(கனகராசா சரவணன் )
மட்டக்களப்பில் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை 15ம் திகதி அன்று திங்கட்கிழமை (15-12-2025 )முற்றுகையிட்டதையடுத்து குறித்த கோரிக்கை தொடர்பாக விசாரணை செய்து பாதிப்பு தொடர்பாக உண்மை தன்மை அறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வழங்கிய உறுதிமொழி அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்ததினால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் பணம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவ தினமான அன்று காலை 10 மணிக்கு புன்னைச்சோலை பகுதியில் ஒன்று திரண்டனர்.
இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் பணம் வழங்குமாறும் கோரி அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பித்து மாமாங்கம் ஆலய வீதி வழியாக சென்று பார்வீதியை அடைந்து அங்கிருந்து அரசடி வீதி சுற்று வட்டத்தை அடைந்து அங்கிருந்து நகர் மணிக்கூட்டு கோபுரத்தை சென்று அங்கிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சென்று அதனை முற்றுகையிட்டனர்
இதனை அறிந்து அங்கு சென்ற தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கரந்துரையாடிதுடன் கிராம உத்தியோகத்தர் தொடர்பான தீர விசாரணை செய்வதுடன் நிவாரணம் தொடர்பாக உண்மை தன்மையை கண்டறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்த வாக்கு உறுதி ஒன்றை வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.;
இதேவேளை இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க. பிரபு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் பாதிக்கபட்டபோது கிராம உத்தியோகத்தர் தம்மை பார்வையிடவில்லை எனவும் இதனூடாக வெள்ள நிவாரணம் தமக்கு கிடைக்க வில்லை எனவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அரசாங்கத்தால் சரியாக கொடுப்பனவு கிடைக்கவில்லை என கோரிக்கைகளை முன்வைத்தனர் எனவே நாங்கள் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை மேற்கொள்வோம் நிவாரணம் கிடைக்கப் பெறுவது சம்பந்தமாக ஒரு பரிசீலனை செய்து கொண்டு சரியாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வோம்.என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டார் அது வெகு விரைவில் இடம்பெறும்.
அதேவேளை கிராம உத்தியோகத்தர் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக நாங்கள் உரிய பரிசீலனை செய்து அவரது செயல்பாடு தவறாக இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்போம் என்றார்
இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக தேடி பார்கின்ற போது ஒரு அரசியல் பின்னணியில் செயற்படுகின்றது என்பதை புரிந்து கொண்டுள்ளோம் அத்துடன் கடந்த காலத்தில் மக்களின் நிதிகளை வீணடித்தவர்கள் அவர்களின் கோரிக்கைகளை செவிசாய்க்கதவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த அரசியல்வாதிகளுடன் தொடர்புபட்டவர்கள் ஏற்படுத்திய விசமத்தனமானதாக பார்கின்றோம்.
உண்மையில் ஆர்ப்பாட்டம் ஊடாகத்தான் தீர்வுகளை பெற்று;கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை நேரடியாக நீங்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் அதுவும் உங்களுக்கு செயல்படுத்த முடியவில்லை என்றால் அரசாங்க அதிபர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும் அதுவும் முடியவில்லை என்றால் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் அரசாங்கம் என்ற ரீதியில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
























