முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் Vaughan தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார அமைப்பு (VTHCO) வணக்க
நிகழ்வை நடத்தியது. Vellore Community வளாகத்தில் நடைபெற்ற வணக்க நிகழ்வில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் , சமூக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களின் குடும்பங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 6:30 மணிக்கு VTHCO இன் தலைவர் கண்ணன் குமாரசாமி வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சமூகத்தின் ஒற்றுமை மற்றும் நினைவை அடையாளப்படுத்தும் பொது சுடரினை VTHCO இன் நிர்வாக உறுப்பினர்கள் ஏற்றி வைத்தனர். இதைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம் இசைக்கப்பட்டு கனடிய தேசியக் கொடியினை சங்கத்தின் மரியாதைக்குரிய மூத்த உறுப்பினரான ஸ்கந்த சிங்கராஜ் ஏற்றினார், அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழீழத் தேசியக் கொடியை தமிழ் சமூக செயற்பாட்டாளரும் தாயக மண்மீட்பு போரில் வீரச்சாவடைந்த இரண்டு மாவீரர்களின் சகோதரன் தக்கன் தாமோதரம் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து தாயக மண்மீட்பு போரில் வீரச் சாவடைந்த மாவீர்ர்கள், இலங்கை இந்திய படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொது மக்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மண்மீட்பு போரில் வீரச்சாவடைந்த வீரவேங்கை கப்டன் நிசாரின் சகோதரன் இந்திரலிங்கம் ரஞ்சன் ஈகை சுடரினை ஏற்றி மலர் வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வாண் தமிழ் சங்க உறுப்பினர்கள், தேசிய செயல்பாட்டாளர்கள் பொது மக்களென பலரும் மலர் வணக்கம் செலுத்தினர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் பல அரிய நிழல் படங்கள் திரையில் காட்டப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சியும், தமிழீழ அரசியல்துறை கனடாவின் பொறுப்பாளருமாகிய பிரபு இந்நிகழ்ச்சியின் முக்கிய நினைவு உரையை நிகழ்த்தினார்.
இறுதிக்கட்ட போரில் உடல் மற்றும் உணர்ச்சி வடுக்களை இன்னும் தாங்கிய பிரபு நிகழ்வின் நோக்கம் குறித்து உணர்ச்சியுடன் பேசினார்.
தாயகத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான நியாயமான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னும் கிடைக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டியதோடு மற்றும் தமிழருக்கான நீதி கிடைக்க நாம் வாழும் கனேடிய அரசினூடாக ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்வதற்கான வலுவான வேலைத்திட்டங்களில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நினைவேந்தல் என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, ஒற்றுமை மற்றும் உயிர்வாழ்வைக் குறிக்கும் அடையாள உயிர் காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உயிர் காத்த உணவாக இந்த உணவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உணவைப் பகிர்வது, பங்கேற்பாளர்களிடையே ஒற்றுமை மற்றும் நினைவூட்டலின் சக்திவாய்ந்த செயலாகும்.
VTHCO இன் செயலாளர் சுகனியா சின்னத்தம்பி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை உயிருடன் வைத்திருப்பதில் சமூகத்தின் கூட்டு முயற்சிகளை அங்கீகரித்து, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர்களின் வருகை,கடமை மற்றும் ஆதரவிற்காக நன்றியைத் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் Vaughan பண்பாட்டு அமைப்பு எப்பொழுதும் உறுதியாக நின்று இந்த அட்டூழியங்களுக்கு காரணமான இலங்கை அரசைக் கண்டிக்கின்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வு கடந்த காலத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது மற்றும் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தற்போதைய தேடலை கோடிட்டுக் காட்டியது.
புலம் பெயர் நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து, அவர்களினால் பகிரப்பட்ட வரலாற்றையும், முள்ளிவாய்க்கால் துயர சம்பவங்களை ஒருபோதும் மறக்க முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி அதன் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்தியது.
-நன்றி-
வோன் தமிழ் பண்பாட்டு அமைப்பு