இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலும்,தெற்காசிய பூகோள அரசியல் நகர்வுகளும் தொடர்பான முக்கிய முன்னேற்றமாக ஜே.வி.பி (JVP) கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கொண்ட இந்தியப் பயணம் பார்க்கலாம். அத்துடன் இது தொடர்பாக கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வாகவும் மதிப்பிடப்படுகிறது.
தற்போதைய இலங்கை அரசின் முக்கிய தீர்மானங்கள் மற்றும் கொள்கை நகர்வுகளில் தாக்கம் செலுத்தும் முக்கிய அரசியல் நபராகக் கருதப்படும் டில்வின் சில்வா, தனது குழுவுடன் இந்தியா சென்றடைந்தார்.
இந்திய கலாச்சார உறவு குழுவின் அழைப்பின் அடிப்படையில் இந்த பயணம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டாலும், இந்திய தலைநகர் புதுடெல்லியில் பல மட்டங்களில் முக்கிய சந்திப்புகள் நடைபெற்றதாக அறியப்படுகிறது.
இந்த பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடைபெறவில்லை என்றாலும், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடன் முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பொருளாதாரத்தை மீளக் கட்டியமைக்கும் வழிகள், இருநாட்டு வர்த்தக மற்றும் அரசியல் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுத போராட்ட இயக்க அடிப்படையிலிருந்து வளர்ந்த ஜே.வி.பி அரசியல் அமைப்பின் முக்கிய நிர்வாகியாக அதன் பொதுச்செயலராக ரில்வின் சில்வா செயல்பட்டு வருகிறார். அரசாங்கத்தின் நேரடி பதவிகளில் இல்லாவிட்டாலும், அரசியல் தீர்மானங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளில் அவரின் செல்வாக்கு மிகப்பெரியது. குறிப்பாக அண்டை நாடுகளுடனான உறவுகள், வல்லரசுகளுடன் தொடர்பு பேணும் நடைமுறைகள் போன்றவற்றில் அவர் முக்கிய வழிகாட்டியாக செயல்படுவதாகக் கருதப்படுகிறது.
ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணம் தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்னதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, அதிபர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் தமிழ் தேசிய கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த விஜயத்தின் போது இந்தியா, இலங்கையின் பொருளாதார மற்றும் மனிதாபிமான சூழலை கருத்தில் கொண்டு 400 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் நிகரான உதவி திட்டங்களை அறிவித்திருந்தது. குறிப்பாக தமிழ் தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்ததால், இருநாட்டு அரசியல் உறவுகளில் புதிய நகர்வுகள் ஏற்படுகின்றன என்ற பார்வை நிலவியது. மாகாண சபை தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் நிலவின.
இந்த பின்னணியிலேயே ரில்வின் சில்வா தலைமையிலான குழு புதுடெல்லியில் இந்திய அதிகாரிகளை சந்தித்திருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. அந்த குழுவில் இரண்டு தமிழ் பிரதிநிதிகள், குறிப்பாக வடக்கில் இருந்து இளங்குமரன் எம்.பி. உள்ளிட்டோர் அழைத்து செல்லப்பட்டமையானது யாழ்பாணத்தின் குறிப்பாக தமிழரின் நிலை , தமிழர் அரசியல் தொடர்பான விவகாரங்களும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. இவ்விவாதங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படாத போதிலும், தமிழர் அரசியல் உரிமைகள், புதிய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக அமைப்புகள் தொடர்பான அம்சங்கள் திரைமறைவாக அலசப்பட்டிருக்கலாம் என்பதில் மாற்று கருத்திருக்க முடியாது.
மேலும், இந்தியாவின் முன்னெடுப்பில் அமுல்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இலங்கை அரசின் நிலைப்பாடுகளை விளக்குவதற்கும், எதிர்கால அரசியல் திட்டங்களுக்கு ஆதாரமான கருத்துகளை முன்வைப்பதற்கும் ரில்வின் சில்வா இந்த சந்திப்பில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
இந்த பின்னணியிலேயே ரில்வின் சில்வாவுடன் நடைபெற்ற சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தற்போதைய நெருக்கடி நிலைகள் குறித்து விவாதங்கள் இடம்பெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறினாலும், மாகாண சபைகள் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான விவகாரங்களும் நுணுக்கமாக ஆராயப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
குறிப்பாக அந்த சந்திப்பில் தமிழ் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தது, தமிழர் அரசியல் தொடர்பான அம்சங்கள் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இதனுடன் தொடர்பாக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சமீபத்தில் வெளியிட்ட கருத்தில், 2026 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாது என்றும், அவை 2027 ஆம் ஆண்டிற்குத் தள்ளிப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மாகாண சபை அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மற்றும் புதிய பயங்கரவாதத் தடைக் சட்ட திருத்தங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் விரிவான விளக்கங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இலங்கை வெளிவிவகார அமைஶ்ரீன் அறிவிப்பு ரில்வின் குழு ஜெய்சங்கரை சந்தித்த பின் வந்த அறிவிப்பு என்பது ஆழமாக பார்க்க வேண்டியது.
தமிழர் தரப்பை மையமாகக் கொண்டு பூகோள அரசியல் சூழலில் இலங்கையை மையப்படுத்தி தொடர்ந்ந்தும் அரசியலை கையண்டு வந்த இந்தியாவுக்கு, தற்போது மீண்டும் தமிழர்களை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபை அதிகாரங்களை பரவலாக்கி, வடக்கு–கிழக்கில் தங்களுடைய கட்டுப்பாட்டை நிலைநிறுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. பூகோள அரசியல் வல்லாதிக்க போட்டியின் காரணமாக இந்தியா விரும்பியோ விரும்பாமலோ இந்த நிலைக்கு வந்துள்ளது.
அதைவிட இந்திய வெறுப்பை கக்கிய அனுர அரசையும் கன கச்சிதமாக கையாள வேண்டிய தேவையும் இருக்கிறது.
ஒவ்வொரு அரசியல் நகர்விற்குப் பின்னரும் புதிய முடிவுகள் உருவாகும் நிலையில்,இந்தியா தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தாலும், இலங்கை அரசோ மாகாண சபை மீளாய்வு குழுக்கள் அமைத்து காலத்தை நீட்டித்துள்ளன. மறுபுறம் 13வது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் குறித்து தமிழ் தேசிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தியா கொண்டுவந்த 13 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக “ வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்” என்ற அடிப்படை நாதத்தினையே நீதிமன்ற வழக்குகளின் ஊடாக சென்று வடக்கு–கிழக்கு பிரிப்பு செய்த ஜே.வி.பி. குழு அதுவும் அதன் பொதுச்செயலர் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்த்திக்கும் அளவிற்ற்கு அரசியல் களம் அதிசமாக மாறியிருக்கிறது.
வடக்கு கிக்கு பிரிப்பின் பின் மாகாண அதிகாரப் பரவலாக்கம் குறைவு, காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களின் இல்லாமை போன்ற பிரச்சினைகள் நீடித்து வருகின்ற நிலையில் ரில்வினுடனான இந்திய சந்திப்பு எதிர் இலங்கை அரசியலில் மாற்றம் நிகழ்த்தும் . எதிர்காலத்தில் இந்தியாவின் தலையீடு மற்றும் அரசியல் அழுத்தங்கள் மூலம் முழுமையான 13வது திருத்தச் சட்ட அமலாக்கத்துடன் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய விடயமாகவே உள்ளது.
அரசியல் சூழல் காலப்போக்கில் வேகமாக மாறிவரும் நிலையில், முன்னர் நீதிமன்ற வழக்குகள் மூலம் வடக்கு–கிழக்கை பிரித்த ஜேவிபி கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியினுடைய பொதுச் செயலாளரை இந்தியா அழைத்து பேசுகின்றனர். ஆகவே அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் இலங்கை சமநிலையை பேண வேண்டிய அரசியல் தேவையையும் அதை கம்னீயூசிய சித்தாந்த வழி வந்த ஜேவிபி சரியான முறையில் தற்போது கையாண்டு வருகிறது.
ஆகவே, டில்வின் சில்வாவினுடைய அரசியல் அணுகுமுறையின் மையத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் தமிழர்களுக்கு பூரணமான அரசியல் அபிலாசைகளை கொண்டதாக அமையுமா? அது எப்போது அமையும்? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.
அதற்கிடையில், வேறொரு தொழில்நுட்ப கருத்தரங்கு தொடர்பாக அநுர அவர்கள் அடுத் மாதங்களில் இந்தியா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக இலங்கை தலைவர்கள் இந்திய தலைவர்களை நோக்கி ஈர்க்கப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை அரசியலில் என்ன நடைபெறப்போகிறது என்பதற்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதியாக தெளிவாகிறது. தமிழர் தரப்பும் உள்வீட்டு அரசியல் பிரச்சனைகளை தாண்டி,உச்சபட்ச அதிகாரங்களை பெறுவதற்காக இந்தியாவையும் உலக வல்லரசுகளையும் நோக்கி அழுத்தம் கொடுக்கும் அரசியல் முயற்சிகள் முன்னெடுக்க உழைக்க வேண்டும் .
இந்த சூழலில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, தமிழ் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசியல் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டிய காலகட்டமாக இது பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி,இந்த முறை மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் நலனை மையப்படுத்தி, இந்தியாவை மேலும் நெருக்கமாக அணுகும் திசையில் தமிழ் தலைமைகள் முன்னேற வேண்டும் என்பதே இன்றைய அரசியல் நிதர்சனமாக உணர்த்துகிறது.
கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc
அரசியல் ஆய்வாளர்

























