கதிரோட்டம்- 06-03-2026

உலகின் எந்த நாடுகளிலும் நிறுவப்படாத ‘யுத்த திணைக்களம்’ என்னும் பெயர் கொண்ட Department of War என்னும் அனைவரையும் பயமுறுத்தும் ஒரு அரசாங்கத்தின் துறையானது அமெரிக்காவில் தற்போது தீவிரமான இயங்கிவருகின்றது என்பதும் அதன் நிர்வாகத்திற்காக பல மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதும் நாம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தெரிந்து கொண்டவையாகும்.
பொதுவாகவே பிற நாடுகளில் அரச திணைக்களங்கள் நிறுவப்பெறுவது அந்த நாட்டு மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவும் குறிப்பாக சில குறிப்பிட்ட திணைக்களங்கள் செயற்படுவது வெளிநாட்டுப் பிரஜகளின் நலன்களைக் கவனிப்பதற்காகவுமே ஆகும். அந்தந்த அரச திணைக்களங்கள் வெவ்வேறான அமைச்சுக்களின் கண்காணிப்பின் கீழ் இயங்குகின்றன என்பதும் உலகநாடுகளின் நிர்வாகமுறைகளில் வெளிப்படையாகத் தெரிகின்ற விடயமாகும் உதாரணமாக அமெரிக்காவில் உள்ள குடிவரவுத் திணைக்களம் என்பது அமெரிக்கர்களின் நலன்களையும் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வருகின்ற குடியேற்றவாசிகளின் நலன்களைகளையும் கவனிக்கின்ற அல்லத உதவிகள் வழங்குகின்ற திணைக்களம் ஆகும்.
ஆனால் அமெரிக்காவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவருகின்ற ‘யுத்த திணைக்களத்தின்’ பயங்கரமான வெளிப்பாடும் பிறநாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்ளும் அமெரிக்காவின் கொரூர முகத்தையும் காட்டி நிற்கின்ற ஒரு அரச நிறுவனம் என்றே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறு பார்த்தால். பிற நாடுகளில் அரச திணைக்களங்கள் உற்பத்திக்கும் மக்கள் நலனுக்காகவும் செயற்படுகின்ற நிலையில் அமெரிக்கா மாத்திரம் யுத்தம் செய்வதற்காகவே தனியான ஒரு திணைக்களத்தை கொண்டுள்ளது எதற்காக என்ற அச்சம் அனைவரையும் தொட்டு நிற்கின்றது. அதே உணர்வோடு தான் இவ்வாரத்தின் கதிரோட்டத்தை நாம் வடிக்கின்றோம்.
எமது அவதானிப்பில். உலகின் எந்தவொரு பெரிய நாடும் தங்கள் முதன்மை இராணுவ அதிகாரசபையாக அமைச்சரவை அந்தஸ்த்து கொண்ட “யுத்த திணைக்களத்தை” நிறுவவுமில்லை அதனை இயக்கவுமில்லை ஆனால் அமெரிக்காவில் ; 1945 க்குப் பிறகு “பாதுகாப்பு அமைச்சகம்” என்று மாற்றப்பட்ட இந்த பிரிவானது போர்கள் பற்றிய எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற 2025 ஆம் ஆண்டு தொடக்கமே, “யுத்த திணைக்களம்” என்று பெயரிடப்பெற்று, அது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கு அடுத்த நிலையில் கணிக்கப்பெற்றும் முக்கியத்துவம் வழங்கப்பெற்றும் ஜனாதிபதியின் நேரடிப் பார்வையின் கீழ் இயங்குகின்றது. இன்றைய நாட்களில் இந்த திணைக்களம் உலகின் பல நாடுகளில் அமைதியை அழித்து அப்பாவி மக்களின் உயிர்களைக் குடித்தும் அந்தந்த நாடுகளின் பொருளாதார வளத்தை நாசகாரம் செய்தும் ஒரு அரச பயங்கரவாத அமைப்பாக இயங்கிவருகின்றது என்றால். அதில் உண்மை இல்லாமல் இல்லை.
கடந்த சில நாட்களாக ஈரான் தேசத்திலும் பாலஸ்தீனத்திலும் அமெரிக்காவின் கொரூர யுத்தத் தாக்குதல் இடம்பெறுவதை முன்னின்று நடத்துவதில் தற்போதைய அமெரிக்காவின் யுத்த திணைக்களத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள Pete hegseth என்பவரின்; உரைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் அத்துடன் அவரது முகபாவங்களும் மற்றவர்களுக்கு அச்சமூட்டுபவையாக காணப்படுவது கூட ஒரு திட்டமிடப்பட்ட ‘தந்திரம்’ என்றே கருத வேண்டியுள்ளது.
இதே போன்றுதான், இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோட்டாபாய என்னும் கொடியவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, அவர் தற்போதைய அமெரிக்க யுத்த திணைக்களத்தின் செயலாளர் போன்று சந்திப்பவர்களை பயமுறுத்தும் பாணியில் உரையாடி அவர்களிடத்தில் ஒரு அச்ச உணர்வை தோற்றுவிப்பதும் இராணுவச் சிப்பாய்களிடத்தில் ‘போர் வெறியை’ ஏற்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டிருந்தது ஆகும்.
இவ்வாறான கடந்த சில நாட்களாக ஈரான் தேசத்தின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் அழிவுகளையும் பாரிய உயிர்ச் சேசத்தையும் அதன் பொருளாதாரத்தை சிதைப்பதிலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்துகின்ற அநியாயங்களுக்கு வேறு எந்த பெரிய நாடும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதையும் நாம் நேரடியாகப் பார்க்கின்றோம்.
எனினும் பிறநாடுகள் சில இந்த யுத்த செயற்பாடுகளுக்குள் இழுத்துவரப்படுகின்ற துரதிஸ்ட நிலை உருவாகியுள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அவற்றுள் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விரும்பாமலே தள்ளப்பட்டுள்ள சம்பவங்கள் பற்றி எமது வாசகர்களுக்கு நாம் குறிப்பிட்டுச் சொல்லவெண்டிய அவசியம் இல்லை.
துரதிஸ்டவசமாக இந்தியாவின் கடற்படையோடு இணைந்து பயிற்சிகளை மேற்கொண்ட ஈரானின் கடற்படையினர் அந்த பயிற்சி நிறைவுற்ற பின்னர் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களை ‘தர்மசங்கடத்திற்குள்’ தள்ளிவிட்டது என்றே நாம் கருதலாம்
ஈரானியக் கடற்படையின் ஒரு கப்பல் முதலில் அமெரிக்காவால் இலங்கைக் கடலில் தகர்க்கப்பட்டது. இதன் பின்பு இலங்கையை அண்மித்த இரண்டாவது ஈரானியக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்குள் உள் நுழைய அனுமதி கோரியது. ஈரானின் இரண்டாவது கப்பலில் இருந்த அனைவரும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளனர்
இலங்கை கடல் எல்லைக்குள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய இரண்டாவது கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
ஈரானிய கப்பலால் கோரப்பட்ட உதவியின் காரணமாகவே இலங்கை அரசால் உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியின் பிரகாரம் கப்பலில் இருந்த 208 பணியாளர்களும் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவைப்பட்ட உணவு, தண்ணீர் போன்ற உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியது என்பதும் உலகெங்கும் பரவிய செய்திகளாகிவிட்டன. இந்த விடயம் அமெரிக்காவின் யுத்த திணைக்களத்திற்கும் அதன் தலைவர் ட்ரம்ப் அவர்களின் காதுகளுக்கும் சென்றிருக்கும் என்பதை ஊகமாக நாம் கருத முடியாது. நிச்சயம் அது நிகழ்ந்திருக்கும்.
இவ்வாறான ஒரு நிலையில் இனிவரும் நாட்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அமெரிக்காவிடமிருந்து. குறிப்பாக ட்ரம்பிடமிருந்து ‘எச்சரிக்கை’ அறிவிப்பு அனுப்பிவைக்கப்படும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். அது தான் ட்ரம்ப்.
இதே போன்று ஸ்பெயின் தேசத்தின் பிரதமரிடம் அமெரிக்கா கேட்டிருந்த ஒரு வேண்டுகோளை அவர் நிராகரித்த காரணத்தால் தற்போது இருநாடுகளும் மோதிக்கொள்ளும் அல்லது அந்த சிறிய நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்க முனையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம் எனவும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம் எனவும் ஸ்பெயின் பிரதமர் பதிலடி கொடுக்கும் வகையில் “அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு பயந்து எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் “என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, ஸ்பெயினில் உள்ள கூட்டு ராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த அமெரிக்காவிற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், “பேச்சை கேட்காவிட்டால் ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்போம்” என கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், “ஈரான் போர் என்பது லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடும் ஆபத்தான ஒரு தாக்குதல். எனவே வர்த்தகப் பழிவாங்கல்களுக்கு பயந்து, உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம். இது எங்கள் கொள்கை மற்றும் நலன்களுக்கு எதிரானது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இவ்வாறாக அமெரிக்காவின் வேண்டுகோள்களை நிராகரிக்கும் பல பெரிய நாடுகள் உள்ள நிலையில் கனடாவை தன் நட்பு வட்டாரத்திற்கு கொண்டுவர முடியாது என்பதை அறிந்து கொண்ட ட்ரம்ப் எமது கனடா மீதும் அதன் பிரதமர் மீதும் கடுமையான விமர்சனங்களையும் எதிர் நடவடிக்கைகளையும் எதிர்வரும் நாட்களில் வைக்கலாம். அதனால் கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பல பாதிப்புக்களும் விளையலாம். எனவே இனிவரப்போகும் நாட்கள் அமெரிக்காவின் கோர முகம் இன்னும் மோசமாகக் கூடிய நாட்களாக இருக்கலாம் என்ற விடயத்தை கவலைக்குரிய ஒன்றாக இங்கு பதிவு செய்கின்றோம்.கனடா, இந்தியா, இலங்கை மற்றும் சில நாடுகள் எவ்வாறு அமெரிக்காவின் ‘அகோரத்தை’ தணிக்கப்போகின்றன என்பதையும் நாம் கவனிப்போம்..
























