அனைத்துலக அணங்குகளின் ஆனந்தத் தினத்தை
அகிலம் முழுவதும் கொண்டாடும் அரிவையரே!
வினைத்திறன் மிக்க வனிதைகளாய் வாழவேண்டி
விமலியை வினயமாய் வேண்டி நிற்கி;றேன்.
பேதை மங்கை பெதும்பை மடந்தை
பேரிளம்பெண் அரிவை தெரிவை உன்பருவம்
போதைப் பொருளல்ல பெண்ணெனும் பெருமையென
புரிய வைப்பாய் புவியில் உள்ளோர்க்கே!.
பெண்ணுக்கு அறிவைப் படைத்தான் இறைவன்
பண்படாச் சிலமூடர் அறிவைக் கெடுத்தார்
விண்ணை முட்ட விவேகம் வளர்த்தே
வீரம் விளைந்த வனிதையாய் வாழ்ந்திடு
மலரென மருட்டியே மாதரை மடக்கினார்
மறக்குடி மகளென்று மறந்திடாக் காட்டு
பலருனைப் பாராட்டப் பண்பொடு வாழ்ந்து
பாரினில் உன்புகழ் பதியச் செய்வாயே!
பட்டம் படித்துப் பதவிகள் பெற்று
பாமர மக்களின் பாதுகாப் பளிப்பீர்
திட்டம் தீட்டும் திறமையை வளர்த்தே!
தீமையை ஒழிக்கும் திடத்தை வளர்ப்பீர்
பாட்டும் பரதமும் பழுதறக் கற்றே!
பாரினில் நீரும் புதுமைகள் படைப்பீர்
பாட்டுக்கோர் புலவன் பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாய்ப் பூமியில் வாழ்வீரே!
கப்பலைத் துறையில் காத்திருக்கக்; கட்டவில்லை
கப்பலாய் இருக்கக் கடப்பைக் கடந்துவா
இப்படி எத்தனைநாள் ஏமாந்து இருப்பாய்
இப்போதே கூடுவிட்டு வெளியே வந்துவிடு
பெண்ணொரு அழகிய பிடிலைப் போன்றவள்
பொறுமையாய் வாசிக்கத் தெரிய வேண்டும்
பெண்ணெனும் தெய்வத்தைப் போற்றி நிற்போம்
பெண்மையை மதித்து வாழ்த்துச் சொல்வோமே!
சாதிக்குத் துடிக்காமல் சாதிக்கத் துடியுங்கள்
சரித்திரம் உங்களை நிச்சயம் பதியும்
சாதித்துச் சென்ற சகோதரிகள் பட்டியல்
தாராளம் உண்டு தரணியில் எங்கும்
காலனிடம் கணவனைக் கவர்ந்த சாவித்திரி
கணவனுக்காய் மதுரையில் நீதிகேட்ட கண்ணகி
காலநேரம் பார்க்காமல் களமாடிய காரிகைகள்
கதைகளைக் கவனமாய்ப் படித்துப் பார்ப்பீரே!
வரலாற்றைப் படிக்காமல் வரலாறு தெரியாது
வானத்தை வில்லாய் வளைக்க வேண்டாம்
வருங்காலச் சந்ததிக்கு வழிகாட்டிச் செல்லுங்கள்
வரலாறு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லும்
வானத்து விண்மீனாய் விளங்க வேண்டாம்
வீட்டில் ஒளிவிடும் விளக்கதுவாய் இருங்கள்
வானம் பாடிபோல் வட்டமிட்டு வலம் வருவீர்
வானவரும் வந்து வணங்கி வாழ்த்துவரே!
(விமலி—-சரஸ்வதி, பார்வதி)
ஆக்கம் ……. பாவலர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453.
























