மத்திய கிழக்கு மீதான தாக்குதல் தொடரும், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது, தியாகிகளின் ரத்தத்திற்கு பழிக்கு பழி வாங்கியே தீருவோம் என்று ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜிதபா காமேனி பதவியேற்றபின் நேற்று முதல் முறையாக அறிக்கை வெளியிட்டார். இந்த சூழலில் ஓமன் தலைநகர் மஸ்கட்டின் சோஹர் நகர் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் மத்திய வெளியுறவுத்துறையின் கூடுதல் செயலாளர் அசீம் ஆர் மகாஜன் கூறுகையில், மஸ்கடில் துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. சோஹர் நகர் மீதான தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் இந்தியர்கள். 5 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமன் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ப்பில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
























