யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
திருகோணமலையில் ஒரு புத்தர் சிலை விவகாரமாக மாறி இருக்கிறது. அங்கே உண்மையில் நடந்தது என்ன?
2014 ஆம் ஆண்டு அந்தக் காணியை மஹிந்த ராஜபக்ஷ பௌத்த விகாரைக்கு எழுதிக்கொடுத்தார். ஆனால் அங்கே ஒரு முக்கிய நிபந்தனை இருந்தது. அந்த காணியில் அவர்கள் எந்த கட்டுமானங்களையும் அமைக்க கூடாது. ஏனென்றால் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டங்களின்படி பொதுக் கடற்கரையை நோக்கிச் செல்லும் வழிகளில் தனியார் கட்டுமானங்களை அமைப்பதற்கு அனுமதி பெற வேண்டும். ஆனால் அந்த நிபந்தனையை மீறி அங்கே ஒரு ரெஸ்ரோரன்டை கட்டுவதற்கு புத்தபிக்குகள் ஒரு தனியாருக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள். இந்தத் தனியார் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஆகும். அது சட்டவிரோதமான கட்டடம் என்று கூறி சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் போலீசாரின் உதவியுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு முன் அவ்வாறு எதிர்ப்பு காட்டப்பட்டதையடுத்து அங்குள்ள பௌத்த பிக்கு அந்த கட்டிடத்தில் பிரதான பகுதி தவிர ஏனையவற்றை அகற்றுவதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் பிரச்சினையை வேறு பக்கமாக திசை திருப்புவது என்று முடிவெடுத்து அங்கே ஓர் அறநெறிப் பள்ளியைக் கட்டப்போவதாகக் கூறி அதற்கு அத்திவாரம் போடும் வேலைகளைத் தொடங்கியதோடு ஒரு சிறிய தற்காலிக கொட்டிலை அமைத்து அதற்குள் ஒரு புத்தர் சிலையையும் கொண்டு வந்து வைத்துவிட்டார்.
அதாவது விவகாரத்தின் மையம் புத்தர் சிலை அல்ல. அந்த வளவுக்குள் ஏற்கனவே மர நிழலில் ஒரு புத்தர் சிலை உண்டு. பல தசாப்தங்களாக காணப்படும் அந்தப் புத்தர் சிலையை தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இங்கு முன் கூறப்பட்ட ரெஸ்ரோரண்ட் விவகாரத்தைத் திசை திருப்பும் நோக்கிலானது என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
புத்தர் சிலையை அகற்றும் முடிவை முதலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்திருக்கிறது. அதன் விளைவாகத்தான் போலீசார் இரவோடு இரவாக அதனை அகற்றியிருக்கிறார்கள். மாவட்டத்தின் மூத்த போலீஸ் அதிகாரியை பிக்குகள் அவமதித்திருக்கிறார்கள். அங்கே நிலமைகளைக் கையாள்வதற்கு என்று திருகோணமலையைச் சேராத மூன்று பிக்குகள் வெளியிடத்திலிருந்து வந்திருக்கிறார்கள் என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள். பிக்குகளால் ஓர் உயர் போலீஸ் அதிகாரி அவமதிக்கப்பட்ட பின்னணியில் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தவுடன் போலீசார் அந்த சிலையை அகற்றி விட்டார்கள்.
ஆனால் அதை அவ்வாறு அகற்றிய போலீசாரை விடவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்புகளை விடவும்,நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை விடவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட நாடாளுமன்றத்தை விடவும், இலங்கைத் தீவின் பௌத்த மகா சங்கம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதைத்தான் அடுத்த நாள் நடந்த நிகழ்வுகள் நிரூபித்தன.
எந்தப் போலீசார் சிலையை இரவோடு இரவாக அகற்றினார்களோ, அதே போலீசார் சிலையை மீண்டும் மேளதாளத்துடன் கொண்டுவந்து நிறுத்தும் அளவுக்கு பௌத்த மகா சங்கம் பலமாகக் காணப்படுகிறது. அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, புத்தர் சிலை சேதமடைவதாக தகவல் காரணமாக அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக சிலை அகற்றப்பட்டது என்றும் அது மீண்டும் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே சிலை மீண்டும் கடந்த 17 ஆம் தேதி நிறுவப்பட்டுள்ளது.
எனவே இந்த விவகாரத்தின் தொடக்கப் புள்ளியில் புத்தர் சிலை இல்லை. அது சட்டவிரோதக் கட்டுமானம் ஒன்றுக்கு எதிரானது.ஆனால் பௌத்த பிக்குகள் திட்டமிட்டு புத்தர் சிலையை ஒரு முன் தடுப்பாக -buffer ஆகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவ்வாறு புத்த பகவானை ஒரு முன்தடுப்பாகப் பயன்படுத்துவதுதான் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியல் கலாச்சாரமாக பல தசாப்தங்களாக காணப்பட்டு வருகிறது. அதைத்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராகிய ரவூப் ஹக்கீம் கிண்ணியாவில் அப்படி ஒரு பிரச்சனை வந்தபோது “அரசாங்கம் புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நகர்த்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.
எனவே இங்கே விடயம் தெளிவாகத் தெரிகிறது. புத்தர் சிலை பிரச்சினையை திசை திருப்பும் நோக்கத்தோடு உங்களால் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அங்கே ஒரு புத்தர் சிலை பல தசாப்த காலமாக உண்டு. எனவே இங்கு புதிய புத்தர் சிலையை அவர்கள் ஒரு கவசமாக, திசை திருப்பும் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.
தமிழ் மக்கள் எப்பவும் அச்சத்தோடு பார்ப்பது அதைத்தான். தமிழ்மக்கள் என்றைக்குமே பௌத்தத்தை ஒரு பகை மதமாகப் பார்த்தது கிடையாது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாக, புத்தர் பார்க்கப்படுகிறார். அறிவுபூர்வமாக பௌத்த மதத்தையும் இந்து மதத்தையும் அணுகும் தரப்புகள் புத்த மதத்தை “சீர்திருத்தவாத இந்து மதம்“-reform Hinduism என்றும் அழைப்பதுண்டு. தமிழ் மக்கள் மதப்பல்வகமைக்கு எதிரானவர்கள் அல்ல. மத மேலாண்மைதான் இங்கு பிரச்சனை.
இலங்கைத் தீவின் அரசியல் யாப்பு அவ்வாறு பெரிய மதத்துக்கு–அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்– பெரிய இனத்தைச் சேர்ந்த பெரிய மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அதன் ஒன்பதாவது பிரிவில் கூறியுள்ளது. அது இலங்கைத் தீவின் தேரவாத பௌத்தத்தை ஏறக்குறைய அரச மதமாக மேலுயர்த்தியுள்ளது.
புத்த பகவான் உலகியல் ஆசைகளைத் துறந்து சன்னியாசி ஆகியவர். நிலையாமையைப் போதித்தவர்.ஆனால் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இலங்கைத்தீவின் அரசியல் கலாச்சாரத்தில்,அரசியல்வாதிகள் பௌத்த மதத்தை ஆக்கிரமிப்பின் கருவியாக மாற்றி விட்டார்கள். இத்தகைய பொருள்படக்கூறின் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை என்பதே இலங்கைத்தீவின் பௌத்த மத சந்நியாசிகளும் அரசியல்வாதிகளும் புத்த பகவானின் போதனைகளை பின்பற்றத் தவறியதுதான்.
புத்த பகவான் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக எழுச்சி பெற்றவர். ஆனால் இலங்கைத் தீவின் மகா சங்கத்துக்குள்ளையே சாதி அடுக்குகள் உண்டு. அதைவிடக் கொடுமையான விடயம் என்னவென்றால், பௌத்தபிக்குகள் அணியும் காவி உடையிலும் சாதி உண்டு என்பதுதான். அதாவது சாதி ரீதியாக உயர்ந்த நிலைகளில் இருக்கும் பிரிவுகளைச் சேர்ந்த பிக்குகள் இந்துக்கள் அணிவது போன்ற காவி உடையை அணிவார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவுகள் செங்கட்டிச் சாவி நிறக் காவியை அணிவார்கள்.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மதம் மாறினார். அவர் இலங்கைத் தீவின் மகா சங்கத்தினரின் விருந்தாளியாக இங்கு வந்து தங்கியிருந்த காலகட்டத்தில் மகா சங்கத்துக்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் கண்டு, மனம் நொந்து நாடு திரும்பினார். காவிக்குள் சாதியை வைத்திருக்கும் சன்னியாசிகள், அரசியலில் என்ன செய்வார்கள்? புத்தர் சிலையை ஒரு முன்தடுப்பாக, கவசமாகப் பயன்படுத்துவார்கள்தானே?
ஆனால் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிர்வாணமாக்கியிருக்கிறது. இந்த அரசாங்கம் தன்னை முன்னைய மேட்டுக்குடி அரசாங்கங்களில் இருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டமுயன்றது. தாங்கள் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை என்று அது எப்பொழுதும் கூறிக்கொண்டது.முன்னைய அரசாங்கங்கள்தான் தேர்தல் தேவைகளுக்காக இனவாதத்தைக் கிளப்பின, இனவாதத்தைக் கையாண்டன என்று தேசிய மக்கள் சக்தி கூறியது. தனக்கும் இனவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல அது காட்டிக்கொண்டது. தமிழ்ப் பகுதிகளில் அதற்குக் கிடைத்த எட்டு ஆசனங்களை வைத்து அதை அவர்கள் அனைத்துலக அளவிலும் கூறிவருகிறார்கள்.ஆனால் புத்தர் சிலை விஷயத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பௌத்த மகா சங்கத்திடம் தோல்வி அடைந்துவிட்டது.
அந்தத் தோல்விக்கு அவர்கள் பொறுப்பேற்கத் தயார் இல்லை.மாறாக எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டுகிறார்கள். திருகோணமலையில் சம்பந்தப்பட்ட காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ரெஸ்ரோரன்ட் ஒரு ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தருக்குரியது. எனவே இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் நேரடியாகச் சம்பந்தப்படுகின்றன என்று அரசாங்கம் கூறக்கூடியதாக உள்ளது.வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நுகேகொடவில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒருங்கிணைத்து வருகின்றன. இனவாதத்தைத் தூண்டுவதன்மூலம் இந்த ஆர்ப்பாட்டத்தை உணர்ச்சிகரமானதாக மாற்றி,அதில் மக்களைத் திரட்டுவதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சிக்கிறது என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலான காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் காட்டப்போகும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் எதிர்ப்பாக அது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் எதிர்க்கட்சிகள் முதல் தடவையாக ஒன்றுதிரண்டு ஒரு பெரிய எதிர்ப்பைக் காட்டவிருக்கும் பின்னணிக்குள், திருமலையில் புத்தர் சிலை ஒரு விவகாரமாக மாறியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், இது வேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகளால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினை என்று அரசாங்கத்திற்கு சார்பான தமிழ் புத்திஜீவி ஒருவர் முகநூலில் எழுதுகின்றார்.
அதாவது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு இனவாதத்தை மீண்டும் கையில் எடுக்கின்றன என்று அரசாங்கத்துக்கு ஆதரவான புத்திஜீவிகள் கூறுகிறார்கள். இவ்வாறு கூறுவதன்மூலம் அவர்கள் அரசாங்கத்தை இனவாத பண்பு இல்லாதது என்று நிரூபிக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் இனவாதிகளைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது என்று தமிழ் மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள்.
அரசாங்கம் முதலில் சிலையை அகற்றுகிறது.பின்னர் மீண்டும் அந்தச் சிலையைக் காவிக் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதன்பொருள் இனவாத சக்திகளின் தூண்டுதலுக்கு அரசாங்கம் பணிந்து விட்டது என்பதுதான்.இவ்வாறு இனவாதிகளுக்குப் பயந்து ஒரு புத்தர் சிலையைக்கூட அசைக்கமுடியாத அரசாங்கம் எப்படி அரசியலமைப்பை மாற்றும்?பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் என்று எதிர்பார்ப்பது ?
இது மாவீரர் மாதம்.நாட்டில் குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் அரசியல் சூழல் உணர்ச்சிகரமானதாக இருக்கும் ஒரு காலகட்டம்.இக்காலகட்டத்தில் தென்னிலங்கையில் இனவாதத்தைக் கிளப்பி விடுவது இலகுவானது. அதனால் வரும் 21 ஆம் திகதி நுகேகொடவில் கூட உள்ள எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குச் சாதகமான இனவாதச் சூழலை உற்பத்தி செய்ய முற்படுகின்றன என்று தேசிய மக்கள் சக்தி கூற முயற்சிக்கின்றது.
ஆனால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை மாற்ற அந்த அரசாங்கத்தால் முடியாது என்பதைத்தான் திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் தமிழ் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
























