இலங்கையில் அனைத்து இனக்குழுக்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் எதிரான கொலைகள் மற்றும் குற்றங்களை விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க வேண்டுமென அங்கு உரையாற்றிய முக்கிய அரசியலவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
“இந்த தமிழ் பேசும் சமூகங்களின் விடிவு நோக்கிய பயணத்தில் இவர்களின் (ஊடகவியலாளர்களின்) பங்களிப்பை மறக்க முடியாது. அதேநேரம் அக்கிரமமாக உயிர் பறிக்கப்பட்ட ஏராளமான ஊடகவியலாளர்கள் பற்றி இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு என்ன செய்யலாம் என நினைக்கும்போது ஒன்றை மாத்திரம் சொல்ல வேண்டும். பத்திரிகை நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் எத்தனையோ ஆணைக்குழுக்களை அமைத்துவிட்டார்கள். ஊடகவியலாளர்களுக்கு நடந்த கொடூரங்களை விசாரிக்க ஒரு ஆணைக்குழு வேண்டும். தனியாக அதற்கென அமைக்கப்பட வேண்டும்.”
இந்த நாட்டின் இனப் பிரச்சினையில் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றாக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதைக் கருத வேண்டுமென, ஒரு வருடத்திற்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமான மூத்த தமிழ் ஊடகவியலாளர் ராஜநாயகம் பாரதியின் நினைவாக வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் உரையாற்றிய, பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
நான்கு தசாப்தங்களாக ஊடகத்துறையில் செயற்பட்ட பாரதி, 2025 பெப்ரவரி தனது 63 வயதில் காலமானார்.
யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட ஈழமுரசு பத்திரிகையின் மூலம் ஊடகத்துறைக்குள் நுழைந்த அவர், முரசொலி மற்றும் ஈழ நாடு ஆகியவற்றில் பணியாற்றியதோடு, தினக்குரல் மற்றும் வீரகேசரி பத்திரிகைகளில் உயர் பதவிகளை வகித்தார். அவர் இறக்கும் போது யாழ்ப்பாண ‘வீரகேசரி’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிகமாக, போரின் போது கொழும்பு பெருநகரப் பகுதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக ஊடக உரிமைகளுக்காகப் போராடிய ஒரு ஊடகவியலாளராக ராஜநாயகம் பாரதி அறியப்படுகிறார்.
கடந்த இரண்டு வருடங்களில் ஊடகவியலாளர்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்ட நாடாக பாலஸ்தீனம் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அதற்கு முன்னர் இலங்கை அந்த சாதனையைப் படைத்திருந்ததாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
“கடந்த இரண்டு வருடங்களில் பலஸ்தீனத்தில்தான் அதிகளவு ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர். ஆனால் அதற்கு முன்னர் சர்வதேச ரீதியில் முதல் இடத்தில் இருந்த ஒரு நாடு இலங்கை. எனவே ஊடகவியலாளர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது தொடர்பாக ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.”
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில், 44 ஊடகவியலாளர்கள் கொலைகள் மற்றும் கடத்தல்கள் உட்பட துன்புறுத்தலுக்கு உள்ளானதாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் தொகுத்த அறிக்கை காட்டுகிறது.
அவர்களில் பெரும்பாலோர் வடக்கிக் தமிழ் ஊடகவியலாளர்கள். அவர்களில் எவருக்கும் நீதி நிலைநாட்டப்படவில்லை.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைய விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்படுவதன் மூலம், கொலைகளுக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய வரலாற்றை எழுத முடியும் என வேறு சில பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
“இன்று உளவுத்துறையின் பிரதான அதிகாரிகள் எல்லாம் கைது செய்யப்படுகின்றார்கள். இதற்கு பின்னால் என்னென்ன சதிகள் எல்லாம் நடந்தன என்றெல்லாம் விசாரணைகள் எல்லாம் நடைபெறுகின்ற அதேநேரம், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு பின்னால் என்ன நடந்தது எனப் பார்க்கின்ற அதேநேரம், இந்த நான்கு, ஐந்து தசாப்தங்களாக பலியான ஊடகவியலாளர்கள் குறித்த ஒரு ஆணைக்கழு அமைவது இன்றியமையாதது – அவசியமானது. அதன் மூலம் மிகப்பெரும் சரித்திரம் எழுதப்படும். அதற்கு பின்னால் இருக்கின்ற சதிகள் அம்பலத்திற்கு வரும்.”
இவ்வாறு அன்றைய பத்திரிகையாளர் பாரதி அவர்களின் நினைவு நாளில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்காக பல பத்திரிகையாளர் குரலை எழுப்பியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
2024 ஒக்டோபரில், அப்போதைய அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் கொலைகள் உட்பட “emblematic case’ என அழைக்கப்படும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் அரசாங்கமோ அல்லது பொலிஸார் உள்ளிட்ட அரச புலனாய்வு அமைப்புகளோ அந்தக் கொலைகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை பகிரங்கப்படுத்தவில்லை எனவும் கூறியிருந்தார்.
























