ஸ்காபுறோவில் ‘ஆதி தொலைக்காட்சி’ என்னும் புதிய காட்சி ஊடகத்தின் தொடக்க விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் .
“எமது தாய் மண்ணான இலங்கையிலிருந்தும் மலேசியா போன்ற தமிழ் மணம் கமழும் ஏனைய சில நாடுகளிலிருந்தும் அனுபவமும் ஆற்றலும் மிக்க பல ஊடகவியலாளர்கள் அண்மைக்காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்ந்துமை எமக்கு நம்பிக்கைகளைத் தருகின்றது. அவர்களில் பலர் அச்சு ஊடகம் – காட்சி ஊடகம் மற்றும் வானொலித்துறை ஆகியவற்றில் பெற்ற அனுபவங்களை தாங்கள் குடியேறியுள்ள இந்த அற்புத தேசமாம் கனடாவில் பயனுள்ளதாக்க புதிதாக ஊடக நிறுவனங்கள் தேவையாய் உள்ளன. எனவே இன்று தொடங்கிவைக்கப்பெறுகின்ற ” ‘ஆதி தொலைக்காட்சி’ என்னும் புதிய காட்சி ஊடகத்திற்கு பல ஆளுமைகளின் தேவை காணப்படுகின்றது.
ஏற்கெனவே இந்த தொலைக்காட்சி நிறுவனத்தோடு இணைந்து கிருஸ்ணா போன்ற ஊடகவியலாளர்கள் தங்கள் அனுபவங்களை இந்த காட்சி ஊடகத்தில் பிரயோகிக்கின்ற போது ‘ஆதி தொலைக்காட்சி’ என்னும் புதிய காட்சி ஊடகமும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் தோன்றும்”
மேற்கண்டவாறு கடந்த 01-03-2026 ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் ‘ஆதி தொலைக்காட்சி’ என்னும் புதிய காட்சி ஊடகத்தின் தொடக்க விழாவில் சிறப்;புரையாற்றிய கனடா ‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் தெரிவித்தார். மேற்படி விழாவிற்கு பிரதம விருந்தினராக மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். நிகழ்ச்சிகளை அறிப்பாளர் வசந்தம் தொலைக்காட்சி புகழ் சாலினி பிள்ளை தொகுத்து வழங்கினார்.
பிரதம விருந்தினர் லோகன் கணபதி அவர்கள் அங்கு உரையாற்றுகையில்
“‘ஆதி தொலைகாட்சியானது பெண் ஆளுமையின் இன்னுமொரு வெளிப்பாடு! சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி புகழாரம் சூட்டினார் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
கனடாவில் இன்று ஆரம்பிக்கப்பெற்றுள்ள ஆதி (தமிழ்) தொலைக்காட்சி பெண் ஆளுமையின் தலைமையில் ஊடகத்துறைக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் மற்றும் தமிழ்க் கலைகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று தான் எதிர்பார்ப்பதாக திரு லோகன் கணபதி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
”இதுவொரு தொலைக்காட்சியின் திறப்புவிழாவாக அல்லாமல் ஒரு கொண்டாட்டமாக பார்க்கிறேன். இந்த தொலைக்காட்சியின் ஆரம்பம் என்பது பெண் ஆளுமையின் இன்னுமொரு வெளிப்பாடாக இருக்கிறது. இந்த நிகழ்வில் இன்னும் பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். சமூகத்திற்கு நம்பிக்கையான ஊடகங்கள் இருக்க வேண்டும். கனடாவில் பெண் தலைமைத்துவத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் தொலைக்காட்சியாக இதுவாக இருக்கும் என்று நம்பகிறேன்.
பெண்களின் சிந்தனை, நோக்கம், கண்ணோட்டமும் இந்தச் சமூகத்திற்கு மிக முக்கியமானது. சமூகத்திற்கு துணிந்து உண்மைகளை சொல்லும் ஊடகங்கள் வேண்டும். அச்சமின்றி உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும். அந்தப் பணியை ஆதி தொலைக்காட்சி செய்யும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
ஆதி தொலைக்காட்சியின் உரிமையாளர் வினோ ரஞ்சித் சட்டமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் , மூத்த ஊடகவியலாளரும் , கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான, லோகன் லோகேந்திரலிங்கம் உ ட்பட அங்கு கலந்து சிறப்பித்த அனைவரும் ஆதி தொலைக்காட்சியின் உரிமையாளர் வினோ ரஞ்சித் அவர்களினால் கேடயங்கள் வழங்கிக் கௌரவித்தார்.
இந்த நிகழ்வில், யுகம் வானொலியின் அதிபர் கணபதி ரவீந்திரன் உள்ளிட்டகனடா வாழ் தமிழ்ச் சமூக ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
‘ஆதி தொலைக்காட்சியின் தலைமை நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இலங்கையின் தேசிய ஊடகங்களில் பணியாற்றிய முன்னணி நிகழ்ச்சிப் தொகுப்பாளர், சமூக சிந்தனையாளர் என பல திறமைகளைக் கொண்ட ஆர்ஜே கிருஸ்ணா உட்பட பலர் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தியும் படங்களும்:- சத்தியன் மற்றும் அலெக்ஸ்




























