அமரத்துவம் அடைந்திட்ட அற்புதமான ‘மனிதம்’ சட்டநாதர் அவர்களின் இழப்பு தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல அன்பர்களை ‘அசைத்திருக்கின்றது’ என்பதை அவரது இறுதிக்கிரியை இடம்பெற்ற நாளில் அஞ்சலியுரையாற்றிய பலரது பகிர்வுகள் எமக்கு பறை சாற்றி நிற்கின்றன.
பல விடயங்களில் மிகவும் ஆழமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் குடும்ப வாழ்விலும் குறைகள் எதுவுமற்றவராகவும் அதற்கு மேலாக கலையையும் இலக்கியத்தையும் எம் மொழியையும் தன்னிடத்திலிருந்து பிரிந்து நிற்காத வகையில் நாட்களை நகர்த்திய வண்ணம்., அறிவைத் தேடுபவராக, ஒரு அற்புத வாழ்வை நாம் அனைவரும் அறியக்கூடிய வகையில் அர்ப்பணித்து மறைந்தவரே செல்வத்துரை சட்டநாதர் அவர்கள்.
இவ்வாறான ஒருவர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைப் பதிவு செய்கின்றபோது அதற்கு “ இரு மனங்களை திருமணங்கள் மூலம் இணைக்கும் பணியினை இதய சுத்தியுடன் தன் வாழ்நாளில் ஆற்றியவர் அமரர் சட்டநாதர்!” என்று ஏன் தலைப்பிட வேண்டும் என்று பலர் நினைக்கலாம். அதற்கான காரணத்தை இந்தப் பதிவின் இறுதிப் பகுதியில் தரலாம் என்ற எண்ணதோடு இதைத் தொடர எண்ணுகின்றேன்.
சட்டநாதர் அவர்களை எமது மாணவர் பருவத்திலேயோ அன்றி இளைமைக் காலத்திலேயோ சந்திக்கவுமில்லை உரையாடவுமில்லை. அவர் ஒரு மூலையிலும் நான் இன்னொரு மூலையிலும் எமது மாங்கனித்தீவாம் இலங்கையில் வாழ்ந்தும். கல்வி கற்றும் இன்னும் பல துறைகளில் கால்பதித்தும் எமது இருப்பைத் தொடர்ந்தவர்கள். 1976ம் ஆண்டு நான் எனது தொழில் நுட்பக் கல்வியைத் தொடர்வதற்காக கொழும்புத் தலைநகர் சென்று தங்கியிருந்தபோது அவரது நட்பும் தொடர்ச்சியாக அவரிடத்திற்குச் சென்று உரையாடும் வாய்ப்பும் எனக்குத் தாராளமாகக் கிட்டின.
அந்த நாட்களில் அவர் தெமட்டகொட வீதியில் உறவினர் ஒருவரோடு அறை எடுத்துத் தங்கியிருந்தார். தனது அலுவலகப் பணிகள் முடிந்து அறை வந்து சேர்ந்த பின்னர் மாலைக்குப் பிந்தியதான மென்னிருள் படியும் வேளையில் அவரது அறைக்குச் செல்வது வழக்கம். சட்டநாதர் அவர்கள் அறையை சுத்தம் செய்த பின்னர் தனக்கும் நண்பருக்குமாகச் சமைக்கத் தொடங்கிவிடுவார். ஆனால் நான் அவரதுஅறைக்குச் செல்லும் போதெல்லாம் தனது வேலைகள் எதையும் நிறுத்திவிடாமல் தொடர்ந்து செய்தவண்ணம் எம்மோடு உரையாடுவார். எம்மைப் பற்றியும் எமது டும்பத்தைப் பற்றியும் அக்கறையோடு விசாரிப்பார். சில வேளைகளில் நண்பர்கள் எவரோடும் சென்றாலும் சமனாக உபசரித்து அவரையும் உணவருந்திச் செல்லுமாறு அன்புடன் வற்புறுத்துவார்.
திருவள்ளுவர் தனது இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் விருந்தோம்பல் பற்றி அழுத்தமாகச் சொல்கின்றார். அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தனது வரிகளைப் பதிவு செய்கின்றார். ஆனால் எமது சட்டநாதர் அவர்கள் இல்லற வாழ்க்கையில் புகுவதற்கு முன்னரே விருந்தோம்பல் என்னும் உபசரிக்கும் பண்பை, தொடர்ச்சியாக கடைப்பிடித்தும் விருப்பத்தோடும் ஆற்றிவந்ததை நாம் நேரடியாக அவரிடத்தில் தரிசித்தமை இன்றும் நினைவில் உள்ளது. எனவே,
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.”
என்னும் வள்ளுவரின் வரிகளை அவருக்காக இந்த நேரத்தில் சமர்ப்பணம் செய்கின்றேன்.
அவர் பணி செய்த அரச திணைக்களம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான அனுமதிப் பத்திரம் வழங்கும் முக்கிய அரச நிறுவனமான விளங்கியது. பலர் அலுவலகத்தில் சட்டநாதர் அவர்களை பல தேவைகளுக்காக நாடும் போது அவரோ சட்டத்திற்கும் அலுவலக ஒழுங்கிற்கும் ஏற்ப தன் கடமைகளை ஆற்றுவபவர் என்பதை அறிந்து கொள்வார்கள். தங்கள் “முயற்சிகள்’ சட்டநாதர் அவர்களிடத்தில் ‘செல்லாத’ ஒன்றாக இருந்தமையால் அவரது அறை தேடிவருவார்கள். ஆனால் அவரோ அவ்வாறானவர்களை புறக்கணித்து. அறைக் கதவுகளையும் திறக்கவே மாட்டார். தனக்கு அரசாங்கம் தருகின்ற சம்பளம் ஒன்றே போதுமானது என்பதை எம்மிடத்தில் அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.
இவ்வாறான அவரது நேர்மை. கண்ணியம். நட்பு பாராட்டுதல். சமூகத்தின் மீதான அக்கறை போன்ற குணாம்சங்களை நாம் ஓரிரு வருடங்களில் நன்கு அறிந்து கொண்டு அவர்மீது தீராத பற்றும் மரியாதையும் கொண்டவர்களாக பழகி வந்தோம்.
சட்டநாதர் அவர்கள் திருமண வயதை அடைந்திருந்தும். தனது திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் கொழும்பிலுள்ள தனது நண்பர்கள் சிலருக்கு திருமணம் செய்துவைக்கும் வகையில் மணமகன்- மணமகள் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திப்பதும், ‘பொருத்தங்கள்’ பார்ப்பதுமாக அவரது பல மணித்துளிகளை அர்ப்பணித்து வந்தார்.
இப்போது. இந்தப் பதிவிற்கு நான் இட்ட தலைப்பு பற்றிய விபரங்களையும் அதற்கான காரணத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன்.
நான் வயதில் குறைந்தவனாக இருந்தாலும் சட்டநாதர் என்னும் இந்த ‘நல்ல மாப்பிள்ளையை’ தெரிந்தவர்களின் குடும்பம் ஒன்றின் மருமகனாக்க முயற்சி செய்வோமே என்ற எண்ணத்தில் திருநெல்வேலியில் எமது வீட்டுக்கு அருகில் வாழ்ந்து வந்த எனது ஒன்று விட்ட சகோதரரும் பிரபல சிற்பக் கலைஞரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான செ. கந்தசாமி அண்ணர் அவர்களிடத்தில் சட்டநாதர் பற்றிய விபரங்களையும் சாதகத்தையும் சேர்ப்பித்தேன். தனது மூத்த புதல்வியான விமலசோதி அவர்களுக்கு தகுந்த வரனைத் தேடுகின்றார் என்பதை ‘இந்தச் சிறியவன்’ அறிந்து வைத்திருந்தபடியால் அந்த எண்ணம் என்னில் உதித்தது.
மகிழ்ச்சியுடன் சட்டநாதர் அவர்களின் சாதகத்தை கைகளில் பெற்றுக் கொண்ட கந்தசாமி அண்ணர் மிகுந்த ‘கடுகதி’ வேகத்தில் செயற்பட்டு. சாதகப் பொருத்தம் பார்த்து பின்னர் உடனடியாக ‘மணமகன்’ சட்டநாதரின் பிறந்த ஊரான மாதனைக்குச் சென்று அவரது உற்றார் உறவினர்களோடு உரையாடி திருமணத்திற்கான நாளையும் குறித்துக் கொண்டு திரும்பி வந்தார். இது நம்ப முடியாத காரியம் என்றும் சிலர் எண்ணினாலும் இதுவே, எமது சட்டநாதர் அவர்கள் திருநெல்வேலியின் ‘மருமகனான’ கதை..
திருமணத்தின் பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் பெற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அதே திணைக்களத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் அவரிடத்தில் இயற்கையாகவே நிறைந்து வழிந்த நற்பண்புகள் காரணமாக அருகில் வாழ்ந்த உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவராலும் மதிக்கப்பெறுபவராக விளங்கத் தொடங்கினார். அயலில் பல மாணவ மாணவிகளுக்கு ‘ரியூசன்’ வகுப்புகள் எடுக்கும் ஆசானாவும் அவர் அறியப்பெற்றார்.
கந்தசாமி அண்ணர் அவர்களின் குடும்பம் ‘சம்பாதித்து’ வைத்திருந்த நற்பெயரும் அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகனாக வந்த சட்டநாதர் அவர்களின் இயல்பான நட்பும், நடத்தையும் தலைமத்துவப் பண்புகளும் அயலில் உள்ளவர்களோடு மேலும், இறுக்கமான உறவுகளை ஏற்படுத்தின என்றால் அது மிகையாகாது.
இவ்வாறான நிலையில் வார இறுதி நாட்களில் ஆங்காங்கே உள்ளவர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்றவர்களின் குடும்பங்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு அதை ஒரு தொண்டாக ஏற்று தொடர்ந்தார். இவ்வாறான காலப்பகுதியில நானும் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று வந்து எனது இதர முயற்சிகளிலும் கால்பதித்து வாழ்ந்த நேரத்தில் “குஞ்சு’விற்கு ஒரு நல்ல பெண்ணை நானே தேர்ந்தெடுப்பேன்” என்று கிளம்பியவர் தனியாகவும் சில வேளைகளில் என்னை இணைத்துக்கொண்டும் ஏனைய பல கிராமங்களுக்குச் சென்று உறவினர்களின் வீடுகளில் தனது நோக்கத்தை எடுத்துச் சொல்லி இறுதியில் எங்கள் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்ட ஒரு மணமகளை எனக்காக அழைத்து வந்தார்.
தற்போது இந்தப் பக்கத்தை வாசித்தவர்களுக்கு இந்த தலைப்பின் அவசியம் புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு. அற்புதமான ஒரு ‘மனிதம்’ , அவருக்குள்ளே இருந்த ‘திறந்த” இதயம் அதனிலும் மேலான உயிர் அனைத்தையும் இழந்து நிற்கும் அன்னாரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது குடும்பம் சார்ந்த அஞ்சலியும் அனுதாபமும் உரித்தாகுக!
கனடாவிலிருந்து : நாகமணி லோகேந்திரலிங்கம்
























