கடந்த 34 வருடங்களுக்கு மேலாக கனடாவில் இயங்கிவரும் சுருவில் மக்கள் மன்றம்’ தங்கள் ஊரில் கல்வி- சமூகம்- சமயம் சார்ந்த பணிகளுக்கு வருடாந்த உதவிகள் செய்து வருகின்றது. இந்த நற்பணிகளால் பயன்பெற்றவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் என்றால் அது மிகையாகாது.
இவ்வாறாக பல்வேறு நிர்வாக சபைகளுக்கு கீழ் பல ஆண்டுகளாக மன்றம் நடத்திய நத்தார் கொண்டாட்டங்களைப் போன்று 2025ம் ஆண்டுக்குரிய வருடாந்த ‘நத்தார் தின விழா’ கடந்த 31ம் திகதி ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள அழகிய மண்டபம் ஒன்றில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது!
நிகழ்வில் முதலில் தற்போதைய தலைவர் ஜெயச்செல்வன் பற்குணம் அவர்கள் தலைமையுரையில் பல்வேறு முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டு அவைகளில் சிலவற்றுக்கு அங்கத்தவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து சுருவில் கிராம மக்களால் நேசிக்கப்படுபவரான திருவருள் அவர்கள் தனது கருத்துக்களை சிறப்புரையொன்றின் ஊடாகப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கமும் ஊர் பற்றிய தனது கருத்துக்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார்.
சிறுவர் சிறுமிகளுக்கு உரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள் ஆகியவை இடம்பெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்பெற்றன.
அன்றைய மக்கள் சந்திப்பு பயனுள்ள வகையிலும் தங்கள் ஊர்பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுமாக தொடர்ந்து இராப்போசனத்தோடு விழா நிறைவு பெற்றது.





























