தனது கனடிய வாழ்வுக் காலத்தின் நாற்பதாவது வெற்றிகரமான ஆண்டை அமரர் ‘யாழ்நகர்’ நவரட்னம் அவர்கள் எட்டிபிடிக்க இருந்த வேளையில் காலன் வேகமாக வந்து எம்மிடமிருந்து அவரை தட்டிப் பறித்துக் கொண்டான். ஆகையினால் அவரது நினைவாக அவர் பற்றிய பெருமைகளைப் பற்றி ஆங்காங்கே சில வாரங்களாக பேசிக் கொண்டிருந்த நாம் அவரது ஆத்ம சாந்தி பிரார்த்தனை நாளை நோக்கி நகர்ந்து சென்று ஓரிடத்தில் கூடி அமைதியாய் அமரரது வாழ்க்கைச் சரித்திரத்தின் சாரத்தை மீண்டும் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆமாம்!, கனடாவில் வர்த்தகத் துறையில் புகுந்து அர்ப்பணிப்புடன் அந்தத் துறையில் பயணித்து பல நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்ட அமரர் நவரட்னம் அவர்களது இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற நாட்களில் பெருமைகளை பகிர்ந்து கொள்ள ஆவலாய் வந்தவர்கள் மற்றும் உற்றவராகவும் நண்பராகவும் விளங்கிய அவரது முகத்தை இறுதியாக ஒரு தடவை காண்போம் என்று அந்த மண்டபத்தில் கூடிய ஒவ்வொருவரும் இன்றைய நாள் வரையும். அவரை வழியனுப்பி வைத்த கடைசி நிமிடங்களை மறந்திருக்க மாட்டார்கள்.
பெருமைக்குரிய வன்னி மண்ணின் முல்லைத்தீவு அம்லவன்பொக்கணையைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளை முல்லைத்தீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் அவர்கள் கனடாவில் 1986 ஆண்டு தனது குடும்பத்தோடு கால்பதித்தார். அன்றிலிருந்து தனது இறுதிக் காலம் வரை ஓய்வில்லாமல் உழைத்து குடும்பத்தினரை தீவிரமான நேசித்தும் அவர்களுக்காக வாழ்பவராகவும் அவர் விளங்கினார்.
கனடாவில் ஒரு புதிய சமூகமாக எமது தமிழர்கள் கூட்டாக வளர்ச்சியடைவதற்கு முன்பதாகவே வர்த்தக நோக்கத்திற்காகவும் புலம் பெயர்ந்த எமது மக்களுக்கு தாயகத்தில் பரிச்சியமானதும் பாவனைக்கு உரியவையாக விளங்கிய உணவுப் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும். அதேவேளை எமது தாய் மண்ணின் அடையாளத்தை நான் தினமும் உச்சரிக்க வேண்டும் என்ற நோக்கொடும் ஆரம்பிக்கப்பெற்ற ‘யாழ் நகர் ட்ரேடர்ஸ்’ என்னும் தமிழர் வர்த்தக நிறுவனத்தின் பங்காளியாக நவரட்னம் அவர்கள் 1992ம் ஆண்டு இணைந்து ரொறன்ரோவின் பிரதான வீதியொன்றில் அதன் ‘பெயர்ப் பலகை’ பளிச்சென்று தெரியும் வகையில் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் நிர்வகித்து வந்தார்கள்.
அத்துடன் அமரரது உதவியினால் தற்போது வரையும் வர்த்தகத்துறையில் பிரகாசிக்கின்ற தனது நண்பர்களுக்கு நிதி உதவிகள் தேவைப்படுகின்றபோது. அமரர் நவரட்னம் அவர்களே பொறுப்பாக நின்று நிதி உதவிகளைப் பெற்றுக் கொடுத்து மற்றவர்களின் வர்த்தக நிறுவனங்கள் வீழ்ச்சியடையாமல் ‘காத்து நின்றவர்’ என்ற உயர்வான மதிப்பையும் தனதாக்கிக் கொண்டவர் என்பதும் பலருக்குத் தெரியாத விடயமாகும். ஏனெனில். அவர் ஆற்றிய நற்பணிகள் மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் ஏதும் அற்றவராகவும் அமரர் நவரட்னம் அவர்கள் விளங்கினார்.
இவ்வாறான தனது அர்ப்பணிப்புள்ள வாழ்க்கைப் பயணத்தில். தனது துணைவியாரான யோகராணி மற்றும் பாசமிகு புதல்வர்களான பகீஸ்கரன், குபேஸ்கரன், சதீஸ்கரன், றொசான் ஆகியோர் சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெற வேண்டும் என்பதற்காக குடும்பத்தின் பாரத்தைச் சுமந்து கடுமையாக உழைத்து பின்னாளில் அவரது குடும்பத்தை மற்றவர்கள் நிமிர்ந்து பார்க்கும் வகையில் மனைவிக்கு பக்க துணையாகவும் புதல்வர்களுக்கு கல்விச் செல்வத்தை உறுதி செய்யும் உற்ற ஒரு தந்தையாகவும் விளங்கினார் அமரர் நவரட்னம் அவர்கள். ஆனால் அனைத்தையும் அமைதியாகவும் நிதானமாகவும் ஆற்றி முடித்தார் என்பதே அவரது வெற்றியின் ‘இரகசியமாக’ விளங்கியது எனலாம்.
‘தந்தை மகற்காற்றும் நன்றி
அவயத்தில் முந்தி இருப்பச் செயல்’ என்னும் வள்ளுவனின் வாக்குக்கு இணங்க அவரது புதல்வர்கள் இந்த கனடிய தமிழர் சமூகத்தின் நன்கு அறியப்பெற்றவர்களாகவும் ஆற்றல் மிகுந்தவர்களாகவும் இருப்பது என்பதும் ஒரு வெள்ளிடை மலையே! இவ்வாறாக. தமிழ்க் கனேடியர்கள் மத்தியில் வியப்போடும் விசாரிப்போடும் பேசு பொருளாக விளங்கிய அமரர் நவரத்தினம் அவர்களது பிரிவுத்துயரின் அதிர்வுகள் இங்கு மாத்திரமல்ல, அவர் தோன்றிய அந்த வன்னிமண்ணிலும பரந்து விரியும் என்ற வார்த்தைகளோடு அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் ஒருவனாக நான் உள்ளேன் என்பதையும் பதிவு செய்கின்றேன்.!
அன்பன் ஆர். என். லோகேந்திரலிங்கம்
























