அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தீவிரம் காட்டி வருகிறார்.ஒருபுறம் விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மறுபுறம், ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்களை பிடித்து, அவர்களின் சொந்த நாட்டிற்கே அனுப்பி வைத்து வருகிறார். எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து தங்கி இருப்பவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தி வருகிறது அமெரிக்கா. இந்த நிலையில், அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் தாங்களாகவே வெளியேறலாம் எனவும், அவர்களுக்கு தேவையான விமான டிக்கெட்டையும் தாங்களே வழங்குகிறோம் என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. விமான டிக்கெட் மட்டுமின்றி, 2,600 அமெரிக்க டாலர்கள் ‘எக்ஸிட் போனஸ்’ ஆக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2,600 அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய ரூபாயில் சுமார் 2.4 லட்சம் ரூபாய் ஆகும். அந்த வகையில், அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருப்பவர்கள் CBP Home செயலியை பயன்படுத்தி தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, கொலம்பியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
























