– பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ஆனந்த விஜயபால!
விஷ போதைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” (ரக்ட்ட எகட்ட) தேசிய செயற்பாட்டு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் மாவட்ட செயற்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்படுவதாகவும், நாட்டிற்கு கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை இல்லாது ஒழிப்பதும், அதன் வளங்களை இல்லாது அழிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும் என மாவட்டச் செயலகத்தில் 14ம் திகதிபுதன்கிழமை அன்றைய தினம் (14.01.2026) நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் தெரிவிக்கையில், இதற்காக மாவட்ட மட்ட செயற்பாட்டு குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு உரிய முறையில் பொலீஸ் மற்றும் பிரதேச மட்டத்திலே கடமையாற்றுகின்ற உத்தியோகத்தினுடைய வழிப்படுத்தலில் செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்ததார். எனினும் போதைப்பொருளின் பரவலின் ஆபத்தான கட்டம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய சிறுவர்களான நாளைய தலைவர்களை ஆற்றுப்படுத்துகின்ற வழிபடுத்துகின்ற ஒரு அரிய செயற்பாடாக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது எனவும், போதை பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்காக முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு நிகழ்ச்சி திட்டத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட குழுக்களை ஸ்தாபித்தல் நடவடிக்கையில் இன்று கூடியுள்ளதாகவும், இவற்றுக்கு எதிராக முப்படைகளும் பொலிஸ் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும், பொலிஸ், முப்படைகள் மட்டுமே இணைந்து இதனை ஒழிக்க முடியாது எனவும், அனைத்து பொது மக்களும் சேர்ந்தால் இதனை ஒழிக்க முடியும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி தலைமையில் இதற்கான தேசிய சபை நிறுவப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு 25 மாவட்டங்களிலும் மாவட்ட மட்ட குழு அமைக்கப்படும் எனவும், அதனடிப்படையில் இன்று யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்படுவதாகவும், இவ் மாவட்ட மட்டக் குழுவின் தலைவராக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அவர்களும், உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர், பொலிஸ், முப்படை அதிகாரிகள், தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கப்படுவார்கள் எனவும், செயலாளராக அரசாங்க அதிபரும் செயற்படுவார் எனவும் தெரிவித்ததுடன், கட்சி, சாதி, மதம் பேதம் இன்றி குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்காக நாடு முழுவதும் போதை ஒழிப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்த
அனைவரும் உயிர்ப்புடன் இதற்கு பங்களிப்பு செய்வோம் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். மேலும், பாடசாலை மட்டத்தில் இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் அரச திணைக்களங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் போதைப் பொருளுக்கான கோரிக்கைகளை இல்லாது ஒழித்தல்,
இதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் தேசிய ரீதியாக உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், மதத் தலைவர்கள் குழு, புனர்வாழ்வுக்கான குழு , பொதுமக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இச் செய்தியை ஊடகங்கள் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன எனவும், அதே சமயம், நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக் கூறுகளுடன் கூடிய புனர்வாழ்வு நிலையங்கள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் போதைப் பொருள் ஒழிப்பின் பலமான இரு சபைகளாக அபாயகரங்கள் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு சபை மற்றும் புனர்வாழ்வு சபை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும், இந்த நிகழ்வின் வாயிலாக, இதற்கு ஏற்ற ஒரு பொருத்தமான கட்டடத்தை வழங்குவதற்கான நடவடிக்கையினை கடற்றொழி்ல் அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடம் கேட்டுக் கொள்வதாகவும், மேலும், இதனைவிட கல்பிட்டிய, மிகிந்தலை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் இடைத்தங்கல் வீடுகளை ஒதுக்கியுள்ளதாகவும், அந்த மையங்களில் சிகிச்சை பெறுவோருக்காகவும், அவர்களுக்கு சேவை செய்யும் போதிப்பாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்காகவும் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும், சமூகத்தில் காணப்படும் உண்மையான தேவையை கருத்தில் கொண்டு, போதைப் பொருள் அடிமைத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதே பிரதான நோக்கமாகும் எனவும், ஒருவரை குற்றவாளியாக சித்தரிப்பதற்கோ அவர்களை அவமானப்படுத்துவதற்கோ அல்ல எனவும், அவர்களை மீண்டும் நல்ல வாழ்க்கைக்குத் திருப்புவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், இன்றைய சமூகத்தில் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள் எனவும், அவர்களில் பலர் கல்வி கற்கும் மாணவர்களாகவும் இருக்கிறார்கள் எனவும், ஆனால் அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல அஞ்சுகிறார்கள் காரணம் சமூக பழி, அவமானம் மற்றும் நிராகரிப்பு.
அத்தகைய நிலையை மாற்றவே செயற்படுகிறோம் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். மேலும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், அவர்களை நோயாளிகளாகவும் சமூகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்க வேண்டும் எனவும், அவர்களுக்கு சிகிச்சையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததார். மேலும், அவர்களுக்கு தொழில்கல்வி வழங்கி, சுயதொழில் அல்லது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், அவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நிலைக்கு கொண்டு வருவது இச் செயற்றிட்டத்தின் இலக்காகும் எனவும்,
இந்த முயற்சியின் கீழ் சுமார் ஐயாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக கைத்தொழில் அபிவிருத்தி சபை உடன்பட்டிருக்கின்றனர் எனவும், இந்த திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக அல்ல, நடைமுறையில் அமுல்படுத்தப்படும் செயல் திட்டங்களாகவே முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, இது ஒரு குற்றம்சாட்டும் நடவடிக்கை அல்ல மனிதநேய அடிப்படையில், சமூக மீட்புக்கான ஒரு முக்கியமான முயற்சியாகும் எனவும் இந்த பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாகவும், இந்த தேசிய சபையின் தலைவராக ஜனாதிபதி அவர்கள் செயற்படுவார் எனவும் இச் செயற்பாட்டிற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு நம்பிக்கையுடன் தகவல்களை வழங்க முடியுமெனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்து, இச் செயற்றிட்டத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
























