அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், 2-வது முறையாக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்புகளை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தினார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஆடை, ஜவுளி, வேளாண், உணவு சார்ந்த பொருட்களுக்கு 25 சதவீத வரி, அதுதவிர 25 சதவீத கூடுதல் வரி என வரிவிதிப்புகள் கடுமையாக்கப்பட்டன. இதனால், இந்திய ஏற்றுமதி சந்தை பெருமளவில் நெருக்கடியை சந்தித்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும்போது, கடுமையான வரி விதிப்புகளை சந்தித்தன. இந்த நிலையில், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உள்ளது. இதனால், இந்தியாவுக்கான வரிகள் 18 சதவீதம் என்றளவில் குறையும் என கூறப்பட்டது. இந்த சூழலில், டிரம்ப்பின் வரிவிதிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. சில வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அதில், டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்தனர். எனினும், இறக்குமதிகளை ஒழுங்குபடுத்த அதிபருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரம் அளித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே டிரம்ப் அவற்றை அமல்படுத்தி உள்ளார் என்று துணை அதிபர் வான்ஸ் கூறினார்.வரிவிதிப்பதற்கு என அதிபர் டிரம்ப்புக்கு பிற பரவலான அதிகாரங்கள் உள்ளன. அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்க அவற்றை டிரம்ப் பயன்படுத்துவார். இந்த அரசு நிர்வாகத்தின் வர்த்தக முன்னுரிமைகளை அவர் நவீனப்படுத்துவார் என்றார். இதன்படி வர்த்தக சட்டம் 1974, பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத வரி விதிப்புக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த சட்ட பிரிவின்படி, கட்டணம் செலுத்துதலில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் 150 நாட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்த டிரம்புக்கு (அதிகபட்சம் 15 சதவீதம்) அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், தற்காலிக 10 சதவீத இறக்குமதி வரியானது வருகிற 24-ந்தேதி அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. எனினும், சில பொருட்களுக்கு இதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில் அவை அமெரிக்க பொருளாதாரத்திற்கு அவசியம் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இரவோடு இரவாக இந்த வரியை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தி, டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
























