டில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழுவின் மையமாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஏ.ஐ. உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்படுவது உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு பெருமை ஆகும். செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தின் ஆரம்பத்தை மட்டுமே நாம் இப்போது பார்க்கிறோம். செயற்கை நுண்ணறிவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி. அது திசையில்லாமல் இருந்தால் ஒரு இடையூறாக மாறும். செயற்கை நுண்ணறிவின் எல்லைகளை நாம் திறந்துவிட வேண்டும். அதே சமயம், அதன் கட்டுப்பாடு நம் கையில் இருக்க வேண்டும். இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள், இந்தியா செயற்கை நுண்ணறிவை பார்க்கும் கண்ணோட்டத்தை தெளிவாக பிரதிபலிக்கிறது. அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி, இதுவே எங்கள் அளவுகோல். நாம் ஒன்றாக முன்னேறினால், செயற்கை நுண்ணறிவு மனித குலத்தின் திறனை உயர்த்தும். நாம் செயற்கை நுண்ணறிவை எந்த திசையில் எடுத்துச் செல்கிறோம் என்பது நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும். உலகளாவிய பொது நன்மைக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கு நாம் உறுதியளிப்போம். டீப்-பேக் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சமூகத்தை சீர்குலைத்து வருகின்றன. டிஜிட்டல் உலகில், உள்ளடக்கம் என்பது நம்பகத்தன்மை கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் உண்மையானது மற்றும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது என்ற வித்தியாசத்தை அறிவார்கள். பல தசாப்தங்களுக்கு முன்பு இணையம் தொடங்கியபோது அது எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அதேபோல், செயற்கை நுண்ணறிவு துறையில் எதிர்காலத்தில் என்ன வகையான வேலைகள் உருவாக்கப்படும் என்பதை கற்பனை செய்வது கடினம். செயற்கை நுண்ணறிவை கண்டு இந்தியா பயப்படவில்லை. செயற்கை நுண்ணறிவில் வலுவான எதிர்காலத்தை இந்தியா காண்கிறது. சிலர் செயற்கை நுண்ணறிவில் பயத்தை காண்கிறார்கள். ஆனால் இந்தியா அதில் அதிர்ஷ்டத்தையும், எதிர்காலத்தையும் காண்கிறது. எங்களிடம் திறமை, ஆற்றல் மற்றும் கொள்கை தெளிவு உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்கள் ஏ.ஐ. மாதிரிகள் மற்றும் செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளன. இந்த மாதிரிகள் நமது இளைஞர்களின் திறனை வெளிப்படுத்துகின்றன. இந்தியா செயற்கை நுண்ணறிவு புரட்சியின் ஒரு பகுதியாக மட்டும் இல்லாமல், அதனை வழிநடத்தி செல்கிறது. மனிதர்கள் செயற்கை நுண்ணறிவுக்கான தரவுப் புள்ளியாகவோ அல்லது மூலப்பொருளாகவோ மாறாமல் இருக்க செயற்கை நுண்ணறிவை ஜனநாயகப்படுத்த வேண்டும். மனித வரலாற்றில் சில திருப்புமுனை தருணங்கள் அடுத்து வரும் நூற்றாண்டுகளை வடிவமைத்துள்ளன. அந்த திருப்புமுனைகள் நாகரிகத்தின் திசையை மாற்றி, வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு என்பது மனித வரலாற்றின் திருப்புமுனைகளில் ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
























