அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி காலமானார். வயது (80). அவரது மரணத்தை வங்கதேச தேசியவாத கட்சி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. கலிதா ஜியா மறைவால் அவரது கட்சித் தொண்டர்களும், மக்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். கலிதா ஜியா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலீதா ஜியாவின் மறைவைத் தொடர்ந்து, வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ஒரு நாள் பொது விடுமுறை விடப்படும் என்றும் அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவித்துள்ளார். கலீதா ஜியாவின் உடலுக்கு நாளை இறுதி சடங்குகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
























