”இலங்கையில் மக்கள் போராட்டங்களையும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியையும் அடக்குவதற்கு ,அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை அதே சட்டத்தால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களும் அந்த சட்டத்தையும் பயங்கரவாத சட்டத்தையும் ஒழித்தே தீருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சி பீடம் ஏறியவர்களுமான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியினரே மீண்டும் கையில் எடுத்து அமுல்படுத்தியுள்ளமைதான் காலக்கொடுமையானது”—கே.பாலா
1942 இலிருந்து 2022வரையான 80 வருட காலத்தில் அதிகமான காலம் இலங்கை மக்கள் அவசரகால சட்டத்தினதும் பயங்கரவாத தடைச் சட்டத்தினதும் கீழ்தான் அழிக்கப்பட்டார்கள், அடக்கியாளப்பட்டார்கள். இன்றும் பலர் இந்த சட்டங்களின் கீழ்தான் பல வருடங்களாக சிறைகளில் வாடுகின்றனர் .இரட்டைப் பிசாசுகளான அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதச் சட்டமும் ஒன்றாகச் செயற்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதனை தமிழ் மக்களே முதலில் அனுபவித்தனர். அவ்வாறானதொரு சட்டத்தை அநுரகுமார அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளமை நாடு மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குள் செல்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பாக கடந்த வார பாராளுமன்ற அமர்வில் பிரேரணை முன்வைக்கப்பட்டு சூடான விவாதங்கள் இடம்பெற்ற நிலையிலேயே நாடு மீண்டும் இரட்டைப் பிசாசுகளான அவசரகாலச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற ரீதியில் ஒரு அராஜக நிலைக்கு சென்று விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது. அதுவும் நாட்டுக்கு புதிய திசை காட்ட வந்த அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பழைய திசையில் பயணிக்க முற்படுவதும் கடும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. இலங்கையை ஆட்சிபுரிந்த பிரதான சிங்களக் கட்சிகளின் தலைமைகளிலான அரசாங்கங்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் எழுதிய இரத்த வரலாறுகளை சிறுபான்மையின மக்கள் இதுவரை மறக்காததாலேயே மீண்டும் அவசரகாலச் சட்டம் அமுல் என்றவுடன் அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளனர்.
அவசரகால சட்டம் அமுலான தருணங்கள்
இலங்கையில் முதற் தடவையாக 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி அன்று அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சுதந்திரமடைவதற்கு முன்னமே அன்றைய காலனித்துவ அரசாங்கத்தின் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டது இது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான் இலங்கையைச் சுற்றிவளைக்க முயன்று கொண்டிருந்த காரணத்தைக் காட்டி கட்டாய இராணுவச் சேவைக்காகவே இந்த அவசரகால சட்ட நிலை அன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தமும் அதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவும் அன்றைய சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கபட்டது.இதனை பயன்படுத்தியே 1953 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த ஹர்த்தால் டட்லி சேனநாயக்க அரசினால் அடக்கப்பட்டது. பண்டாரநாயக்காவின் ஆட்சியின் கீழ், 1958 ஆம் ஆண்டு மே மாதம் இனக்கலவரம் நடந்தது. இந்த இனக்கலவரத்தின் போது நூற்றுக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர் கொழும்பில் அகதிகளாக்கப்பட்டனர். பல தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.இனக் கலவரம் 27ஆம் திகதியே தொடங்கிய போதும் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகிய மூன்றாவது நாளே அதாவது 29ஆம் திகதியே அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதாவது அவசரகால சட்டம் அவசியமான நேரத்தில் அமுலாகவில்லை
1958 ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி போடப்பட்ட அவசரகாலச் சட்டம் 1959 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் திகதி வரை அமுலிலிருந்தது. அதன் பின்னர் பண்டாரநாயக்க செப்டெம்பர் 25ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அன்றிலிருந்து டிசெம்பர் 2ஆம் திகதிவரை அவசரகால சட்டம் அமுலில் இருந்தது. மீண்டும் 1961 ஏப்ரல் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழரசு தபால் சேவையை நடத்தியதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் திகதி அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழரசுக் கட்சியும் அன்றே தடை செய்யப்பட்டது.இந்த அவசரகால சட்டம் 1963 ஆம் ஆண்டு மே தினத்தன்று வரை அமுலில் இருந்தது.
டல்லி-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் கொண்டு செல்லப்பட்ட பிரசாரங்கள், ஊர்வலங்கள் காரணமாக 1966 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் அது டிசம்பர் 17 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது. பின்னர் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு அது 1969ஆம் ஆண்டு 17ஆம் திகதி வரை அமுலில் இருந்தது. இக்கால இடைவெளிக்குள் வடக்கு கிழக்குப் பகுதியிலும் மலையகத்திலும் நடந்த தமிழர்களின் போராட்டங்கள் மோசமாக அடக்கப்பட அவசரகாலச் சட்டமே பயன்படுத்தப்பட்டது.
1971ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சியினால் பீதியுற்ற அரசாங்கம், மார்ச் மாதம் 16ஆம் திகதி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது. இதன் கீழ் அனுமதியின்றி பிணங்களை எரிக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது. இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை 20,000க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்து அடக்கியது. அதே அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியே பல ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை முகாம்களுக்கும் சிறைக் கூடங்களுக்கும் அனுப்பியது அன்றைய சிறிமாவோ அரசாங்கம்.
1979 ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி வரை இந்த அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது. இக் கால இடைவெளிக்குள் வடக்கில் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்குவதற்கும் இச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. 1977ஆம் ஆண்டு ஜே.ஆர் தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் ஆட்சியமைத்தது. 1994 வரையான 17 ஆண்டு கால ஆட்சிக்குள் 11 வருடங்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழேயே ஆட்சி நடத்தியது. வடக்கில் எழுந்த உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதக் கிளர்ச்சியாகவே பார்த்த ஜே.ஆர் அரசாங்கம் 1979 ஜூன் 11ஆம் திகதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியது. இந்த அவசரகாலச் சட்டத்தை அமுலில் வைத்துக் கொண்டே ஜூலை 12ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. 1979 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது.
1980 ஆம் ஆண்டு ஜூலையில் சம்பள உயர்வு கோரி நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நசுக்குவதற்காக ஜூலை 16 ஆம் திகதி போடப்பட்ட அவசரகாலசட்டம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வரை நீடித்தது. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதே அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
அடுத்ததாக 1981 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டம் ஒரு கிழமை நீடித்தது. 1981 ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்துக்கான மாவட்ட சபைத் தேர்தல் வேட்பாளரான ஐ.தே.க.வைச் சேர்ந்த ஏ.தியாகராஜா இனந்தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவசரகாலசட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. மீண்டும் அவசரகாலசட்டம் 1981 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 17ஆம் திகதி போடப்பட்டு 1982 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி வரை அமுலில் இருந்தது. அதேவேளை 1982ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டது.
வரலாற்றில் முக்கியமானஅவசரகாலசட்டமாக 1983 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி போடப்பட்டதையே குறிப்பிட வேண்டும். 1983 ஜூலை இனப்படுகொலை கூட இதன் கீழ் தான் நடத்தப்பட்டது.அன்றைய அந்த அவசரகாலச் சட்டம் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது. அந்த இடைக் காலத்திற்குள் எவ்வளவோ நடந்து முடிந்திருந்தன.
இந்த அவசரகால சட்டமும் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி நீக்கப்பட்டிருக்கையில் ஒன்பதே நாட்களில் அதாவது ஜனவரி 20ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவால் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. அது 1994 செப்டம்பர் வரை அமுலில் இருந்தது. 2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை இனப்படுகொலை மூலம் அழித்தொழிக்க இந்த அவசரகாலச்சட்டமே பயன்படுத்தப்பட்டது.இந்த சட்டம் மூலமே பல்லாயிரக்கணக்கான தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்,கடத்தப்பட்டார்கள்,காணாமல் போகச் செய்யப்பட்டார்கள்,கைதிகளாக்கப்பட்டார்கள், அகதிகளாக்கப்பட்டார்கள்.
பின்னர் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்தபடி 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் திகதி அவசரகால சட்டத்தை நீக்கியது. ஆனால் 06.09.2011 வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் அதன் பல அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன.இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மார்ச் ஆரம்பத்தில் திகனவில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன வன்முறை வெடித்தபோது மார்ச் 6 ஆம் திகதி அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் சில தினங்களில் அது நீக்கப்பட்டது.
இதன் பின்னர் 2019 ஏப்ரல்21 ஆம் திகதி கொழும்பு,நீர்கொழும்பு,மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததையடுத்து ஏப்ரல் 22 ஆம்திகதி முதல் மீண்டும் அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமுல்படுத்தப்பட்டது.
பின்னர் நீக்கப்பட்டநிலையில் பாவனையாளர்களுக்கும் மக்களின் நலனுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் சந்தை முறைகேடுகளை ஏற்படுத்தும் வகையில், அரிசி, சீனி உள்ளிட்ட உணவுத் தொகைகளைப் பதுக்கியும் விநியோகத்தை தடுத்தும், மிகக் கூடுதலான விலையை அறவிடுவதைத் தடுப்பதற்கெனக்கூறி மீண்டும் 2021 ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச அரசினால் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் நீக்கப்பட்டு மீண்டும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது ஏற்பட்ட போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறாக இரட்டைப் பிசாசுகள் அல்லது இரட்டைக் குழல் துப்பாக்கி எனக்கூறப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தாது நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசாங்கம் கூட இலங்கையில் இருந்தது கிடையாது. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அரசாங்கமும் பொதுஜன பெரமுன அரசாங்கமும் இச்சட்டத்தின் கீழேயே மாறி,மாறி நாட்டில் ஆட்சிஅதிகாரம் புரிந்து வந்துள்ள நிலையில் இப்போது அதே வழியில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி அரசாங்கமும் இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது .
நாட்டில் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒரு அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திலோ அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க முடியும். அப்படியான ஜனாதிபதியின் அறிவித்தல் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதனை பாராளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும் வேண்டும். அதன் பின்னர் இந்த அவசர கால சட்டத்தை கால நீடிப்பு செய்ய பாராளுமன்றத்தில் மாதம் ஒரு தடவை ஒப்புதல் பெறவேண்டும். அந்த வகையில் இந்த அவசர கால சட்டத்தை தற்போது ஜனாதிபதி அநுரகுமாரவும் கடந்த நவம்பர் 26 இல் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் பேரழிவை பயன்படுத்தி அமுல்படுத்தியதுடன் தற்போது மாதத்திற்கொருதடவை நீடிக்கவும் செய்கின்றார். இதுதான் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது .
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் ஜனவரி 28ஆம் திகதி இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வர்த்மானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டது.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ,இந்த அனர்த்த நிலைமையின் போது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்திற்கமைய அவசரகால சட்டத்தையும் அமுல்படுத்தினோம். இவ்வாறான அனர்த்தங்களின் போது சாதாரண சட்டங்களை விடவும் இதுபோன்ற சட்டம் அவசியம். இதன்மூலமே அதிகாரிகள், உபகரணங்களை வேறு மாவட்டங்களுக்கு அனுப்ப முடியும். இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான சட்டத்தை ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்தோம். இந்த மக்கள் பாதுகாப்பு சட்டத்தை மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் பயன்படுத்துவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்படாது. எம்மீதான விமர்சனங்கள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. நாங்கள் ஒருபோதும் இந்த சட்டத்தை மக்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப் போவதில்லை என உறுதியளித்தார்.
ஆனால் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமையை அறிவித்திருந்தால், அந்தச் சட்டத்தின் 10, 11 மற்றும் 12ஆவது பிரிவுகளின் கீழ் தேவையானவற்றைச் செய்திருக்க முடியும். ஏனெனில் இது ஒரு அவசர நிலைமை. குறிப்பாக ஒரு அவசரகால நிலைமையை அறிவிக்கும்போது, இந்த விதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் அனர்த்த நிலையை அறிவித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறாக அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமையை அறிவித்து , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகைகள் இருக்கத்தக்கதாக, அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது பல்வேறு அடக்குமுறைகள் இடம் பெற வாய்ப்பளிக்கும் என்பதே எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூக அமைப்புக்களின் குற்றச் சாட்டாகவும் எச்சரிக்கையாகவும் உள்ளது.
இலங்கையில் வர்க்க அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தையும் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியையும் முறியடித்து, அடக்குவதற்கு ,அழிப்பதற்கு ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அவசரகாலச் சட்டத்தையே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இச்சட்டத்தின் கீழேயே கொடிய அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இரத்த ஆறுகளும் இலங்கையில் ஓடியிருக்கின்றன. தெற்கிலே,வடக்கு,கிழக்கிலே இலட்சத்துக்கு மேற்பட்ட உயிர்ப் பலிகள் எடுக்கப்பட்டன. இருண்ட ஆட்சியையே அரசுகள் நடத்தின. இவ்வாறான கொடூர அவசரகாலச் சட்டத்தையே தற்போது அதே சட்டத்தால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களும் அந்த சட்டத்தையும் பயங்கரவாத சட்டத்தையும் ஒழித்தே தீருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சி பீடம் ஏறியவர்களுமான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியினரே மீண்டும் கையில் எடுத்து அமுல் படுத்தியுள்ளமைதான் காலக்கொடுமையானது.
பல தசாப்தங்களாக தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, ஒழிக்க .சிங்கள இளைஞர்களின் புரட்சியை முறியடிக்க இலங்கையை ஆட்சி புரிந்த சகல அரசுகளினாலும் பயன்படுத்தப்பட்ட இந்த அவசர காலச்சட்டத்தை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் கையில் எடுத்துள்ளது.தற்போது பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மை உறுப்பினர்கள் என்ற மமதையில் சர்வாதிகாரப்போக்குடன் ஆட்சிபுரிய இந்த அரசாங்கம் எத்தனிக்கும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்ற புதிய பெயரில் அறிமுப்படுத்தியுள்ளதுடன் டித்வா புயல் பேரழிவை சாட்டாக வைத்து அவசரகால சட்டத்தையும் அமுல்படுத்தத் தொடங்கியுள்ளமையால் இலங்கை மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


























