் தேர்தலை கேட்கின்றனர். இப்போது சட்டத்தில் இடமில்லை. நான் சட்டமா அதிபரிடம் அதற்காக சட்டத்தில் காணப்படும் இடம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளேன். விருப்பு வாக்கு தேர்தல் முறை வேண்டாம் என இங்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். தேர்தலை எப்போது நடத்துவது என்பது நான் தீர்மானிக்க முடியாது.பாராளுமன்றமே அதற்கு தீர்மானிக்க வேண்டும் ” எனக் கூறி மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட முடியாமைக்கான பழியை தற்போதைய எதிர்க்கட்சிகள் மீது போட்டுள்ளார் .
இவ்வாறான நிலையில் பொலிஸ், காணி அதிகாரங்களைத் தவிர ஏனைய அதிகாரங்களை பெயரளவில் கொண்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் காட்டி வரும் தீவிரம் தற்போது தமிழ் தேசிய கட்சிகளுக்கு இம்மாகாணங்களில் இருக்கும் கொஞ்ச நஞ்ச உரித்தையும் மக்கள் செல்வாக்கையும் முற்றாக துடைத்தழித்துவிடும் நிலைமையை ஏற்படுத்தும். இதனை உணராதவர்களாகவே தமிழ் தேசிய கட்சிகள் நடந்துகொள்கின்றனர் என்பதையே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் தேசியக்கட்சிகளின் ”நீயா,,, நானா” அரசியல் வெளிப்படுத்தி நிற்கின்றது. அது ஏன், எப்படி என்பதனைப் பார்ப்போம்.
இலங்கையில் தமிழர்களின் தனி நாடு கோரிய ஆயுதப் போராட்டமே மாகாண சபை ஆட்சி முறைக்கு வித்திட்டது. இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. . இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகவே இருந்தது. இதன் படி 1987 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. 1988 பெப்ரவரி 3 ஆம் திகதி இலங்கையில் மத்திய மாகாணம் , கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், வடக்கு மாகாணம், வடமேற்கு மாகாணம், சப்ரகமுவ மாகாணம், தென் மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம் என ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.
மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல் 1988 ஏப்ரல் 28 ஆம் திகதி வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக 1988 ஜூன் 2 ஆம் திகதி மத்திய, தென், மற்றும் மேல் மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 1988 நவம்பர் 19 ஆம் திகதி நடத்தப்பட்டது. மாகாண சபையின் பதவிக் காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 1993 ஆம் ஆண்டில் இரண்டாவது மாகாணசபைத் தேர்தலும் 2004 ஆம் ஆண்டில் மூன்றாவது மாகாணசபைத் தேர்தலும் முதலில் ஒரே தடவையில் நடத்தப்பட்ட நிலையில் பின்னர் தேர்தல்கள் பிரித்து பிரித்து நடத்தப்பட்டதால் 2008 -2009 ஆம் ஆண்டுகளில் நான்காவது மாகாணசபைத் தேர்தலும் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த மாகாண சபைத்தேர்தல்களும் இடம்பெற்றன .
மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின் 154 உறுப்புரை ஆகியனவற்றின்படி, மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும். ஆனால், மாகாண சபைகள் கலைந்து, பல வருடங்களாகியும் இன்றுவரை மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படவில்லை.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்தான் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத சூழலை ஏற்படுத்தியிருக்கின்றதென காரணங்கள் கூறப்பட் டு வந்தது.
இன்னொரு பக்கத்தில் , மாகாண சபைகள் உருவாகக் காரணமான 13ஆவது திருத்தச்சட்டமானது, இந்தியா, இலங்கையின் இறைமையில் தலையீடு செய்வதற்கு காரணமாக இருக்கின்றது. ஆகவே இலங்கையின் ஆட்புல எல்லை சுயாதீனத்தினை உறுதிப்படுத்துவதற்காக அதனை புதிய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் மாகாணசபை முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டுமென விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர போன்ற இனவாதிகள் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்த கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் நிலையில் புதிய அரசியலமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என தற்போதைய அநுரகுமார அரசும் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள 9 மாகாணசபைகளும் கலைக்கப்பட்டு வருடக்கணக்காகின்ற போதும் அவற்றுக்கான தேர்தலை நடத்துவதில் கடந்த நல்லாட்சி அரசோ அல்லது கோத்தபாய ராஜபக்ச அரசோ அல்லது அதற்கு பின்னர் வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான் அதிர்ஷ்ட அரசோ அக்கறைகாட்டிடாத நிலையில் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படுமென்ற ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசின் அறிவிப்பைத் தொடர்ந்தே மாகாணசபைத்தேர்தல் தொடர்பான தற்போதைய பரபரப்புக்களும் எதிர்வு கூறல்களும் அரசியல் அரங்கை ஆக்கிரமித்துள்ளன .
நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில் வடக்கு,கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்தொடர்பிலும் இங்குள்ள கள நிலைவரம் தொடர்பிலும் பார்த்தால் சில வேளைகளில் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ் தேசியக்கட்சிகளுக்கு ”நல்ல செய்தி” கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது . இதற்கு வேறுயாரும் காரணம் அல்ல. தமிழ் தேசியக்கட்சிகளே காரணம் என்பதனையும் அடித்துக்கூற வேண்டியுள்ள நிலைமையே இவ்விரு மாகாணங்களிலும் உள்ளது. அதிலும் கிழக்கு மாகாணத்தை விடவும் வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக்கட்சிகளின் நிலைமை படு மோசமாகவே உள்ளது.
கிழக்கு மாகாணத்தில்தமிழ் தேசிய அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் இலங்கைத்தமிழரசுக்கட்சி பலமான நிலையில் உள்ளது. அதேவேளை கருணாஅம்மான், பிள்ளையான் தலைமையிலான கிழக்கை மையமாகக்கொண்ட கட்சிகள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால் அவர்களினால் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு பெரிய பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை .இது அண்மைய பாராளுமன்றத்தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புக்களும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான தலைக்கன அரசியல் போட்டிகளும் அங்கு கிடையாது. கிழக்கைப்பொறுத்தவரையில் கிழக்கின் ஆட்சியை கைப்பற்றுவதில் தமிழ்,முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான போட்டி மட்டுமே இருக்கும். இறுதியாக நடந்த கிழக்கு மாகாண சபைக்கானதேர்தலில் கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய நிலையில் அக்கட்சியின் விட்டுக்கொடுப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்ததே வரலாறு.
ஆனால் வடக்கு மாகாணத்தின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. இங்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கு முஸ்லிம், சிங்களக்கட்சிகள் எதுவுமே போட்டியில்லை. போட்டியென்பதே தமிழ் தேசியக்கட்சிகளுக்கிடையில்தான். இந்தப்போட்டியினால்தான் வடக்கு மாகாண ஆட்சியை இந்த தமிழ் தேசியக்கட்சிகள் பறிகொடுக்கும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றது. 38 ஆசனங்களைக் கொண்ட வடக்கு மாகாண சபையில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியமைக்க முடியும்.ஆனால் தமிழ் தேசியக்கட்சிகள் என்ற பெயரில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எனப்பிரிந்துகிடப்பதுடன் நீயா நானா போட்டியுடன் தலைக்கன அரசியலில் ஈடுபடுவதுடன் ”விட்டுக்கொடுப்பு – ஒற்றுமை”என்றால் கிலோ என்ன விலை எனக்கேட்கும் நிலையில் இக்கட்சிகள் இருப்பதே வடக்கு மாகாணம் பறிபோவதற்கு காரணமாக அமையவுள்ளது.
ஏற்கனவே நடந்து முடித்த பாராளுமன்ற, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வடக்கு மாகாணத்தில் விஸ்வரூப வெற்றி பெற்ற தற்போதைய அரசான தேசிய மக்கள் சக்தி கட்சி வடக்கிலுள்ள தமிழ் தேசியக்கட்சிகளின் இந்த தலைக்கன, ஒற்றுமையில்லாத, விட்டுக்கொடுப்பில்லாத அரசியல் குணத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வடக்கு மாகாணசபையையும் முதலமைச்சர் பதவியையும் கைப்பற்ற மிகத்தீவிரமாக, அதேவேளை மிகவும் ரகசியமான தயார்படுத்தல்களை ஏற்கனவே தொடங்கிவிட்டது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தினால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனைக்கூட தேசியமக்கள்சக்தி தீர்மானித்துவிட்டது. இதற்கு அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார ”தற்போதுள்ள ஆட்சிக்காலத்தை விடவும் , இன்னும் மேலதிகமாக ஐந்து வருடங்களுக்கு – நாமே அரசியல் அதிகாரத்துடன் தொடர்ச்சியாக இருக்கப் போகின்றோம். அதுமட்டுமல்ல , எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலும்கூட வடக்கு – கிழக்கு உட்பட நாமே அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் இதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்” என விடுத்துள்ள சவால் உதாரணம்.
எனவே வடக்கு மாகாணத்தையும் வடக்கு மாகாண சபையையும் தமிழ் தேசியக்கட்சிகள் தக்க வைக்க வேண்டும் என்றால், பாதுகாக்க வேண்டும் என்றால் தமது ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்றால் நிச்சயம் தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றிணைத்தால் மட்டுமே அது சாத்தியம். வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கும்போது தமிழ் தேசியக்கட்சிகள் தனித்தனியாக முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட்டால் வடக்கு மாகாணசபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது.எனவே ஓரணியாக ஒரு பொது வேட்பாளராக ஏதோவொரு கட்சியிலிருந்து ஒருவரை நியமித்து போட்டியிட்டால் மட்டுமே வடக்கு மாகாணத்தை தமிழ் தேசியக்கட்சிகள் தக்க வைக்க முடியும்.
இல்லாது விட்டால் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு போராடி அத்தேர்தல் நடத்தப்பட்டதன் மூலம் வடக்கு மாகாணத்தை சிங்களக்கட்சி ஒன்றிடம் பறிகொடுக்க வேண்டிவரும் அதாவது பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் நிலைமை ஏற்படும்.இதன்மூலம் இலங்கையில் தமிழர்களுக்கான அதிகாரம் கோரும் போராட்டமும் தமிழ் தேசியக்கட்சிகளின் இருப்பும் இல்லாதொழிக்கப்படும் ,நாட்டில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு இனரீதியான பிரச்சினைகளும் இல்லை என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டு தமிழ் மக்களின் 5 தசாப்த போராட்டத்துக்கு முடிவுரை எழுதப்படும் , இந்த நி லையை ஏற்படுத்தியவர்களாக தற்போதைய தமிழ் தேசியக்கட்சிகளும் அதன் தலைக்கன தலைவர்களும் வரலாற்றில் பதியப்படுவர்.
எனவே இந்த சந்தர்ப்பத்திலும் ஒன்றுபடாது தனித்தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் தமிழ் மக்கள் சிங்களக் கட்சிக்கு வாக்களித்து விட்டார்கள், தமிழ் மக்களிடம் தமிழ்தேசிய உணர்வு இல்லை. வடக்கு தமிழர்களை நினைத்து வெட்கப்படுகின்றோம், வேதனைப்படுகின்றோம். தமிழ் இளைஞர்கள் வழிதவறி சிங்களக் கட்சியின் பின்னால் செல்கின்றார்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைக்க எந்தவொரு தமிழ் தேசியக்கட்சிகளுக்கும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களுக்கும் உரிமை கிடையாது. எனவே தமிழ் தேசியத்தின் இருப்பை பாதுகாக்கவேனும், வடக்கு, கிழக்கைத் தக்க வைக்கவேனும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தமது தலைக்கனம், மேதாவித்தனம், ஒற்றுமையின்மை,விடாப்பிடியைக் கைவிட்டு மாகாணசபைகளுக்கான தேர்தலில் ஓரணியில் திரள வேண்டும்.
”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதனை தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இனியாவது கருத்தில் எடுக்க வேண்டும். இல்லையேல் வடக்கு மாகாணம் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது.எனவே மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென வரிந்து கட்டி நிற்கும் தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியாக தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகாது விட்டால் ”பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டிய கோவணத்தையும் பறி கொடுத்த கதை”யாகவே மாகாணசபைகளுக்கான தேர்தல் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு அமையும்.
























