கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் சகோதரி சுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள், புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார்.
தாய்-தந்தை, குடும்பம்-உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அந்த சகோதரி, 11.3.2026 நேற்றைய தினம் தனது 79வது வயதில், நிறைவேறாக் கனவோடு நீள்துயில் சென்ற துயரமொன்று இடம்பெற்றிருக்கிறது.
சகோதரனின் விடுதலைக்காக அல்லும் பகலும் அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து, புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து சாவடைந்துள்ள அந்தச் சகோதரியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, அந்த ஈர முகத்தை ஒரு தடவை பார்க்கக்கூட முடியாத துர்ப்பாக்கியசாலியாக, சிறைக்குள் இருந்து தேம்பிக்கொண்டிருக்கும் அரசியல் கைதி சிவகுமார் போன்றோரின் இயல்பு வாழ்வுக்கு இனி மேலாவது இலங்கை அரசு மனிதநேயத்துடன் முடிவொன்றை எடுக்குமா? என சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது.
























