2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஆகும். தேர்தலை ஒட்டி இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எந்த பிரத்யேக அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பதிவில், “2026 ஒன்றிய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே” என்று தெரிவித்தார்.
























