குடும்பம் என்பது கோவில் போன்றது
குடும்பத் தலைவி ஒளிவிடும் விளக்கு
கடமை தவறாக் கணவன் பூசாரி
குழந்தைகள் உணர்வுள்ள வழிபடும் விக்கிரகம்
பேரன் பேர்த்திகள் வழிபடும் பக்தர்கள்
பேரப் பிள்ளைகள் கோவில் மணிகள்
தாரமாய் மகனால் தத்தெடுத்த காரிகை
தமது பொறுப்பை செவ்வனே செய்வரே!
ஓடியோடி ஓய்விலா உழைத்துக் களைத்தவர்
ஓரிரு நாட்கள் ஓய்ந்திட இயலோர்
கூடிக் களித்துக் கொண்டாட முடியாதார்
குடும்பமாய்த் தங்கி இருக்க வாய்ப்பற்றோர்
உண்ண நேரமும் உறங்கவும் வழியற்றோர்
உற்ற துணையுடன் உறவாட நேரமற்றோர்
வண்ணமாய் வாழ்த்துக் கூறியே கொண்டாடி
வாஞ்சை செலுத்தும் உன்னதத் திருநாளே!
வாங்கிய வீட்டில் வசிக்க நேரமின்றி
வசதியாய்க் கட்டிலில் படுக்க முடியாதோர்
தாங்கிய வீடுவிட்டுத் தனிவீடு சென்றோர்
தொழில் நாடித் தொலைநகர் ஏகினோர்
முதுமை காரணமாய் மூத்தோரகம் அடைந்தோர்
மாமன் மாமிகள் பேரன் பேர்த்திகள்
மதுவும் மாமிசமும் பரிமாறி உண்டே
மகிழ்வுடன் கொண்டாடும் தினமே இந்நாளே!
ஆக்கம் ……
பாவலர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453.
























