தைமகளே பிறந்துவா தைத்திருநாட் கொண்டாடி
தரணி எங்கும் ஒளிக்கவே!
தேமதுரத் தமிழொலி தேசமெலாம் ஒலித்திட
தாமதம் செய்திடா வருவாய்
நம்பிக்கைக் கீற்று நாளும் தெரியும்
நம்வாழ்வும் நன்றாய்ச் சிறக்கும்
எம்மவர் வாழ்வில் எல்லாம் கிடைக்கும்
எல்லோர் மனதிலும் இனிக்குமே!
முற்றம் முழுதும் முத்தாய்க் கோலமிட்டு
மூலையில் கரும்பு நாட்டியே!
சுற்றியே தோரணத்தால் சோடனை செய்து
சுந்தரமாய் மாவிலை தூக்கினோம்
புதிரெடுத்து நீராடி புத்துடை அணிந்துமே!
; பானையில் புனித நீரிட்டோம்
பதியும் சதியுமாய்ப்; பகலவனை வணங்கியே!
பரமனைப் பணிந்து நின்றோமே!
வெள்ளை வேட்டியுடன் தலைப்பாகை கட்டியே!
வஞ்சிபோல் பானையை அலங்கரித்து
கள்ளமற்ற பாலைக் கலயத்தில் விட்டே!
கனன்ற அடுப்பில் வைத்தோம்
பாங்காய்ப் பசும்பால் பொங்கிச் சரிக்கவே!
பயறுடன் பச்சரிசி பானையிட்டே!
தேங்காய்த் துருவலும் தித்திக்கச் சேர்த்து
தகிக்கும் உலையில் இட்டோமே!
சமமாய்ச் சர்க்கரை சத்தான கஸ்கொட்டை
சுவைமிகு தேனும் விட்டு
அமரர் போற்றும் அருமைப் பொங்கலுக்கு
ஆநெய்யும் அளவாய்க் கலந்தோம்
கற்கண்டு முந்திரி கச்சிதமாய்ச் சேர்த்தே!
கனிதரும் பொங்கலை பொங்கினோம்
பற்றொடு; பொங்கல் படைத்து வைக்கவே!
பலவகைப் பொருட்கள் எடுத்தோமே!
சுற்றம் சூழவே சுயமாய்க் கூடியே
சத்தான பொங்கல் தந்திடவே!
முற்றிய கரும்பும் முக்கனியும் தயிரும்
மலர்களும் பருவ இளநீரும்
பக்திப் பாட்டும் பட்டாசு வெடியுடன்
பரிதிக்கு படைத்து வைத்தோம்
பக்கத்து வீட்டார்க்கும் பகிர்ந்து கொடுத்து
பதமான பொங்கலைப் புசித்தோமே!
பலகார வகையும் பதமாய்ச் செய்தோம்
பசியோடு வந்தோர்க்கும் பரிமாறினோம்
விலகாமல் இருந்த வீண்பகை எல்லாம்
விலக்கியே ஒன்றாய்ச் சேர்ந்தே!
ஏர்பிடித்த உழவனை இதயத்தில் ஏற்றியே!
எல்லோரும் கூடியே வாழ்த்தினோம்
பார்புகழ் மக்களாய்ப் பலகலை கற்றுமே!
பல்லோர் போற்றிட வாழ்வோமே!
ஆக்கம்
பாவலர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453.
























