திஸ்ஸ விகாரை விவகாரம் ஒரு காணிப்பிரச்சினை மட்டுமல்ல. சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்.
வருஷம் பிறந்த மூன்றாம் நாள் யாழ்ப்பாணத்தில் “நோ லிமிட்” திறக்கப்பட்டது. அன்றைக்கு பௌர்ணமி.அன்றைய நாளில் தையிட்டியில் வழமையைவிட அதிக மக்கள் போராட்டத்தில் பங்குபற்றினார்கள்.எனினும்,நோ லிமிட்டில்தான் அதிக தொகை மக்கள் நின்றார்கள்.
வழமையாக தையிட்டிப் போராட்டத்தை முன்னெடுத்து வருவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். ஆனால் கடந்த இரண்டு போராட்டங்களின் போதும் அந்தக் கட்சியின் தலைவர்கள் அரங்கில் நிற்கவில்லை.அவர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார்கள்.எனவே அந்தக் கட்சியின் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்கள் தையிட்டியில் காணப்பட்டார்கள்.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் அங்கே காணப்பட்டார்கள்.அங்கு வந்திருந்த மக்களுக்கு நிகராக அதிக தொகை போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். எனினும் போலீசார் போராட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகத்தை மேற்கொள்ளவில்லை.
கடந்த மூன்றாம் திகதி அப்படி ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பின்னணியில், போராட்டத்தைக் குழப்பும் நோக்கத்தோடு அரசாங்கம் சில சூழ்ச்சிகளைச் செய்ததாக காணி உரிமையாளராகிய ஒரு பெண் குற்றச்சாட்டுகிறார்.மூன்றாம் திகதி,அதாவது பௌர்ணமி நாள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கத்தோடு அதற்கும் நான்கு நாட்கள் முன்னதாக, யாழ்.அரச அதிபர் காணி உரிமையாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது விகாரை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள காணிகளை நான்கு கட்டங்களில் படிப்படியாக விடுவிப்பது என்று ஒரு இணக்கம் காணப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவ்வாறு நான்கு கட்டங்களாக விடுவிப்பது என்பது காலத்தைக் கடத்தும் ஒரு வேலைதான் என்ற பொருள்பட நயினாதீவில் அமைந்திருக்கும் பௌத்த விகாரையின் விகாராதிபதி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
தையிட்டியில் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை ஒரு விவகாரமாக எழுந்த காலத்தில் இருந்து நயினாதீவு விகாராதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சாதகமாகக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.அண்மையில் அவர் “டாண் தொலைக்காட்சிக்கு” வழங்கிய பேட்டியில் அரசாங்கத்துக்கு எதிராகவும், தையிட்டி விகாரை கட்டப்பட்டமைக்கு எதிராகவும், எல்லாவற்றையும் விட முக்கியமாக பலம் பாய்ந்த மகா சங்கங்களின் மகாநாயக்கர்களுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
நயினாதீவு விகாரை என்பது தமிழ்ப் பகுதிகளில் உள்ள மிகப் பலமான விகாரைகளில் ஒன்று.தொடர்ச்சியாக அந்த இடத்தில் காணப்படுவது. போர்காலங்களிலும் கடற் படையினரின் பாதுகாப்போடு அந்த விகாரை அங்கேயே இருந்தது. அந்த விகாராதிபதியின் முகநூல் பக்கத்தில் ஏராளம் தமிழ் நண்பர்கள் உண்டு. அவர் தமிழ் கதைப்பார். அவருக்கும் திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் இடையில் ஏதோ முரண்பாடு உள்ளது என்பது ஏற்கனவே தெரிய வந்த ஒன்று. இப்பொழுது அவர் வெளிப்படையாகவே திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும் அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராகவும் கதைக்கிறார்.
இவ்வாறு ஒரு விகாராதிபதி அதுவும் வடக்கில் உள்ள முக்கியத்துவம் மிக்க ஒரு விகாரையின் அதிபதி பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று கதைப்பது என்பது வழமைக்கு மாறானது.ஆனால் அரசாங்கம் அந்த விகாரதிபதியை ஒரு கருவியாகக் கையாண்டு தமிழ் மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போக வைக்க முயற்சிக்கின்றது என்ற ஒரு விமர்சனமும் உண்டு. கடந்த மூன்றாம் திகதி போராட்டத்தின் பின் அந்த விகாரதிபதி யாழ். அரச அதிபரை சந்தித்தார்.அந்த சந்திப்பின்போது காணிகளை படிப்படியாக விடுவிப்பது தொடர்பாக உரையாடப்பட்டதாகத் தெரிகிறது.
“இது காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் இடையிலான ஒரு பிரச்சினை. இதில் வேறு தரப்பினர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்… காணி உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் செயல்படாது பொறுமை காக்க வேண்டும் ” என்று நீதி அமைச்சரும் சட்டத்தரணிமான ஹர்ஷண நாணயக்கார பௌர்ணமிக்கு அடுத்த நாள் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் மேற்படி கருத்தானது அரசாங்கம் விவகாரத்தை ஒரு காணி பிரச்சினையாகத் தீர்க்க முற்படுவதைக் காட்டுகிறது. அதனை அரச உயர் அதிகாரிகளுக்கு ஊடாக தீர்க்க முற்படுவதையும் காட்டுகிறது. ஆனால் திஸ்ஸ விகாரை விவகாரம் ஒரு காணிப்பிரச்சினை மட்டுமல்ல. சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்.
திஸ்ஸ விகாரை விவகாரம் என்பது சட்ட நோக்கு நிலையிலும் காணி உரிமையாளர்களின் நோக்கு நிலையிலும் காணி அபகரிப்பாக இருக்கலாம்.ஆனால் இங்கே அந்தக் காணியை அபகரித்து வைத்திருப்பது ஒரு விகாராதிபதி அல்ல. அவர் நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு கூட்டுச் செயற்பாட்டின் ஒரு கருவி மட்டுமே. அந்த விகாரைக்கு அத்திவாரம் போட்டது ராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா.அந்த விகாரையை பகலும் இரவும் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பியது படையினர். அந்த விகாரைக்கு பாதுகாப்பு வழங்குவது படையினரும் போலீசாரும்.அந்த விகாரையின் அதிபதிக்கு அவர் சார்ந்த பௌத்த மகா சங்கத்தின் வடபகுதிக்கான உயர் பதவியை வழங்கியது அரசாங்கம்.
எனவே இது ஒரு கூட்டுச் செயற்பாடு. கூட்டு ஆக்கிரமிப்பு. அதை அதன் அரசியல் அடர்த்திகூடாக சித்தரித்தால் அது மிகத் தெளிவான ஒரு நிலப் பறிப்பு நடவடிக்கை. மிகத் தெளிவான ஒரு சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கை. அதாவது 2009 க்கு பின்னரான ஆக்கிரமிப்பின் ஆகப் பிந்திய உதாரணம்.
எனவே அதனை அதற்குரிய அரசியல் பரிமாணத்தோடுதான் அணுக வேண்டும். காணி உரிமையாளர்களை அழைத்து அரசு அதிபர் பேசுவதனாலோ அல்லது அரசு அதிபரும் காணி உரிமையாளர்களும் விகாரதிபதிகளும் பேசுவதனாலோ இந்தப் பிரச்சினை தீர்த்துவிடாது. அதற்கு அரசியல் தீர்வு வேண்டும். இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை இல்லை என்று கூறுகிறது. தான் இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் தையிட்டியில் நடப்பது சிங்கள பௌத்த மயமாக்கல்தான். இனவாத நடவடிக்கைதான்.அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் கட்டமைப்புசார் இன அழிப்பு.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கொதி நிலையில் வைத்திருந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் அந்தக் கட்சி தையிட்டியில் போராடும்.ஆனால் அந்தப் போராட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டும்தான் பங்கு பற்றுவதுண்டு. அவை மக்கள் மயப்பட்ட போராட்டங்களாக அநேகமாக இருப்பதில்லை.எனினும் சில விசேஷ தினங்களில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும்,சிவில் சமூகங்களும் இணையும்போது அந்தப் போராட்டத்தில் பெருமளவு சனத் தொகையைக் காண முடிவதுண்டு.
திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது.இப்போராட்டங்களில் சில நாட்களில் அதிக தொகை மக்கள் வருவார்கள். அதற்கு காரணம் அங்கே எல்லா கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மதகுருக்களும் கூடுவதுதான். கடந்த பௌர்ணமி நாளன்றும் அதுவே நடந்தது. அதற்கு முதலில் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திலும் அவ்வாறு அதிகளவு ஜனத்தொகையை காண முடிந்தது.அந்தப் போராட்டத்திற்கு அதாவது ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரதேச சபை.
பிரதேச சபை,திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அன்றைய நாளில் போராடுவதற்கு எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. அந்த நாளுக்குள்ள முக்கியத்துவம் என்னவென்றால், அன்றைக்குத்தான் அந்த விகாரையின் அதிபதிக்கு கொழும்பில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அன்றைய போராட்டத்திலும் கூடியிருந்த மக்களுக்கு நிகராக போலீசார் வந்திருந்தார்கள் யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த போலீஸ் பொறுப்பதிகாரிகள் அங்கே தருவிக்கப்பட்டிருந்தார்கள்.ஒரு கட்டத்தில் போலீசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு ஐந்து பேர்களைக் கைது செய்தார்கள்.அது ஓர் விவகாரமாக மாறியது.
அத்தகைய ஒரு பின்னணியில் அதற்குப் பின்வந்த பௌர்ணமி நாளில் நடக்கவிருந்த போராட்டமும் பிரம்மாண்டமானதாக மாறக்கூடிய ஆபத்துக்களை உணர்ந்த அரசாங்கம் அந்தப் போராட்டத்தை திசைதிருப்பும் நோக்கத்தோடு அரச அதிபருக்கு ஊடாக ஒரு சமரச நகர்வை முன்னெடுத்ததாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதே காலப்பகுதியில் திஸ்ஸ விகாரையின் அதிபதியும் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய விதத்தில் சில விடையங்களை தெரிவித்திருந்தார்.தவிர நைனாதீவின் விகாராதிபதி பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார்.
இப்பொழுது நீதி அமைச்சர் கூறுகிறார் அது திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒரு காணிப் பிரச்சினை என்று. இல்லை.அது காணிப் பிரச்சினை மட்டுமல்ல.அது இன அழிப்பின் ஒரு வடிவம்.எனவே அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு. காணி உரிமையாளர்கள் மட்டும் அரசாங்கத்தோடு பேச முடியாது. அந்தப் போராட்டத்தை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் மதகுருக்களும் அந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க வேண்டும். ஓர் அரசியல் பிரச்சினையைத் தனியாக காணிப் பிரச்சினையாக அல்லது சட்டப் பிரச்சினையாகச் சுருக்குவது என்பது அந்த பிரச்சினையின் அரசியல் அடர்த்தியைக் குறைக்கும் தந்திரம்தான்.
15 மாதங்களுக்கு முன்பு மாற்றத்தை கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது,தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாற்றத்தைக் காட்ட வேண்டிய ஒரு களம் அது.ஆனால் அனுர அரசாங்கம் திஸ்ஸ விகாரை விடயத்தில் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதற்குள்ள இன முரண்பாட்டு, இனப்பிரச்சினைப் பரிமாணத்தை இல்லாமல் செய்து விட்டு அதை வெறும் காணிப் பிரச்சினையாகக் காட்டப் பார்க்கின்றது. புத்த பகவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார். ஆனால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை விடயத்தில் மாற்றம் இன்மைதான் மாறாததா?
























