294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு, 50-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்காக தேர்தல் ஆணையத்தை முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். வங்காளம் மீது குறிவைத்து செயல்படும் தேர்தல் ஆணையத்தின் போக்கு முன்னெப்போதும் இல்லாதது. எச்சரிக்கை மணியாக பார்க்க வேண்டியுள்ளது. முறையான தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்னரே, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஏ.டி.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 50-க்கும் மேலான மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பெரிய அளவிலான இந்த இடமாற்றம் என்பது நிர்வாக தேவைக்காக என்றில்லாமல், உயர்மட்ட அளவிலான அரசியல் குறுக்கீடு உள்ளது என்பதை பிரதிபலிக்கும் வகையிலேயே உள்ளது. பாகுபாடற்ற முறையில் செயல்பட வேண்டிய அரசியல் சாசன அமைப்பின் கொள்கைகளை இதுபோன்ற செயல்கள் மண்ணாக்குகின்றன. எஸ்.ஐ.ஆர். பணியில் தொய்வு, அந்த பணியில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் மரணம், துணைநிலை வாக்காளர் பட்டியல் வெளியிட காலதாமதம் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயல்களும் காணப்படுகின்றன. இந்த நிச்சயமற்ற சூழலால், வங்காள மக்களும் பாதிப்படைந்து உள்ளனர் என்று கடுமையாக கூறினார்.
























