அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் படித்து வரும் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22 வயது) கலிபோர்னியாவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். அவரது கடப்பிதழ் மற்றும் மடிக்கணினி இருந்த பை, பார்க் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக டுவைட் வேயின் 1700 பிளாக்கில் சாகேத் ஸ்ரீனிவாசய்யா காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர் காணாமல் போயுள்ளது குறித்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா காணாமல் போனது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவரை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகேத் ஸ்ரீனிவாசய்யா குறித்து தகவல் தெரிந்தவர்கள் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
























