”தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தொடரும் தமிழர் விரோத செயற்பாடுகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றினால் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வலைகள் அதிகரித்துள்ள நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடமும் நடத்தாதிருப்பதற்கான காய்களை அநுரகுமார அரசு நகர்த்தத் தொடங்கியுள்ளது”
கே.பாலா
கடந்த ஒரு வார காலத்திற்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியில் ”கிவுல் ஓயா எதிர்ப்பு” , ”இலங்கையின் சுதந்திர நாள் தமிழருக்கு கரிநாள்” என்ற இரு பெரும் எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்துள்ள நிலையில் அந்த இரு போராட்டங்களிலும் எதிர்பார்த்ததை விடவும் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகம் இருந்தமையும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றமையும் தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு ஒரு உந்து சக்தியைக் கொடுத்துள்ள அதேவேளை வடக்கு, கிழக்கிலும் நாம் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என மார் தட்டிய அநுரகுமார அரசையும் கொஞ்சம் ஆட்டம் காண வைத்துள்ளது. .
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சி பீடம் ஏறிய இதுவரையிலான காலப்பகுதியில் தென்னிலங்கையில் மட்டுமே சர்ச்சைகள், குற்ச்சாட்டுக்களில் சிக்கி சவால்களையும் எதிர்ப்புகளையும்,கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டுவந்த நிலையில் தற்போது தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக வடக்கு மாகாணத்திலும் மக்கள் போராட்ட வடிவில் நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே .வி.பி. மீதான ”தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பட்டவர்கள் , நோர்வே மத்தியஸ்தத்துடனான விடுதலைப்புலிகளுடனான சமாதான பேச்சு வார்த்தையை முறியடித்து மீண்டும் போரை ஆரம்பிக்கத் தூண்டியவர்கள் , தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த இராணுவத்திற்கு 50000 பேரை இணைத்துக் கொடுத்தவர்கள், சந்திரிகா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சுனாமி பொதுக்கட்டமைப்பை சிதைத்தவர்கள், தமிழர்களின் தாயகமான வடக்கு,கிழக்கு இணைப்பை உயர்நீதிமன்றத்தின் ஊடாக பிரித்து தமிழர் தாயகத்தை துண்டாடியவர்கள் என்ற குற்றச் சாட்டுக்கள் தமிழ்த்தரப்பால் தொடந்து சுமத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் கூட தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மதிப்பும் வரவேற்பும் இருந்தாலும் அவர் ஜே .வி.பி. கட்சித்தலைமை அலுவலகத்திற்கு கட்டுப்பட்டு முன்னெடுத்துவரும் தமிழர் விரோத நிகழ்ச்சி நிரல்களே இன்று வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் ஒரு எதிர்ப்பலையையும் ஜே .வி.பி. இன்னும் இனவாதக்கட்சிதான், தமிழர்களுக்கு எதிரான கட்சிதான் என்ற தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் அதிகரித்து வருகின்றது .
அநுரகுமார அரசுக்கு இவ்வாறானதொரு நெருக்கடி ஒருபுறத்தில் அதிகரித்துவரும் நிலையில் மறு புறத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் நடந்த வேண்டும் என்ற நேருக்கு வாரங்களும் அதிகரித்துள்ளன. மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்த போதும் இதுவரையில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின் 154 ஈ உறுப்புரை ஆகியனவற்றின்படி,மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும். ஆனால், மாகாண சபைகள் கலைந்து பல வருடங்களுக்கு மேலாகியும் இன்றுவரை மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படவில்லை.
இவ்வாறு எந்தவொரு மாகாண சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படாத நிலையில் மாகாணசபைகள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.இதனைப் பயன் படுத்தி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் தமக்கு விசுவாசிகளான ஆளுநர்களை ஒவ்வொரு மாகாணங்களுக்கும் நியமித்து தமது நோக்கங்கள், தேவைகள், திட்டங்கள், இலக்குகளை இலகுவாக அடைந்து கொள்ளும் நிலையே கடந்த பல வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றன.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி ஆட்சியிலும் இதுவே நடைபெறுகின்றது.இவ்வாறான நிலையில்தான் மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாமல் செய்வதற்கே சிங்கள தேசியக் கட்சிகள் விரும்புவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதற்கு இடமளிக்காமல் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளன.
ஆனால் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்ட, அந்த ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்பை நீதிமன்றத்தை நாடி துண்டித்த ,மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்ற கொள்கையை வரித்துக்கொண்ட இந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் அல்லது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி பலதரப்பினரிடமும் எழுந்திருந்தது.
மைத்திரி-ரணில் நல்லாட்சியில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்க முற்பட்டபோது எதிர்த்தவர்கள், கோத்தபாய ஆட்சியில் மாகாணசபைகளுக்கு தேர்தலுக்கான முயற்சிகள் என்ற நாடகம் நடத்தப்பட்டபோதுகூட அந்த நாடகத்தையே முழு மூச்சாக எதிர்த்தவர்கள் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும்போது அதனை நடத்த விரும்புவார்களா? அல்லது தமது இனவாத அரசியலை முன்னெடுக்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் விமல் வீரவன்ச,உதய கம்மன்பில , சரத் வீரசேகர மற்றும் மகாசங்கத்தினர் தான் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த விடுவார்களா ?
அதுமட்டுமல்ல ஜனாதிபதித்தேர்தலிலும் பாராளுமன்றத்தேர்தலிலும் பெரு வெற்றி பெற்ற அநுரகுமார தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியினர் சில மாதங்களில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மக்களின் ஆதரவை கணிசமானளவு இழந்து தோல்விப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி மீண்டுமொரு படுதோல்வியை சந்திக்க விரும்பமாட்டார்கள்.ஆகவே மாகாண சபைக்களுக்கான தேர்தல் சட்டத் திருத்தத்தை ”துருப்பு சீட்டாக” பயன்படுத்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது இழுத்தடிக்கவே முடிந்தளவுக்கு முயற்சிப்பார்கள். எனவே மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும் ஆனால் நடக்காது என்ற இழுபறி நிலையையே அநுர அரசு தொடரும் என்ற எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்பட்டன
இதனை நிரூபிக்கும் வகையில்தான் தற்போது மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் அறிக்கைகளை முன்வைப்பதற்காக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஆளும் தரப்பில் பெயர் முன்மொழிவுகளை செய்வதில் இனவாதிகளான ஜே .வி.பி.யினருக்கும் அவர்களின் பங்காளிகளான மென்போக்குவாதிகளான தேசியமக்கள் சக்தியினருக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்ந்து தாமதமாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளடங்களாக 12 பேரை நியமிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ளார்.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியில் இருந்து 8 பேர் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் ஆளும் தரப்பினர் பெயர் பரிந்துரை சபாநாயகருக்கு முன்வைக்கப்படவில்லை. இந்த குழுவுக்கு ஜே .வி.பி. யின் (மக்கள் விடுதலை முன்னணி)இனவாத கொள்கையுடைவர்களை நியமிப்பதா அல்லது தேசிய மக்கள் சக்தியின் முற்போக்கான கொள்கையுடையவர்களை நியமிப்பதா என்பதில் அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் தோற்றம் பெற்றுள்ளது.
ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்ட பெயர்களுக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட பெயர்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. மாகாண சபை முறைமைக்கு எதிரான பழமையான கொள்கை உடையவர்களை இந்த தெரிவுக்குழுவுக்கு நியமித்தால் முரண்பாடான நிலைமை ஏற்படும் .அது அரசாங்கத்துக்கு நெருக்கடியை தோற்றுவிக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான நியமனம் கடந்த மாதம் 23 ஆம்திகதி இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில் ஆளும் தரப்பின் பெயர் பரிந்துரையில் இழுபறி நிலை காணப்படுவதால் தெரிவுக்குழு நியமனம் தொடர்ந்து தாமதமாகியுள்ளது
அத்துடன் ரணில் கைது,ராஜபக்சக்கள் மீதான பழிவாங்கல்கள். அரசாங்கம் ,அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், சபாநாயகரின் தன்னிச்சையான செயற்பாடுகள்,அரசின் சர்வாதிகாரப் போக்கு , வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தொடரும் தமிழர் விரோத செயற்பாடுகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றினால் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான உணர்வலைகள் அதிகரித்துள்ளது. எனவே டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவுகளை காரணம் காட்டியும் மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் அறிக்கைகளை முன்வைப்பதற்காக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான நியமனங்களை இழுத்தடிப்பு செய்தும் மாகாணசபைகளுக்கான தேர்தலை அநுரகுமார அரசு இவ்வருடமும் நடத்தப்போவதில்லை என்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
























