அண்மைக்காலமாக பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் மறு வெளியீடாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், கமலஹாசனின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய் நடித்த கில்லி, அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் சிலம்பாட்டம் போன்ற திரைப்படங்கள் மறு வெளியீடு ஆகி வசூலை அள்ளியது. வெள்ளி விழா கொண்டாடிய ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் 43 ஆண்டுகளை கடந்திருக்கிறது. டி. ராஜேந்தர் கதாநாயகனாக படம் முழுக்க தோன்றியது ‘உயிருள்ளவரை உஷா’ படத்தில்தான். தனது காதலியின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து டி. ராஜேந்தர் எடுத்திருந்த இந்த படத்தில் நடிகர் கங்கா, நளினி ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர். 1983-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘உயிருள்ளவரை உஷா’ படம் 43 வருடங்களுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறு வெளியீடானது.
இந்த நிலையில் சிம்பு இப்படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “உயிருள்ளவரை உஷா” படத்தின் உணர்ச்சிப்பூர்வமான உணர்வுகள், சிறப்புவாய்ந்த நடிப்புகள் மற்றும் மறக்க முடியாத இசைகள்… இந்தப் படம் பார்வையாளர்கள் மத்தியிலும் என்னிடத்திலும் தொடர்ந்து ஒரு ஸ்பெஷல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த கிளாசிக் படம் மீண்டும் ஒருமுறை அதன் தகுதிக்கேற்ப கொண்டாடப்படட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
























