இலங்கைத் தீவு எங்கும் வெள்ளத்தின் அகோரத்தால் இதுவரை 132 பேர் பலி;
176 பேரைக் காணவில்லை! ஆறரை லட்சம் பேருக்குப் பாதிப்பு
இலங்கைத் தீவைப் பாதித்துள்ள தீவிரமான வானிலை மற்றும் அனர்த்தங்களினால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளமையுடன் மேலும் 176 பேர் காணாமல் போயுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
29ம் திகதி பிற்பகல் 2 மணிவரையான தகவல்களின்படி, நாடு முழுவதும் 179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தம் காரணமாக அதிகளவில் கண்டி மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளமையுடன் 105 பேர் காணாமல் போயுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளமையுடன் 27 பேர் காணாமல் போயுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 9 பேரும் மாத்தளை மாவட்டத்தில் எட்டு பேரும் குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளமையுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
மண் சரிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பற்றிய எண்ணிக்கை இன்னும் சரிவரக் கிடைக்காதமை காரணமாக உயிரிழப்புக்கள் பற்றிய சரியான தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இப்போது வெளியிடப்படும் உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களில் குறிப்பிடப்படும் எண்ணிக்கைகளை விட உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தினால் சூழப்பட்டு, சிக்குப்பட்டிருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம் பெற்று வருகின்றன. கடற்படையினர் படகுகள் மூலமும், விமானப்படையினர் ஹெலிகள் மற்றும் பிற வழிகள் மூலமும் சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் நாலாபுறங்களிலிருந்தும், ஒவ்வொரு பக்கங்களிலிருந்தும், பாதுகாப்பாக மீட்டெடுக்கப்படுவோர் பற்றிய விவரங்களை விமானப்படை, கடற்படை போன்ற தரப்பினரும், பொலிஸார் மற்றும் மாவட்ட செயலகத் தரப்புகளும் தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆபத்தான கட்டத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர் என்ற நிம்மதி தரும் செய்தி வெளிவந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
























