”சிறுபான்மையினங்களான தமிழ் , முஸ்லிம் மக்களின் பாதுகாவலர்களாக, உரிமைப் போராளிகளாக இன உணர்வாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரில் தற்போது இந்த 3 எம்.பி.க்களும் பெண்ணுக்காக,பதவிக்காக, தங்கத்திற்காக தமது கட்சி, கொள்கை, இலக்கு .உரிமை என்ற ஆடைகளைக் கழற்றி அநுர அரசுக்கு துதி பாடி அம்மணமாகத் தொடங்கியுள்ளனர்” —கே.பாலா
”அரசியலில் இன்றைய எதிரி நாளைய நண்பன்,, இன்றைய நண்பன் நாளைய எதிரி”என்பது பொது விதி. அதனைத்தான் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் தனது பேச்சு வழக்கில் ”அரசியலில் இதுவெல்லாம் சாதாரணமப்பா” என்று கூறியிருப்பார். இந்த முன்னோட்டம் எல்லாம் இப்போது எதற்கு என்று கேட்டீர்களானால் இலங்கையில் தற்போதுள்ள ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் சில எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த ”அரசியலில் இதுவெல்லாம் சாதாரணமப்பா”என்ற பொது விதியை கடைப்பிடிக்கத் தொடங்கி தமது கட்சி, கொள்கை, இலக்கு .உரிமை என்ற ஆடைகளைக் கழற்றி அம்மணமாகத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறாக அம்மண அரசியல் செய்யத் தொடங்கியுள்ளவர்களில் மூவர்தான் தற்போதைய அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகின்றனர் .ஒருவர் ஜனநாயகத் தமிழ் தேசியக்கூட்டணியின் வன்னிமாவட்ட எம்.பி.யும் தமிழீழவிடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன். அடுத்தவர் சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன் . மற்றயவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான ஹிஸ்புல்லா.எதிர்கட்சிகளை சேர்ந்த இந்த மூவரிடையில்தான் இப்போது ஜனாதிபதி அநுரகுமாரவையும் அவரது ஆட்சியையும் புகழ்ந்து தள்ளுவதிலும் அதன் மூலம் அரசுக்கு கூஜா தூக்குவதிலும் ”நீயா நானா”போட்டி ஏற்பட்டுள்ளது.
சரி இவர்கள் ஏன் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும் அவரது அரசுக்கும் புகழ்மாலை சூடுகின்றனர்?.தற்போதைய ஆட்சி ஆகா, ஓகோ,அற்புதம் என வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றனர் என்று பார்த்தால் அதற்கு பின்னாலும் ஒரு ”தற்காப்பு அரசியல்”அல்லது ”சரணாகதி அரசியல் ” இருப்பதனைக் கண்டு கொள்ள முடியும் .இவர்கள் அந்தளவுக்கு தற்காப்பு,சரணாகதி அரசியலில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன?தமது மக்களின் உரிமைக்காக ஆயுத வழியில் போராடியமையா அல்லது அகிம்சை வழியில் போராடியமையா அல்லது மக்களுக்காக ஏதாவது சட்டத்தை மீறி செயற்பட்டார்களா அல்லது மக்களுக்காக குரல் கொடுப்பதற்காக இவர்களுக்கு ஏதாவது கொலை அச்சுறுத்தல்கள் உயிராபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வாறு தற்காப்பு அரசியலில் ஈடுபட்டு தம்மை பாதுகாக்க முயற்சிக்கின்றார்களா என்று பார்த்தால் அப்படி எந்த மண்ணும் கிடையாது.
இதில் முதலாவது தற்காப்பு அரசியல் போராளியான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. யின் இந்த சரணாகதி அரசியலுக்கு காரணம் என்னவென்பதனைப் பார்ப்போம். ரெலோ தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் என்பவருடன் தொலைபேசியில் உரையாடுகின்ற ஒரு குரல் பதிவு சமூக ஊடகங்களில் வெளியானது. குறித்த குரல் பதிவில் செல்வம் எம்.பியுடன் பல வருடங்களாக இருந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளமை பற்றி பல்வேறு விடயங்கள் உரையாடப்படுவதுடன் செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் என்ற நபருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றார்.அதாவது மீண்டும் அந்த யுவதியை தன்னிடம் ஒப்படைக்காது விட்டால் அல்லது அவரை வைத்திருக்கும் இடத்தை குறிப்பிடாது விட்டால் உன்னை உயிருடன் விடமாட்டேன் என செல்வம் எம்.பி எச்சரிக்கின்றார்.
இதனையடுத்து, சில நாட்களின் பின்னர் சுரேஷ் என்கின்ற அந்த நபர் அதாவது செல்வம் அடைக்கலநாதனின் கார் சாரதியான அந்த நபர் நீர்கொழுப்பு பகுதியிலே தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளாரா அல்லது செல்வம் அடைக்கலநாதன் விடுத்த கொலை அச்சுறுத்தலை நிறைவேற்றினாரா என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன .மேலும், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன .குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,இந்நிலையில் அண்மைய தினங்களாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களையடுத்து நடைபெற்ற ரெலோ கட்சியின் தலைமைக் குழு கூட்டத்திலும் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் செல்வம் அடைக்கலநாதன் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டதையடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தார்.கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யின் வாகனம் திடீரென தீப் பிடித்து எரிந்து நாசமானது இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றது. இச் சம்பவத்தின் போது வாகனத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.பயணிக்கவில்லை.இதனால் இந்த தீ விபத்துசம்பவம் கூட சாட்சியங்களை அழிப்பதற்கான திட்ட மிட்ட தீவிபத்தாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டன .
இவ்வாறாக செல்வம் எம்.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வலுபெற்று வந்ததுடன் அவரின் மேலும் பல குரல்பதிவுகள் வெளியிடப்படும் என்ற அறிவிப்புகளும் வந்த நிலையில் செல்வம் எம்.பி. எவ்வேளையிலும் பொலிஸாரின் விசாரணைகளுக்குட்படுத்தப்படலாம், கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையிலேயே அவர் தனது கட்சி,கொள்கை, உரிமை, இலக்கு ,கோஷம் எல்லாவற்றையும் ”ஒரு யுவதிக்காக” கைவிட்டு தற்போது குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பொலிஸாரின் விசாரணைகள்,கைதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவும் ஜனாதிபதி அநுரகுமாரவை புகழ்ந்து தள்ளுவதுடன் அவரது ஆட்சியையும் பாராட்டித் தள்ளுகின்றார்.இதனை செல்வம் அடைக்கலந்தான் எம்.பி. யின் அண்மைய வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற உரைகளில் அவதானிக்க முடியும்.
அடுத்த தற்காப்பு போராளியானவர் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் போன்று தமிழ் மக்களுக்காக தமிழ் மொழியில் உணர்ச்சிபூர்வ கோபாவேச உரைகளையும் சிங்களவர்களை திருப்திப்படுத்த சிங்கள மொழியில் ஆட்சியாளர்களையும் இராணுவத்தினரையும் புகழ்ந்து தள்ளும் உரைகளையும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளை மிகவும் கீழ்த்தரமாக விமர் சிக்கும் உரைகளையும் ஆற்றிவரும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. .இவர் எதற்காக சிங்கள மொழியில் அரசை,இராணுவத்தை புகழ்ந்து பேசி தன்னை தற்காத்துக்கொள்ள முற்படுகின்றார் என்று பார்த்தால் அதற்கு பின்னால் அவரின் எம்.பி. பதவியின் ஆயுள் காலம் தங்கியுள்ளதை காண முடியும்.
2024 ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரச மருத்துவ அதிகாரியான அர்ச்சுனா இராமநாதன் அப் பதவியிலிருந்து விலகாமல் தேர்தலில் போட்டியிட்டதாகவும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 91(1)(e) பிரிவை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹேரத் என்பவரால் அர்ச்சுனாவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இதில் அர்ச்சுனா பதவி விலகாமல் போட்டியிட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில் அர்ச்சுனாவின் எம்.பி. பதவியை வறிதாக்கி அதாவது அர்ச்சுனாவை எம்.பி. பதவியிலிருந்து நீக்கும் தீர்ப்பு எந்த வேளை யும் வெளிவரக்கூடிய நிலையுள்ளது . இந்நிலையில் தனது எம்.பி. பதவியை பாதுகாத்துக்கொள்ள சிங்கள மொழியில் அரசையும் இராணுவத்தையும் புகழ்ந்தும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளை இகழ்ந்தும் பேசும் தற்காப்பு அரசியலை இறுதி முயற்சியாக முன்னெடுத்து வருகின்றார்.
அடுத்தவர் இலங்கையின் ”தங்க மகன்”ஆக மாறியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான ஹிஸ்புல்லா.இந்த ஹிஸ்புல்லா போலித் தங்க ஒப்பந்தத்தில் 2 மில்லியன் டொலர் மோசடி செய்ததாக கானா நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.ஹிஸ்புல்லா வழங்கிய முறைப்பாடடின் அடிப்படையில் மோசடிக்கு ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 11 சந்தேக நபர்களுக்கு கானா நாட்டின் அக்ரா வட்டார நீதிமன்றம் பிணை வழங்கியதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.தங்கத்தை வழங்குவதாக உறுதியளித்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை வழங்கத் தவறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கானா ஊடக தகவல்படி, இந்த சந்தேக நபர்கள் மீது குற்றச் சதி, போலி வாக்குறுதிகள் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சம் கானா சேடி (Ghana Cedi) பிணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. இந்த சந்தேக நபர்கள், தங்கம் விற்பனை செய்வதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றும் ஒரு சர்வதேச மோசடிக் கும்பலின் ஒரு பகுதியினர் எனவும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது விசாரணைகளின்படி, 2023 ஆம் ஆண்டில், அல்மாமூடி சலே என்பவரும் அவரது கூட்டாளிகள், தங்கம் வழங்குவதாகக் கூறி, இந்த ஹிஸ்புல்லா எம்.பி.யிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளனர். பணத்தைப் பெற்ற பிறகு, அவர்கள் உறுதியளித்தபடி தங்கத்தை வழங்கத் தவறியதுடன், ஹிஸ்புல்லாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளனர்.
பின்னர், இந்த சந்தேக நபர்கள் மீண்டும் ஹிஸ்புல்லாவை தொடர்பு கொண்டு, 50 கிலோ தங்கம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், அந்தப் பரிவர்த்தனைக்கு சட்டப்பூர்வ தன்மையை வழங்குவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளனர். இதனையடுத்து, உத்தியோகபூர்வ முறைப்பாடொன்று கிடைத்ததையடுத்து, கானா தேசிய பாதுகாப்புக் குழுவினர் கடந்த 16 ஆம் திகதி, வெய்ஜா என்ற இடத்தில் வைத்து இந்த 11 சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.ஆனால் தங்க வியாபாரத்தில் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக கானா ஊடகங்களில் வெளிவந்ததாகக் கூறப்பட்டு, பல ஊடகங்களில் வெளியான செய்தியை அவரது ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது. அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டது .இவ்விடயம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது ,இந்த தங்க மோசடி தொடர்பில் ஹிஸ்புல்லா எம்.பி. விசாரிக்கப்படலாம் , கைது செய்யப்படலாம் என்ற எதிர்வு கூறல்கள் வலுத்த நிலையிலேயே தற்போது ஹிஸ்புல்லா எம்.பி. எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் புகழ்ந்து பேசி அவர்களை குஷிப்படுத்தி தன் மீதான விசாரணைகளிலிருந்து தப்பிக்கும் தற்காப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்றார்.
சிறுபான்மையினங்களான தமிழ் , முஸ்லிம் மக்களின் பாதுகாவலர்களாக, உரிமைப் போராளிகளாக இன உணர்வாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரில் தற்போது இந்த மூவரும் பெண்ணுக்காகவும் பதவிக்காகவும் தங்கத்திற்காவும் அநுரகுமார அரசு முன்பாக மண்டியிடத் தொடங்கியுள்ளனர். இன்னும் எத்தனை பேர் இவ்வாறு ”புலித் தோல் போர்த்திய நரி” களாக இருக்கின்றனர் என்பதனை போகபோகத்தெரிந்து கொள்ள முடியும்.
























