43 உறுப்பினா்களை கொண்ட பீகாா் சட்டசபைக்கு நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இந்த கூட்டணியில் 89 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 85 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) 19 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 5 தொகுதிகளும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 4 இடங்களும் கிடைத்தன. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் ‘இந்தியா’ கூட்ட ணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம் 25, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1 இடங்களை கைப்பற்றின. தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், ஐ.ஐ.பி. ஒரு இடத்தையும் பிடித்தன. தேர்தலில் பா.ஜ.க.வைச் சோ்ந்த துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்திரி, விஜய் குமாா் சின்கா உள்பட மாநில அமைச்சர்கள் 25 போ் (பா.ஜ.க. 15, ஐக்கிய ஜனதா தளம் 10) மீண்டும் போட்டியிட்டனா். இவா்களில், ஐக்கிய ஜனதா தளத்தின் சுமித்குமாா் சிங் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனா். இதற்கிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டில்லியிலும், பாட்னாவிலும் பேச்சுவார்த்தையை தொடங்கின. பீகார் முதல்-அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-அமைச்சராக்க பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சம்மதித்துள்ளன. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, “பீகார் மக்கள் நல்ல ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். மாநில மக்கள் நிதிஷ்குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்” என்றார். நிதிஷ்குமார் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார். 19-ந்தேதி சர்வ அமாவாசை (நல்ல நாள்) என்பதால் அன்றே அவர் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும். தற்போது அமைய இருக்கும் புதிய ஆட்சியில் கூட்டணியில் உள்ள மற்ற 3 கட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரிசபையில் இடம் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு தெரிவித்தார். கடந்த அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மட்டுமே இடம் பெற்றன. பா.ஜ.க.வில் 15 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் 12 பேரும், லோக் ஜனசக்தி கட்சியில் 6 பேரும், இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் சார்பில் ஒரு வரும் அமைச்சர்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.
























