அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அமைதி வாரியம் பாலஸ்தீனியர்களுக்கு பயனளிக்கவில்லை என்றால் அதில் இருந்து இந்தோனேசியா விலகும் என்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தோனேசிய அரசாங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரைத் தொடர்ந்து இந்தோனேசியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஆயிரக்கணக்கான துருப்புக்களை காசாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்ததற்காக முஸ்லிம் குழுக்களிடமிருந்து முன்னாள் ஜெனரலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இவரது இந்த நடவடிக்கை பெரும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. அமைதி வாரிய உறுப்பினராக இந்தோனேசியா இணைந்தால், காசாவில் நீடித்த அமைதி அடைவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக உள்ளூர் முஸ்லிம் குழுக்களின் தலைவர்களிடம் பிரபோவோ கடந்த வாரம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசாங்க தொடர்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு நன்மைகளை வழங்காவிட்டால் அல்லது இந்தோனேசியாவின் தேசிய நலன்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், வாரியத்திலிருந்து விலகுவோம் என்று அவர் மேலும் கூறினார். இதனை இஸ்லாமிய சகோதரத்துவ முன்னணியின் ஹனிஃப் அலடாஸை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை கூறியுள்ளது.
























