எப்பொழுது நடக்கும் என்று தெரியாத மாகாண சபை தேர்தலை நோக்கியும் எப்பொழுது வரும் என்று தெரியாத புதிய யாப்பு முயற்சிகளை நோக்கியும் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில்,கடந்த புதன் கிழமை,தமிழர் தாயகத்தில்,இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கரி நாளாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக் கழக மாணவர்கள் அதை முன் நின்று ஒழுங்குபடுத்தினார்கள். கடந்த வாரம் அடுத்தடுத்த நாள் நடந்த போராட்டங்களில் அதிக அளவு மக்கள் தொகையினர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் அது. கட்சி கடந்து தமிழ் மக்களைத் திரட்ட பல்கலைக்கழக மாணவர்களால் முடியும் என்பதை அது நிரூபித்திருந்தது.
கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான போராட்டம் தமிழ்க் கட்சிகளை ஒப்பீட்டளவில் ஒருங்கிணைத்திருக்கிறது. கடந்த திங்கட்கிழமை நெடுங்கேணியில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி அந்தப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தாலும் சிறீதரனும் அவருடைய அணியினரும் அதில் கலந்து கொண்டார்கள். தமிழரசுக் கட்சி கடந்த சில மாதங்களாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு உறவாடி வருகிறது.அதனால் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கடந்த ஆண்டின் இறுதியில் தையிட்டியில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றியபோது அது ஒப்பீட்டுளவில் அதிக ஜனத்தொகையோடு காணப்பட்டது.அப்படித்தான் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராகவும் ஒப்பீட்டளவில் அதிகம் பேர் நெடுங்கேணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மையமாகக் கொண்ட தமிழ்த் தேசிய பேரவையைச் சேர்ந்த கட்சிகள் அதில் கலந்துகொள்ளவில்லை. நெடுங்கேணிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ரில்கோ விருந்தினர் விடுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடல் தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் அந்தச் சந்திப்பில் காணப்பட்டார்கள்.தமிழ்த் தேசியப் பேரவையைத் தவிர்த்து ஏனைய பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் நெடுங்கேணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.
சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு, நிலப்பறிப்பு,ஒடுக்குமுறை என்று வரும்பொழுது தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய முடியும் என்பதற்கு இதுவும் இதற்கு அடுத்த நாள் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடந்த ஆர்ப்பாட்ட்ங்கள் ஆகப்பிந்திய உதாரணங்கள்.அதேசமயம்,நெடுங்கேணியில் நடந்தது அரசுக்கு எதிரான ஒரு போராட்டம் என்ற போதிலும் கூட அங்கே வேறு உள்நோக்கங்களும் உண்டு.
முதலாவது,இந்தப் போராட்டத்தின் மூலம் சுமந்திரன் தன்னை அரசுக்கும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கும் எதிரானவராக நிறுவ முற்படுகிறார். அவருடைய கட்சிக்குள் சிறீதரன் அணியும் கட்சிக்கு வெளியே தமிழ்த் தேசியப் பேரவையும் பொதுவாக அவரை தேசிய நீக்கம் செய்பவர் என்று குற்றம் சாட்டி வருகின்றன.அவர் கொழும்பு மைய அரசியல்வாதி என்றும் தமிழரசுக் கட்சியை கொழும்பை நோக்கிச் சாய்க்க முற்படுகிறார் என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு. இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க அவருக்கு கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் உதவும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக அவர் அதைத்தான் செய்து வருகிறார்.கட்சிக்குள் தன்னுடைய ஸ்தானத்தை எப்படிப் பலப்படுத்துவது? கட்சித் தலைவராக தன்னை எப்படிக் கட்டியெழுப்புவது? என்று சிந்தித்து தந்திரமாகவும் புத்திசாலித்தனமாகவும் காய்களை நகர்த்தி வருகிறார்.
தமிழரசுக் கட்சியானது எனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்காக ஒப்பீட்டளவில் பலமான கீழ் மட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.ஒப்பீட்டளவில்தான்.இந்தக் கட்டமைப்பை பதில் செயலாளராக சுமந்திரன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்.அவ்வாறு ஏற்கனவே கட்சிக்குள்ள அடிமட்ட வலைப் பின்னலை தன்னை மையமாகக் கொண்டு பலப்படுத்துவதன்மூலம் அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தை பலப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நம்புகிறார்.
தமிழரசுக் கட்சிக்குள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை முடுக்கி விடுவதன் மூலம் வெற்றி பெறலாம் என்பதற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நல்ல உதாரணம். அதில் சுமந்திரனின் உழைப்பு அதிகமானது.ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால்,தமிழரசுக் கட்சியின் வாக்குத்தளம் எனப்படுவது தனியாக அந்தக் கட்டமைப்புகளுக்கூடாக கிடைப்பது மட்டுமல்ல.அதைவிட ஆழமான பொருளில், அது இன உணர்வுகளின் அடிப்படையிலான வாக்குத் தளமாகும்.சிங்கள பௌத்த இனவாதத்துக்கு எதிரான தமிழ் இன உணர்வுகளின் அடிப்படையிலான ஒரு வாக்குத்தளம் அது. அந்த வாக்குத்தளத்தை முழுமையாக கைப்பற்றுவது என்று சொன்னால் அதே உணர்வு தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஒரு தலைமையை வழங்க வேண்டும். இதில் சுமந்திரனுக்கு உள்ள மைனஸ் என்னவென்றால், அவர் ஒரு தமிழ்த் தேசிய நீக்க வாதியாக விமர்சிக்கப்படுவதுதான். எனவே அந்த விமர்சனங்களை வெற்றி கொள்வதற்கு அவர் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம் போன்ற போராட்டங்களை முன் நின்று ஒழுங்கமைக்கின்றார்.
இரண்டாவது உள்நோக்கம், தமிழரசு கட்சிக்குள் காணப்படும் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான முரண்பாடுகள்.இதில் யார் அதிகம் சனத்தை கொண்டு வர முடியும்? யார் அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கின்றார்? போன்றவற்றை நிரூபிக்கும் ஒரு போட்டி உண்டு. கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தன் கையில் எடுத்ததன் மூலம் சுமந்திரன் கட்சிக்குள் தன்னுடைய முதன்மை நிறுவ முற்படுகிறார்.
மூன்றாவது உள்நோக்கம், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையைத் தனிமைப்படுத்துவது. தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஏற்கனவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசி வருகிறது. வரக்கூடிய மாகாண சபைத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கி அவர்கள் இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் இந்த ஆண்டு நடத்தும் நோக்கம் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் இந்தியா அந்தத் தேர்தல் விரைவாக நடத்தப்படுவதை விரும்புகிறது என்ற காரணத்தால்,மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் சுமந்திரன் அணியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்து சந்தித்து வருகின்றன.இது மூன்றாவது உள்நோக்கம்.
மாகாண சபைத் தேர்தல் நடந்தால் அதில் தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் பலப்படுத்தவும் இந்தக் கூட்டு அவசியம் என்று அவர்கள் கருதக்கூடும். ஆனால் சில நாட்களுக்கு முன் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்த தகவல்களின்படி இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை அவர்கள் வைப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது.
ஆனால் எப்பொழுது நடக்கும் என்று தெரியாத மாகாண சபையை நோக்கியும் எப்பொழுது வரும் என்று தெரியாத புதிய யாப்பு முயற்சிகளை நோக்கியும் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில்,கடந்த புதன் கிழமை,தமிழர் தாயகத்தில்,சிறீலங்காவின் 78ஆவது சுதந்திர தினம் கரி நாளாக அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்கள் அதை முன் நின்று ஒழுங்குபடுத்தினார்கள்.கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டார்கள். கட்சி கடந்த ஒரு போராட்டம் அது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அங்கே காணப்பட்டது. கடந்த வாரம் அடுத்தடுத்த நாள் நடந்த போராட்டங்களில் அதிக அளவுத் தொகையினர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் அது. கட்சி கடந்து தமிழ் மக்களைத் திரட்ட பல்கலைக்கழக மாணவர்களால் முடியும் என்பதை அது நிரூபித்திருந்தது.
























