உலகில் உயர்மொழி நம்தமிழ் மொழியே
உவகையாய்ப் பேசுவோம் அம்மொழியை
இலக்கண இலக்கிய இயற்தமிழ் இசைத்தமிழ்
அனைத்தும் அமைந்தது எம்மொழியே!
ஐம்பெரும் காப்பியம் அளித்த அரும்மொழி
அவ்வையின் ஆத்திசூடியும் அடங்கியமொழியே
எம்மொழிக்கு ஈடிணை இல்லை எங்கும்
ஏற்றமுறச் செய்வோம் அதனை இவ்வுலகிலே!
அன்னைத் தமிழே அழகாய்த் தாலாட்டும்
ஆயுள்வரை நம்மைச் சீராட்டும்
இன்பம் தந்திடும் இனிய மொழியாம்
எல்லோரும் பருகும் தேனடையாம்
கரும்பிலும் இனிய கனிமொழி எம்மொழி
காலங்கள் ஆயிரம்; பலகண்டது
இரும்பையும் எலும்பையும் உருக்க வல்லது
இதயத்தையும் இதமாய்ப் பேணும் அதுவே!
பாட்டிசைத்த புலவர்; பல்லாயிரம் என்றால்
பாக்களைப் படித்தவர் பலகோடியாம்
நாட்டுப் பாடலும் நம்தமிழில் உண்டே!
நாடுபோற்றும் திருக்குறளும் நம்மொழியே!
காவிய நாயகி கண்ணகி கதையையும்
காதலியைக் கைவிட்ட காதலனையும்
காவியமாய் ஆக்கித் தந்த கவின்தமிழை
காலம் எல்லாம் போற்றுவோமே!
உள்ளத்தை ஊடறுத்துச் செல்லும் திருவருட்பா
ஊனையும் உருக்கும் திருவாசகம்
வள்ளலார் வழங்கிய வாழ்க்கை உபதேசம்
வாகாய் வரிசையாய் நிக்குதே!
எம்மதமும் சாரா பொதுமொழியாம் எம்மொழியை
இணையத்திலும் ஏற்றினோம் ஏற்றமுற
எம்வீட்டுக் கணினியும் கவிபாடும் எம்மொழியில்
இனியெங்கும் வீசுமே தமிழ்வாசமே!
முதலில் தோன்றிய மூத்த மொழியிது
முக்கனிச் சுவைமிகு மூலமொழி
இதயமே ; இளகும் ஈடில்லா மொழியின்
இலக்கணம் இயம்புமே தொல்காப்பியம்
பாரதி காட்டிய புதுமைப் பெண்ணை
பாடலாய்ப் பாடிக் காட்டுவோம்
பாரதப் போரின் பாடல்கள் பாடியே
பாரெலாம் தமிழை வளர்ப்போமே!
ஆக்கம்
பாவலர் மார்க்கம் சந்திரன்
























