பு.கஜிந்தன்
சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
3ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் என செல்லப்படுகிறது. உண்மையிலேயே இலங்கை சுதந்திரமடைந்து 76ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்களை பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது பேச்சளவில் உள்ள ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுகிறது.
இலங்கை தீவில் சிங்கள மக்களுக்கு மாத்திரமே அந்த சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. ஏனைய இனங்களுக்கு அந்த சுதந்திர காற்று என்பது சரியாக வீசவில்லை. அடக்குமுறைக்குள் வாழ்கின்ற இனமாகவே ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள்.
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கின்றதன் நோக்கமாக, தமிழ் மக்களாகிய நாம், இதுவரை சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்ற விடயத்தை அனைவருக்கும் தெரிவிக்கவே முயல்கின்றோம்.
மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை நம்ப வைத்து தமது நிகழ்ச்சி நிரல்களை நடத்திச் செல்வது தான் அவர்களுடைய நோக்கமாக இருக்கின்றது. அதுபோல தான் அனுர அரசும் இனவாதமற்ற, மதவாதம் அற்ற நாட்டை கட்டி எழுப்பவதாகவும் தாங்களது ஆட்சியில் இனவாதம் மதவாதம் என்பதற்கு இடமில்லை என்ற வகையிலும் போலிப் பிரச்சாரங்களை செய்கின்றனர். ஆனால் யதார்த்த நிகழ்வுகள் அவ்வாறு இல்லை” என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பெற்றுள்ளது.
























