தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என சூளுரைத்தார். இந்த சூழலில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் நேற்று சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இந்த நிலையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இறையாண்மை கொண்ட நாட்டை தாக்குவது கூட்டாட்சி தத்துவம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் போர் செயல். நான் அதிபர் டிரம்ப்பை தொடர்பு கொண்டு எனது எதிர்ப்பை பதிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
























