மலையக சமூக ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு எனும் கவர்ச்சி சொல்லாடலுக்கு பின்னால் சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் இன அழிப்பு அரசியலும் மறைந்திருப்பதாகவே தோன்றுகின்றது. மக்கள் அதிகரித்ததாக எதிர்பார்த்திருக்கும் ரூபாய் நானூறு இலக்கத்தினை பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் மீது சுமத்தப்படும் தொழில் சுமை மற்றும் நாம் புறந்தள்ளப்படுகின்றோம் எனும் உளவியல் தாக்கம் காரணமாக தொழிலாளர்கள் தொழிலை விட்டும் தொழிலிடத்தை விட்டும் சுயமாகவே தூர விலகிச் செல்வது மேலும் தீவிரமடையலாம். இது இன அழிப்பின் மாற்று வடிவம் என்பதை மலையக சமூக ஆய்வு மையம் தெளிவாக கூறுவதோடு, இத்தகைய வன்கொடுமையை பெருந்தோட்ட நிறுவனங்களும் அரசாங்கமும் உடன் நிறுத்தி மலையக உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கை பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குகளாலும் பதவியில் அமர்த்தப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும் இரத்த வியர்வையின் இலாபத்தை அள்ளும் பெருந்தோட்ட நிறுவனங்களிடமும் மலையக சமூக ஆய்வு மையம் கோரிக்கை விடுக்கின்றது.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளம் மற்றும் வருகைக்கான கொடுப்பனவு உட்பட ரூபாய் 1750 /= யாக அதிகரிக்கப்படும் எனும் செய்தி கேட்ட உடனேயே மலையக பெருந்தோட்ட மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்ததோடு ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் ஆசி வேண்டி பூசை வழிபாட்டிலும் ஈடுபட்டனர். மகிழ்ச்சியின் உச்சக்கட்டமாக ஜனாதிபதியின் உருவப்படுத்தின் முன்னாள் விழுந்து வணங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது. இத்தோடு மாத்திரம் நின்றுவிடாது எதிர்க்கட்சிகள் மீது வசைப்பாடி அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதையும் நாம் அறிவோம். இத்தகைய கள சூழ்நிலையையே தேசிய மக்கள் சக்தி மலையகத்தில் விரும்பியது.
ஆனால் அறிவிக்கப்பட்ட சம்பளம் கைக்கு கிடைக்கும் முன்பே எத்தகைய பொது அறிவித்தலும் இன்றி ஒவ்வொரு கம்பெனியும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு, ஒரு நாள் சம்பளத்திற்கு 26 கிலோ வரை கொழுந்து பறிக்க நிர்ப்பந்திப்பதும், இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் 09 கிலோவுக்கும் அதிகமாக பாலை சேகரிக்க வேண்டுமெனவும் கட்டாயப்படுத்தப்படுவதன் நியாயம் என்ன? தேயி கொழுந்தை பொறுத்தவரை ஒவ்வொரு எடையை அளிவிடும்போதும் (கொழுந்து நிறுத்தல்) குறிப்பிட்ட கிலோ கொழுந்து கழிக்கப்படும். இவ்வாறு கழிக்கப்படும் கொழுந்தையும் சேர்த்தால் முப்பத்தைந்து கிலோவுக்கும் அதிக தேயிலை கொழுந்தை பறிக்க வேண்டும். இவ்வாறான வேலை பளுவை அதிகரிப்பதின் பின்னோக்கம் என்ன? எம்மைப் பொறுத்தவரையில் இது தொழில் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கே இத்தகைய செயல்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும் டித்வா புயலைத் தொடர்ந்து மலையக மக்களின் வாழ்க்கை நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொள்வது என்பது குதிரை கொம்பாகவே இருக்கப் போகின்றது. இது அவர்களின் அன்றாட வாழ்வில் பல பக்கங்களிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.
கடந்த வெள்ளிக்கிழமை (2026.02.06) கண்டிக்கு சென்ற ஜனாதிபதி அண்மைய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 150 பயனாளிகளுக்கு இழப்பீடுகளை வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் 8/ 2025 இன் தொடர் இலக்கம் 8 க்கு ஏற்ப மதிப்பீட்டு குழுவின் அறிக்கை அமைய 25 இலட்ச ரூபாயை பயனாளிகளுக்கு கொடுக்க முடியும். பயனாளிகள் விரும்பினால் மதிப்பீட்டு அறிக்கை இன்றி 5 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு கொடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகினள. அத்தோடு டித்வா காரணமாக சேதமடைந்த வார்த்தக நிலையங்கள் மற்றும் இயந்திரங்களின் சேதத்தில் இருந்து மீண்டு தொழிலை தொடங்குவதற்கு ரூபாய் இரண்டு இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதே.
இப்பயனாளிகளில் மலையக உழைக்கும் மக்கள் உள்வாக்கப்பட்டார்களா அல்லது மலையக மக்களை அடையாளப்படுத்தி இழப்புகளை கொடுப்பதற்கு ஜனாதிபதி மலையகம் நோக்கி செல்லும் நாள் எப்போது? என்பதே மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.
அதே நேரம் பாதிக்கப்பட்டவர்களை பாதிப்பிற்குள்ளான இடங்களிலேயே மீண்டும் சென்று குடியேர வேண்டும் என தோட்ட நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது. இது உழைக்கும் மக்களை கொலை களத்திற்கு தள்ளுவதற்கு சமமான செயலாகும். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் இடங்களை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்த ஜனாதிபதி உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீதி அனைவருக்கும் சமம். மலையக மக்களும் இந்நாட்டு குடிமக்களாக சமத்துவத்தோடு உள்வாங்கப்படும்போதே நாடு சுபீட்சம் காணும். முழுமையாக சுதந்திரத்தை முழு நாடும் அனுபவிக்கும்.
வளமான நாட்டை உருவாக்க அதனை பாதுகாக்க 200 வருடங்களாக உழைக்கும் மலையக சமூகம், வறுமைக்குள் வாழ்வதும், அவர்களுக்கு நீதி கிட்டாதிருப்பதும் திட்டமிட்ட இனவழிப்பாகும். அதுவும் இயற்கை தாக்கத்தினால் முழு நாடும் பாதிக்கப்பட்டிருக்கையில் ஒரு சமூகத்தை அந்த பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்கான வேலைத் திட்டத்தை முன்னேற்றகரமாக முன்னெடுத்துக்கொண்டு, இன்னும் ஒரு சமூகத்தை கட்டமைப்பு ரீதியில் ஒதுக்கப்பட்டு அவர்கள் வாழ்வினை செயலிழக்கும் நிலைக்கு தள்ளுவது சமயங்களில் தர்ம கோட்பாட்டிற்கு துரோகமான செயல் மட்டுமல்ல, அடிப்படை மனித உரிமைகளை மீறும் சர்வதேச குற்றமுமாகும்.
எனவே டித்வா புயல் ஏற்பட்டு இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில் இரு நூற்றாண்டுகள் நாட்டுக்காக உழைத்து வறுமையாக்கப்பட்டு வாழ்வு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மலையக மக்களை விசேட தேவையுடைய சமூகமாக கருதி நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மலையக மக்கள் தம் தேசிய அடையாளத்தோடு பாதுகாப்பான வாழ்வை வடிவமைத்து பொருளாதார ரீதியில் தம்மை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கான காணி உரிமையை வழங்குவதற்கான வேலை திட்டத்தை முன்னெடுக்க அதிகாரிகளை பணிக்குமாறும் மலையக சமூக ஆய்வு மையம் ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றது.
























