மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட தேர்தல்களில் 66.95 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், மொத்தமுள்ள 95 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 45.10 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7 கட்டமாக மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
இதில் பதிவான வாக்கு விவரங்களையே தேர்தல் ஆணையம் தாமதமாக அறிவிப்பதாகவும், அதிலும் முரண்பாடுகளிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று (மே 16) வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
66.95% வாக்குப்பதிவு
பிரபல கிரிக்கெட் வீரரும், தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதருமான சச்சின் டெண்டுல்கர் உங்களைத் தொலைபேசியில் அழைத்து, நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.
வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம், நடப்பு தேர்தல்களின்போது, வாக்காளர்களைக் கவரவும், அவர்களை ஊக்குவிக்கவும், பல்வேறு வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024-ல் இதுவரை சுமார் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. நடப்பு பொதுத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்களில் சுமார் 45.10 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.
5, 6 மற்றும் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் அனைத்து வாக்காளர்களுக்கும் சரியான நேரத்தில் வாக்காளர் தகவல் சீட்டுகளை விநியோகிக்கவும், மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், அம்மாநிலங்களில் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோருடன் இணைந்து அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் வேண்டுகோள்
தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் கணிசமான அளவில் உற்சாகமாக பணியாற்றுவதைக் காண்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.
மேலும், அதிக வாக்குப்பதிவு, இந்திய வாக்காளர்களிடமிருந்து இந்திய ஜனநாயகத்தின் வலிமை குறித்த செய்தியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஜனநாயகத் திருவிழாவில் கலந்து கொண்டு விடுமுறை நாளாகக் கருதாமல், பெருமைக்குரிய நாளாகக் கருதி அனைத்து வாக்காளர்களும் திரளாக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.