பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்நிலையில் வீதியில் பயணம் செய்கின்றவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியதை அவதானிக்க முடிந்தது.
இனந்தெரியாத நபர்கள் இரவு சனப் புழக்கமற்ற நேரத்தில், வைத்தியசாலை கழிவுகள், வியாபார நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கு கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களை வீதியோரங்களில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இது அந்தப் பகுதியில் வழக்கமாகி விட்டது. அந்த கழிவுகளால் வீதியெங்கும் துர்நாற்றம் வீசுகின்றது.
இந்நிலையில் 14-05-2024 அன்றையதினம் அங்கு வந்த யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள் அந்த கழிவுப் பொருட்கள் மீது அவ்விடத்தில் வைத்தே தீமூட்டியுள்ளனர். இதனால் வழி மாசடைந்ததுடன் வீதியால் செல்கின்ற பயணிகள் அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். அத்துடன் புகைமண்டலம் வீதியில் பரவியதால் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாமல் வீதி விபத்து ஏற்படக்கூடிய அபாயகரமான சூழலும் அங்கு காணப்பட்டது.
வீடுகளில் நீர் தேங்கக் கூடிய சிறிய கொள்கலன்கள் இருந்தாலும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொது சுகாதார பரிசோதகர்கள், வீதியில் உள்ள இந்த கழிவுகளை கண்டும் காணாத போலே, தங்களுக்கும் அதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாதது போல செயற்படுகின்றனர். குறித்த பகுதியில் கழிவுப் பொருட்களை போடுபவர்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக இருக்கிறது.