பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்காக மக்கள் ஆணை பெற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் புதிதாக வரைபு செய்துள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு’ வடக்கின் மிகப்பிரதானமான தமிழ் அரசியல் கட்சி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தை விடவும் அபாயகரமான ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குற்றம் சுமத்துகிறார்.
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறி சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதே அவர்கள் அளித்த வாக்குறுதியாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டங்களைக் கொண்டுவருவதாகக் கூறி, அதை விடவும் அபாயகரமான ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.”
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக இதற்கு முன்னர் வரைவு செய்யப்பட்ட இரண்டு சட்டமூலங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கு முன்னர் எவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தது என்பதையும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நினைவுபடுத்தினார்.
“இது தொடர்பாக இதற்கு முன்னதாக இரு தடவைகள் இரண்டு சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அச்சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்ட போதெல்லாம், ஜேவிபி கட்சியினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் எனவும், அதற்கு பதிலாக வேறு சட்டங்களைக் கொண்டுவர வேண்டாம் எனவும் எங்களை விடவும் மேலாக நின்றவர்கள். எங்களை விடவும் மேலாக என்று சொல்லக் காரணம் – நாங்களும் அதே நிலைப்பாட்டிலேயே இருந்தோம் – ஆனால் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் நாங்கள் கலந்துகொண்டோம். அவர்கள் அந்தக் கலந்துரையாடல்களுக்குக் கூட வரவில்லை. வேறு ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது தவறு என்ற ஒரே நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தமையே அதற்குப் பின்னணியில் இருந்த காரணமாகும்.”
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமது கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தம்முடன் கைகோர்த்த மக்கள் விடுதலை முன்னணியானது அன்றைய நிலைப்பாட்டை தற்போது முற்றிலும் தலைகீழாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) ஆகியன மாதாந்தம் நடத்தும் அரசியல் கலந்துரையாடலின் பின்னர் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் (EPRLF) ஊடகப் பேச்சாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாம் 25 மாவட்டங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்த போது எம்முடன் கைகோர்த்து நின்றவர்கள். பல சந்தர்ப்பங்களில் அந்த நிலைப்பாட்டைத் தெளிவாக பகிரங்கமாகவே கூறியவர்கள். இன்று அதனைத் தலைகீழாக மாற்றி இன்னுமொரு சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளார்கள்.”
அந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அரசாங்கத்துக்கு திட்டவட்டமாக வலியுறுத்திய விடயமாவது பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதும் அதற்காக எவ்விதத்திலும் மாற்றீடான ஒரு சட்டம் அவசியமில்லை என்பதும் ஆகும்.
“அதில் உள்ள சில விடயங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் அபாயகரமானவை. இருப்பினும் அந்த விடயங்கள் குறித்துப் பேசுவதற்கு முன்னதாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதும், அதற்குப் பதிலாக எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர வேண்டாம் என்பதுமான எமது நிலைப்பாட்டை அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) ஆகியன 2026 ஜனவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்திய அரசியல் கலந்துரையாடலின்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஆவணப்படுத்துவதற்குத் தீர்மானித்திருந்தன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தினால் புதிதாக வரைவு செய்யப்பட்டு, [http://moj.gov.lk](http://moj.gov.lk) என்ற இணையதளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுமக்கள் தமது கருத்துகளை முன்வைக்க முடியும் எனத் தெரிவித்துள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நானயக்கார, அவற்றை மிக உன்னிப்பாக அவதானித்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டின் பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை மக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இதில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அவை எவை என்பது குறித்த கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தக் காலப்பகுதி திறக்கப்பட்டுள்ளது என நான் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். புதிய கருத்துக்களை வழங்கி, இவற்றை மிக உன்னிப்பாக அவதானித்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.”
90 பக்கங்களைக் கொண்ட அந்தச் சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக ஆரம்பத்தில் ஒரு மாத காலம் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்பை அடுத்து அக்காலப்பகுதி நீடிக்கப்பட்டுள்ளது.
இது ஓர் இறுதியான சட்டம் அல்லவென்றும், மக்களின் கருத்துக்கள் மற்றும் திருத்தங்களுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு சட்டமூலமாகவே மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு காணொளி ஊடாக அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
























