குளிர்காலம் தொடங்கக் கூதலும் வந்தது
வளியுடன் குளிர்ச்சி; வாட்டம் தந்தது
வெளியே செல்லவும் வீதியில் நடக்கவும்
வழியே இன்றி வாடிக் கிடந்தோம்.
கொட்டும் பனியைக் கூட்டித் தள்ளிட
சொட்டும் வியர்வை சூடாய் உடலிலே.!
பாட்டம் பாட்டமாய்ப் பொழியும் தூறலை
கூட்டிக் குவிக்கக் கடுப்பு வருமே.!
சிறுவருக் கெல்லாம் சிறுபனி; குதூகலம்
அறுபது கடந்தோர்க்; கதுவே அவலம்
விறுவிறு நடையாய் வேலைக்குச் சென்றோர்
சறுக்கி விழுந்து சஞ்சலம் கொண்டனர்.
புள்ளினம் எல்லாம் புகலிடம் தேடின
கள்ளமில் குழந்தைகள் கடும்நோய் கொண்டன
வெள்ளைக் காரரும் விரும்பும் காலமாம்
பிள்ளை ஜேசு பிறந்தநாள் வருவதால்.
மொட்டை மரமெலாம் முகிழ்ந்தன பனிப்பூ
வெட்டை வெளியெலாம் விரிந்தன வெண்பாய்
கொட்டும் பனிதான் குலப்பன் தந்தாலும்
கட்டாயம் செல்வோம் கழகமாம் மூத்தோர்
வருடம் ஒருமுறை வருகிற சீதளம்
தெருவெலாம் சிதைந்துச் சேதம் அடைந்திடும்
இரும்பு விளைய ஏற்ற காலமாம்
விரும்பும் கனடா வீழ்ந்திடும் பனியையே!
ஆக்கம்
பாவலர் மார்க்கம் சந்திரன் வேலா
416 844 7453
























