வழக்கு விசாரணைகளில் ஒத்துழைக்க மறுத்த பிரதேச செயலாளர் உட்பட இருவரை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு!
(கனகராசா சரவணன்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்பட்ட சட்டத்தரணியை தொடர்ந்து எதிர்வரும் 17ம் ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 3ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (03-02-2026) உத்தரவிட்டு பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்தவரான வரும் மட்டு நீதிமன்ற கட்டிட தொகுதியில் சட்டத்தரணியாக செயல்பட்டு வரும் சட்டத்தரணி ஒருவர் தனது பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் கடமையாற்றி வந்த அந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பலாத்காரமாக கற்பழித்து 3 மாத கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் சட்டத்தரணியை கடந்த மாதம் ஜனவரி (30) திகதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
இந்த நிலையில் குறித்த சட்டத்தரணியை 3ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்துக் கொண்ட போது சட்டத்தரணி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகியதுடன் வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையிலான சட்டத்தரணிகளான யோகேஸ்வரன், உவைஸ், ரூபி, உதயாகரன், சுதர்சன், கமலதாசன், நஜீபா, ரம்சீயா, தவராசா, சசிதரன், ஆஜராகி சமர்ப்பனங்கள் முன்வைத்தனர்.
இதன் போது பொலிசார் பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை அதனால் விசாரணை முடியவில்லை என நீதவானிடம் தெரிவித்ததையடுத்து குறித்த சட்டத்தரணியை தொடர்ந்து எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
























