பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள முழு அளவிளான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பாகிஸ்தானுடன் நான் மிக மிக நன்றாகப் பழகுகிறேன். அவர்களுக்கு ஒரு சிறந்த பிரதமர் (ஷெபாஸ் ஷெரீப்) மற்றும் ஒரு சிறந்த ராணுவத் தளபதி (ஜெனரல் அசிம் முனீர்) உள்ளனர். நான் மிகவும் மதிக்கும் இருவர் அவர்கள். பாகிஸ்தான் தற்போது மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக நான் கருதுகிறேன்” என்று கூறி இந்த மோதலில் இப்போதைக்கு தலையிடப்போவதில்லை என தெரிவித்தார்.
தாலிபான் தாக்குதல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 6 இல் இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குகளில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியதில் 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக நேற்று பாகிஸ்தான் எல்லைப் புறங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் கைது செய்யப்பட்டு முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் கூறியது. பதிலடியாக ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் நகரங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 தாலிபான் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் 290 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
























