”திஸ்ஸ விகாரை என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்பதற்கான உரிமைப் போராட்டத்திற்கான அழைப்பை ஏற்று வீதிக்கு வராத யாழ்ப்பாணத்து மக்கள், அதே நாளில் யாழ்ப்பாண நகரில் நடந்த காத்தான்குடி வர்த்தகர் ஒருவரின் ஆடையகத் திறப்புவிழாவின் ”20 வீத கழிவு” விளம்பரத்திற்காக யாழ்ப்பாண நகர வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு முட்டி மோதினர்”– ”யாழ் மண்ணே வணக்கம்”என்ற அந்த ஆடையகத்தின் விளம்பரத்திற்கு பதிலாக ”யாழ் மண்ணே உனக்கு இது அவமானம்” என்பதாகவே உள்ளது.
-கே.பாலா
தமிழ் தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்கான உரிமைகள்,தீர்வுகளில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு இரண்டுபட்டுப்போய் முரண்டு பிடித்து நிற்கின்றனவோ அதேபோன்றே வடக்கு மாகாண தமிழ் தேசிய இனமும் தமக்கான உரிமைகள், தீர்வுகள் ,காணி உரிமைகள் ,இன ஒற்றுமை விடயத்தில் இரண்டுபட்டுப்போயிருப்பதை அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் நடந்த இரு வேறு சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
தற்போது வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தையிட்டிப்பகுதியில் அமைக்கப்பட்டுவரும் ”தையிட்டி திஸ்ஸ விகாரை” ஒரு இன ,மதப் பிரச்சினையாக உருவெடுத்து வடக்கு மாகாணத்தை மட்டுமன்றி முழுநாட்டையும் கொதிப்படைய வைத்துள்ளதுடன் தீவிர சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளையும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறாக சிங்கள-தமிழ் இனங்களிடையில் இன -மத முரண்பாடுகளை தீவிரப்படுத்தியிருக்கும் இந்த திஸ்ஸ விகாரை குறித்து சுருக்கமான ஒரு விளக்கம் ;
இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையி லான யுத்தம் தீவிரமடைந்த 1990-ஆம் ஆண்டு காலப் பகுதியில் தையிட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். இவ்வாறு தையிட்டி பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய 90ஆம் ஆண்டு காலப் பகுதியில் அந்த இடத்திற்கு பௌத்த விகாரையொன்று காணப்பட்டுள்ளது. ஆனால் திஸ்ஸ விகாரை என்று அது அப்போது அழைக்கப்படவில்லை. யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் இராணுவ வசமிருந்துள்ளன.இவ்வாறு இராணுவ வசமிருந்த காணிகள் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் , விடுவிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளை அந்த விகாரையிலுள்ள பௌத்த மதகுருமார்கள் கைப்பற்றி, இராணுவத்தின் உதவியுடன் ”திஸ்ஸ விகாரை” என்ற பெயரில் மிகப் பிராமண்டமான விகாரை ஒன்றை அமைத்து தற்போது அதனை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய வடக்கு மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது இந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.அதன்பின்னர் அப்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரே 2018-ஆம் ஆண்டில் அந்த விகாரைக்கு இன்னொரு அடிக்கல்லை நாட்டினார்.2022 ஆம் ஆண்டில் முப்படைகளின் தளபதியாகவிருந்த சவேந்திர சில்வாவினால் தாதுகோபத்தின் கலசம் வைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில்தான் தமது காணிகளை ஆக்கிரமித்து இந்த சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டப்படுவதாகவும் தமது காணிகளை தமக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி அப்பகுதி தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ச,மைத்திரி-ரணில் நல்லாட்சி,கோத்தபாய ராஜபக்ச, ரணில் ,தற்போது அநுர குமார ஆட்சியென நீண்ட காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்குக் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் உரிமைக்காரர்கள் கிட்டத்தட்ட எல்லோரிடமும் தொடர்ச்சியான உறுதிகள் இருக்கின்றன.இந்த நீடித்த தொடர்புகள் மற்றும் காணி உறுதிகளின் நம்பத்தகு தன்மை போன்றன நயினாதீவு நாகதீப விகாரையாலும் யாழ்ப்பாணம் நாகவிகாரையாலும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தாலும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தாலும் நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு போன்றவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அக்காணி திஸ்ஸ விகாரைக்குரியது என விகாரை காராதிபதி விடாப்பிடியாக நிற்கின்றார். இதனால் தமது காணிகளை மீட்டெடுப்பதற்காக காணி உரிமையாளர்களும் சமூக ஆர்வலர்களும் சில அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு போயாதினத்திலும் அந்த விகாரை முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் பொலிஸார் அடாவடித்தனமாக அவர்களை கைது செய்வதும் தாக்குவதும் நீதிமன்ற கட்டளைகளைப்பெற்று ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிப்பதும் தொடர்கதையாகவுள்ளது,
இதன் உச்சக்கட்டமாக அண்மையில் திஸ்ஸ விகாரை முன்பாக வழக்கம்போல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைவ மதத் தலைவரும் மனித உரிமைப் பாதுகாவலருமான வேலன் சுவாமிகள்,பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன்,வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டு பலவந்தமாக கைது செய்யப்பட்டு பொலிஸ் வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர். பொலிஸாரின் இந்த அராஜக நடவடிக்கையால் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை விடயம் இன்னும் பூதாகாரமானது.வெளிநாடுகளின் தூதரகங்கள் மூலம் சர்வதேசத்தின் கவனத்தையும் பெற்றது .
இந்நிலையில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகள் தமிழ் மக்களுக்குரியவை .அந்த திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது என நயினாதீவு நாகதீப விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் அடித்துக்கூறுகின்றார். திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாக நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் செயற்பட்டாலும், திஸ்ஸ விகாரைக்கான கண்காணிப்பு பொறுப்பு மற்றுமொரு பௌத்த பிக்குவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பௌத்த பிக்குவே, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் கூறுகின்றார்
‘இந்த திஸ்ஸ விகாரை பிக்கு இராணுவத்துடன் இணைந்து விகாரையின் காணியில் இல்லாது, தமிழ் மக்களின் காணிகளில் தற்போதுள்ள விகாரையை கட்டியுள்ளார். இது தவறு என நான் முதலில் இருந்தே கூறி வருகின்றேன். விகாரைக்கு 18 ஏக்கர் காணி இருக்கின்றது. இது திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது என கூறுகின்றனர். திஸ்ஸ விகாரைக்கு என்று காணி உறுதிப்பத்திரம் இருக்கின்றது. அந்த காணிகள் அந்த மக்கள் இருக்க வேண்டும். நான் தானே அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும்.தமிழ் மக்களிடம் காணி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றன. வெசாக் உற்சவத்திற்கு அரசாங்கத்தினால் விகாரைகளுக்கு பணம் வழங்கப்பட்டது. திஸ்ஸ விகாரைக்கும் பணம் வழங்கப்பட்டது. அந்த பிக்குவுடன் இணைந்து இராணுவம் பணத்தை பெற்று தமிழ் மக்களின் காணிகளில் அந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . திஸ்ஸ விகாரைக்கு கிடைத்த பணத்தை கொண்டு, ஏனையோரின் காணிகளில் விகாரையை நிர்மாணித்தது சட்டவிரோதமானது. தமது காணிகளை கோரியே தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்
தற்போதுள்ள நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையை உடைக்க முடியாது. அவ்வாறு உடைத்தால் வேறு பிரச்சினை வரும். அதனால், எனது காணியை தருகின்றேன் என நான் தமிழ் மக்களிடம் கூறினேன். நான் ஏனைய பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடினேன். தற்போதுள்ள பிக்குவிடம் உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை ஏனையோர் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் காணி விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அது நியாயமான போராட்டம். நான் பௌத்தம் என்றாலும், எமது காணிகளில் விகாரையை கட்ட வந்தால் எமது மக்களும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா?அது தெளிவாகவே தமிழ் மக்களின் காணிகள். வேண்டுமென்றே இராணுவத்துடன் இணைந்து இதனை செய்கின்றனர். எங்களையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீதி தடையை ஏற்படுத்தியே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டது.” என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறாக தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர்,யாழ். நாகவிகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் ஆகியோர் தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்துவரும் நிலையில அதற்கு மேலும் பலம் சேர்ப்பதற்காக கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரை முன்பாக பாரியதொரு போராட்டத்திற்கு காணி உரிமையாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் , யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டது. அன்றையதினம் பல நூற்றுக்கணங்கனவர்கள் திஸ்ஸ விகாரை முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் களம் இறங்கியதனால் பல்லாயிரக்கணக்கான் மக்கள் ஒன்றுதிரள்வார்கள் என எதிர்பார்த்து திஸ்ஸ விகாரை முன்பாக ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தமிழ் தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்கான உரிமைகள்,தீர்வுகளில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு இரண்டுபட்டுப்போய் முரண்டு பிடித்து நிற்கின்றனவோ அதேபோன்றே வடக்கு மாகாண தமிழ் தேசிய இனமும் தமக்கான உரிமைகள், தீர்வுகள் விடயத்தில் இரண்டுபட்டுப்போயிருப்பதை அன்றைய தினமான சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டமும் யாழ் நகரில் புதிதாக திறக்கப்பட்ட காத்தான்குடி வர்த்தகருக்கு சொந்தமான கொழும்பு, நீர் கொழும்பு,பாணந்துறை,இரத்மலானை,இரத்தினபுரி ,கண்டி,கேகாலை போன்ற நகரங்களில் கிளைகளை வைத்துள்ள ”நோலிமிட்” ஆடையகத்தின் யாழ்பாணத்துக்கிளை திறப்பு விழாவும் வெளிச்சம் போட்டுக் காட்டின.
தையிட்டி விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிரான அன்றைய தின போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு அது முழுநாட்டினதும் மட்டுமன்றி சர்வதேசத்தினதும் கவனத்தைப்பெற்ற நிலையில் . அந்த மக்களின் காணி உரிமை , சிங்கள,பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் சில நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த ”நோ லிமிட்” ஆடையகத் திறப்பு விழாவுக்கு அறிவிக்கப்பட்ட ”20 வீத விலைக் கழிவை” பெறுவதற்காக ஆயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டம் தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய அரசியல் வீழ்ச்சியை தமிழ் தேசிய கொள்கையில் இரண்டுபட்டுப் போயுள்ளதை அப்பட்டமாக வெளிக்காட்டியது. தமிழ் மக்களின் நிலம் பறிபோகும் நிலையில் அதனைப் பாதுகாக்கும் உரிமைப் போராட்டத்திற்காக வீதிக்கு வராத மக்கள், ஒரு ஆடையகத் திறப்புவிழாவின் ”20 வீத கழிவு” விளம்பரத்திற்காக யாழ்பாணத்து வீதிகளில் திரண்டது ”யாழ் மண்ணே வணக்கம்”என்ற அந்த ஆடையகத்தின் விளம்பரத்திற்கு பதிலாக ”யாழ் மண்ணே அவமானம்” என்பதாகவே உள்ளது.
























